தவாண்ணையை நினைவுகூரும்.. “தவா குறும்படப் போட்டி – 2019”

43

புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் பல மேற்குலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இயங்கி வந்தன. அக்காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களுக்கு இல்லாத சுதந்திரம் அந்த தொண்டு நிறுவனக்காரருக்கு இருந்தது போலவும் புலிகளுக்கும் அவர்களுக்கும் மிக நெருங்கிய உறவு இருந்தது போன்றும் ஒரு தோற்றப்பாடு இருந்தது.

புலிகளுக்கும் மேற்குலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் இடையில் இருந்த அந்த “நல்லிணக்கத்தையும் நல்லுறவையும்” நம்பித்தான்…

2003 ஆம் ஆண்டு, பிரித்தானிய நிறுவனமாகிய ScriptNet இன் இலங்கைக்கான இணைப்பாளராக இருந்த நான் அப்போது REEL PEACE என்னும் திட்டத்தின் கீழ் நாங்கள் தயாரித்த 5 தமிழ் குறுந்திரைப்படங்களுள் 3 படங்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் (மல்லாவி, முல்லைத்தீவு, முள்ளியவளைப் பிரதேசங்கள்) படப்பிடிப்பு செய்ய முடிவெடுத்தேன் – ஏனெனில் பிரிட்டிஷ் கவுன்சில் உட்பட பல மேற்குலகத் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் இயங்கிய ஒரு அசல் பிரித்தானிய நிறுவனம்தான் எங்கள் ScriptNet.

நான் எதிர்பார்த்தது போல் எங்களுக்கான படப்பிடிப்பு அனுமதியை அரசியற்துறையும், கலை பண்பாட்டுப் பிரிவும் வலு மரியாதையுடனும் உபசரிப்புடனும் தந்தார்கள் என்பது என்னமோ மெய்தான்.

ஆனால் அதுக்குப் பிறகுதான் எனக்கு வெளிக்கத் தொடங்கியது..

புலிகள் எந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் (NGOகளை) நம்புவதுமில்லை, வெள்ளைக்கார் எவரையும் வெகுளித்தன்மாக உள்ளே அனுமதிப்பதுமில்லை என்று. நான் எது எது எமக்கு பலம் என்று நினைத்தேனோ அதெல்லாம் எமக்குத் தடையாகிப் போயின. அங்கு இயங்கிக் கொண்டிருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களினது ஒவ்வொரு செயலையும் வெளிநாட்டு ஊழியகர்களின் ஒவ்வொரு அசைவையும் புலிகள் கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவதானிதுக் கொண்டும் தலைமைக்கு அறிவித்தபடியும்தான் இருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போதுதான் வெளிச்சிது.

ஒவ்வொரு படைத்துறையினதும், அவர்களது புலனாய்வுப் பிரிவினரதும் கேள்விகளுக்கு பதில் சொல்லி நான் களைச்சுப் போனன். இவ்வளவுக்கும் கேமராமன் உட்பட 10 நிதர்சனம் கலைஞர்கள் எங்கள் படப்பிடிப்பு அணியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஒவ்வொரு படைப்பிரிவும், புலனாய்வுப் பிரிவும் தத்தமது கடமையில் இருந்து ஒரு துளியும் விலகுவதாக இல்லை.

பொதுவா எங்கடை படிச்ச சனங்களுக்கு இருக்கிறதைப் போல எனக்கும் “எமது போராட்டம், எமது தேசத்தின் பாதுகாப்பு என்பவற்றை விட எண்டை காரியந்தான் பெரிசு” என்ற மனோபாவம்தான் அப்ப இருந்தது. ஏதாவது இசக்குப் பிசக்கா வாயைவிட்டு கடைசியா எல்லாத்தையும் கெடுத்துப் போடுவனோ என்று எனக்கே என்னை நினைச்சு பயமும் பிடிக்கத் தொடங்கியது.

அந்த நேரத்தில் எமக்குக் கைகொடுத்து இரவு பகலாக 10 நாட்கள் எம்முடனேயே நின்று எங்கள் படப்பிடிப்பை எந்த இடையூறும் இன்றி நடத்தி முடிக்க தன்னை அர்ப்பணித்த ஒரு போராளி, கலைஞன், இயக்குனர், தயாரிப்பாளர், “ஒளிவீச்சு” ஒளிநாடா உருவாக்கிகளில் முக்கியமானவன், களப்படப்பிடிப்பாளன், சிறந்த அமைப்பாளர், அதி சிறந்த ஆளுமை, மகத்தான மனிதன்…

“தவாண்ணா” என்று நாமெல்லாம் அழைத்த தவா!

எம்மை விசாரித்த ஒவ்வொரு படைப்பிரிவினர், புலனாய்வுத் துறையினருக்கும் தவா சொன்னது ஒன்றுதான், “இவங்களாலை ஏதாவது பிரச்சினை வந்தால் நான் பொறுப்பு எண்டு பொறுப்பாளரிட்டைச் சொல்லுங்கோ”. இவ்வளவுக்கும் எங்களோடை 15 சிங்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள். ஒருதருக்கும் தமிழ் தெரியாது. அப்பதான் முதல் முறைய தமிழரோடை வேலை செய்யிறாங்கள். முதன் முதலா புலிகளைப் பாக்கிறாங்கள். புலனாய்வுப் பிரிவைச் சமாளிக்கிறதை விட அவங்களைச் சமாளிக்கிறது இன்னொரு பெரிய பிரச்சினை. அவங்களுக்கு மொபைல் போன் ஒண்டும் வேலை செய்யேல்லை. தங்கடை கொம்பனியோடை தொடர்பில்லை. வீட்டோடை தொடர்பில்லை. நான் அவங்களைக் கடத்திக் கொண்டு வந்திட்டேனோ என்ற பயம் அவங்களுக்கு. அவர்களைச் சமாளித்து அவர்களுடன் சிங்களத்தில் கதைத்து அவர்களின் பயத்தைப் போக்கியதும் தவாதான். இன்றும் என்னைச் சந்த்திக்கும் போதெல்லாம் அந்த சிங்களத் தொழில்நுட்பக் கலைஞர்கள் தவா பற்றி நினைகூராமல் விடுவதில்லை.

அதிக அவதானிப்பு-சுருக்கமான பதில். குறைந்த கதை-அதிக செயல். கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறாமை-கண்டபடி வாக்குக் கொடுக்காமை. பொறுமை-தேவைப்படும் இடத்தில் கண்டிப்பும் கராரும்…

தவா சொன்னால் எல்லோரும் கேட்பார்கள் – அப்பிடியொரு ஆளுமையும் வசீகரமும்.

தவாவுடன் கதைக்கும் போது “தேசியத் தலைவர்” இப்பிடித்தான் இருப்பாரோ என்று எனக்குத் தோன்றும்.

அப்பிடியொரு விசுவாசமான, கண்ணியமான போராளி!

தவாவுக்கு என் வீர வணக்கங்கள்!

தவாவின் பெயரால் ஒரு குறுந்திரைப்பட விழாவை நடாத்தும் எண்ணக்கரு யாரிடம் முதலில் வந்ததோ எனக்கு தெரியாது. அந்த எண்ணக்கருவைப் பிரசவித்து அதற்கு செயல் வடிவம் கொடுத்து வருடா வருடா மிகவும் கரிசணையுடனும் கண்ணியத்துடனும் நடாத்தி வரும் பிரான்ஸ் வாழ் ஈழம் சினிமா செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

“தவா குறும்படப் போட்டி – 2019”

விண்ணப்பிதற்கான இறுதி நாள்: 15.09.2019
படங்களை அனுப்பி வைப்பதற்கான முடிவுத் திகதி. 20.10.2019

முதற் பரிசு 1500 Euro (இலங்கைப் பணம் ஏறத்தாள் 300,000)
இரண்டாம் பரிசு 1000 Euro
மூன்றாம் பரிசு 500 Euro