காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்

61

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது.

இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், ‘காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு காணாலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் யாழில் ஒன்று கூடிய நாம் இதே போன்று யாழிலும் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்காக யாழில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அந்த அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை.

இந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி எதிர்வரும் 14 யாழில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழிலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளனர்

SHARE