வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஹொங்கொங் நிர்வாகம் கண்டனம்!

46

ஹொங்கொங்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை அதன் நிர்வாகம் வன்மையாக கண்டித்துள்ளது.

அன்றிரவு பெருமளவில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய வட்டாரத்தின் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் நிலையத்தைச் சேதப்படுத்திய அவர்கள், சில இடங்களில் தீ மூட்டினர். இதனால் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பொதுமக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக ஹொங்கொங் நிர்வாக பேச்சாளர் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதனிடையே, ஹொங்கொங் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என்று சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.

தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முன்தினம் ஹொங்கொங்கில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் மனுக் கொடுத்தனர். இந்தநிலையில், சீனா மீண்டும் அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த நூற்றாண்டில் பிரித்தானியாவின் அதிகாரத்தின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே ஹொங்கொங்கின் இந்த நிலைமை உள்நாட்டு விவகாரம் என சீனா குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, ஹொங்கொங்கிற்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்புநோக்க, கடந்த மாதம் 40 சதவீதம் குறைந்துள்ளது.

வருடாந்த அடிப்படையில், கடந்த 2003, மே மாதம் ஏற்பட்ட ‘சார்ஸ்’ நோய்த்தொற்றுக்குப் பிறகு இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE