நீதிகோரும் நடைப்பயணத்தில் பிரித்தானியாவில் இருந்துசென்று நடக்கும் வணங்கா மண் உதயணன்

62

தமிழின நீதி கோரி ஐநா நோக்கி தமிழின உணர்வாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படும் நடைப்பயணம் இன்று 14வது நாளாக தொடர்கின்றது.சுமார் 350 கிலோ மீற்றருக்கு மேல் தமிழின நீதிகோரி தம்மை அர்ப்பணித்து உடல்வலியை பொருட்படுத்தாது இயற்கையின் அனர்த்தங்களை கடந்து தொடர்ந்து சோர்வு இல்லாமல் ஐநாவை நோக்கி தமிழின உணர்வாளர்கள் கஜன் ரஞ்சன் செல்வின் ஆகியோர் நடக்கின்றார்கள்.ஐநாவின் மனித உரிமை பேரவைக் கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் 16ம் திகதி ஐநா ஜெனிவா முருகதாசன் திடலை சென்றடையும் இந்த நடைப்பயணம் அங்கு ஐநா பிரதிநிதிகளிடம் தமிழின நீதி கோரும் மனுக்களை கையளிப்பார்கள்.

இன்றைய நடைப்பயணத்தில் நேற்றைய தினம் பிரித்தானியாவில் இருந்து பிரான்சு வந்திருந்த தமிழின உணர்வாளர் உதயணன் இன்று தமிழின நீதி கோரும் நடைப்பயணத்தில் இணைந்து தன் பங்களிப்பை வழங்கி நடந்து வருகின்றார்.உதயணன் கடந்த 2012ம் ஆண்டு பெல்ஜியத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தமிழின நீதி கோரும் நடைப்பயணத்திலும் கலந்து கொண்டு நடந்திருந்தார்.தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை உதயணன் வழங்கி வருகின்றார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்;க்காலில் சிங்களப்பேரினவாதத்தின் கொடுர இன அழிப்புக்குள் தமிழ் மக்கள் சிக்குண்டு உணவு மருந்தின்றி செத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரான்சில் மனிதாபிமான நோக்கில் புலம் பெயர் தமிழர்களால் தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் அவலப்படும் மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மருந்து உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு முள்ளிவாய்க்கால் நோக்கிப்புறப்பட்ட வணங்கா மண் என்ற கப்பலில் புறப்பட்டு தாயகத்தை நோக்கி வாழ்வா என்ற சாவா என்ற கடல் பயணத்தில் இருந்தவர்களில் உதயணனும் ஒருவராக இருக்கின்றார்.
எமது மக்களுக்காக நாம் 2009ல் மனிதாபிமான நோக்கில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வணங்கா மண் கப்பலில் முள்ளிவாய்க்கால் பயணித்த போது எம்மை இடை மறித்து கடலில் கைது செய்த சிறீலங்கா அரசு பல நாட்கள் எங்களை சிறைக்கைதிகளாக வைத்து அலைக்கழித்து திருப்பி அனுப்பபட்ட பின் இந்தியாவை நம்பியும் தமிழ் நாட்டையும் நம்பி அலைக்கழிந்து சென்றபோதும் அங்கும் கடலில் வைத்து கைது செய்யப்பட்டு சிறீலங்கா கடற்படை அலைக்கழித்ததை விட அதிகமான நாட்கள் இழுத்தடித்து எமது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலையில் கவலை அடைந்தோம் என தெரிவிக்கும் உதயணன்
செப்11 தாக்குதலில் பின் உலக நாடுகள் மேற்கொண்ட பயங்கரவாத அழிப்பு நடவடிக்கை என்ற பேரிலான நாடுகடந்த பயங்கரவாத அழிப்பு நடவடிக்கைக்குள் சிறீலங்காப் பேரினவாதத்தின் தவறான பிரச்சாரத்தால் சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் உலக நாடுகளால் எமது விடுதலைப்போராட்டமும் அழிக்கப்பட்டு மௌனிக்கப்பட்ட நிலைக்கு துரதிஸ்ட வசமாக வந்தது.ஆனாலும் கடந்த எழுபது ஆண்டுகளில் அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் தளராது கட்டியெழுப்பபட்ட எமது விடுதலைப் போராட்டம் 2009க்கு பின்னும் ஜனநாயக வழியில் தற்பொழுது நீதி கோரி போராடி வருகின்றது.என்னைப்பொறுத்தளவில் எமது மக்களுக்கான சகல போராட்டங்களிலும் எனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கின்றேன் எனவும் உதயணன் மேலும் தெரிவித்தார்.

SHARE