இலங்கை நிர்வாக சேவைகள் இரு தினங்களுக்கு முடக்கம்!

85

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை என அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக நிர்வாக செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்க அதிபர் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆணைக்குழுக்களின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மாநகர சபையில் சேவையாற்றும் தமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு அமைச்சர் வஜிர அமையவர்தனவினால் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த செய்தியில் ஊழல் மோசடிகளில் நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பெயர் குறிப்பிடப்படாமல் தெரிவித்திருந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்கப்படுகிறது.

இலங்கை நிர்வாக சேவை உறுப்பினர்களின் இரு நாட்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தினால் அகில இலங்கை ரீதியாகவும் நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன.

இதனால் பொதுமக்கள் தங்களின் அலுவல்களை நிறைவு செய்ய முடியாது அலுவலகங்களுக்கு வருகை தந்து திரும்பிச் சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்பட்டதுடன் மக்கள் சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE