தியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்

91

தியாகி திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடைபயணமொன்று  இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து  யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளது.

முன்னதாக ஊர்தியில் அமைக்கபட்டிருந்த திலீபனின் திருவுருவ படத்திற்கு, காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கபட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டதரணி சுகாஸ், உறுப்பினர்கள், முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து‌ கொண்டிருந்தனர்.

இதேவேளை நடைபயணம், வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை தாண்டி பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிஸார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸாரால் பணிக்கபட்டது. அதன்பின்னர் புதிய பேருந்து நிலையம் வரைக்கும்  ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

SHARE