தமிழ்மக்களின் இன்றைய துயர் நிலைக்கு தமிழ்த்தலைவர்களே காரணம் – சி.வி.வி!

56

ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற சிங்களத் தலைவர்கள் அன்பைப் போதிக்கும் பெளத்தத்தின் வழி தொடர்பவர்களாக, உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுத மேந்த நேரிட்டிருக்காது என்று தம்பி பிரபாகரன் கூறியிருந்தார். அதேபோல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் அதிக கரிசனைகாட்டாது அரச ஒத்தோடிகளாக விலைபோனமையே தமிழர்களின் இன்றைய துயர் நிலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்று கூறலாம் இவ்வாறு தமிழ் மக்கள் கூட் டணியின் செயலாளர் நாயகமும்முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில் –

எமது கட்சியின் அழைப்பை ஏற்று இங்கு வருகைதந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றேன்.

காலங்காலமாக ஆட்சிப்பீடமேறிய இலங்கை அரசுகளால் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக் கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வந்திருக்கின்றனர். அதன் எதிர்க்கோணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்கின்ற வரலாற்று உண்மையை காலம் நன்கு பதிந்து வைத்திருக்கின்றது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற சிங்களத் தலைவர்கள் அன்பைப் போதிக்கும் பெளத்தத்தின் வழி தொடர்பவர்களாக, உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதமேந்த நேரிட்டிருக்காது என்று தம்பி பிரபாகரன் கூறியிருந்தார்.

அதேபோல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்அதிக கரிசனை காட்டாது அரச ஒத்தோடிகளாக விலை போனமையே தமிழர்களின் இன்றைய துயர் நிலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்று கூறலாம்.
தீதும் நன்றும் பிறர்தரவாரா என்ற புறநானூற்றுக் கூற்றுக்கு இலக்கணமாக எம்மவர் ஆகிவிட்டுள்ளமை நெஞ்சுக்கு வலியூட்டுகின்றது.

பிறந்த தாய் நாட்டிற்காகவும் உங்கள் மக்களுக்காகவும் இளமைக் காலங்களைத் துறந்து உங்களுடைய உயிர் உடல் உடமை அனைத்தையும் மக்களுக்காக அர்ப்பணிப்பதாகஉறுதிபூண்டு கடந்த காலங்களில் நீங்கள் ஆற்றிய சேவைகள் காலத்தின் கணிப்பில் மக்கள்மனதில் உயர் நிலையில் பதியப்பட்டிருக்கின்றன.

நீங்கள் கோலோச்சிய காலத்தில் போர் இடர்நிலைகளுக்குள்ளும் எமது மக்கள் சுதந்திரமாகவும் கலை, கலாசார, பண்பாட்டுக்கட்டுக்கோப்போடும் வலம் வந்ததை அதிசயத்துடன் நினைத்துப் பார்க்கின்றேன். எமது கல்விநிலைஅன்றிலிருந்து சிறுகச் சிறுகச் சறுகிக் கீழ்மட்டத்திற்குத் தற்போதுவந்துள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக நடாத்தப்பட்ட ஆயுதவழிப் பயணமானது 2009ஆம் ஆண்டு மேமாதத்துடன் மெளனிக்கப்பட்டது.

எனவே இன்று தமிழ் மக்கள் ஜனநாயக அரசியல் வழிப்பாதையையே முழுமையாகச் சார்ந்தும் நம்பியும் பயணிக்க வேண்டிய நிலைக்குதள்ளப் பட்டிருக்கின்றனர்.

ஒரு மாபெரும் இனவழிப் புக்குள்ளாக்கப்பட்ட எம் இனம் அந்த இன அழிப்பினை சர்வதேசத்தின் மனச்சாட்சிகளின் முன் முன்னிறுத்தி இனவழிப்பிற்கான நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியப்பாடுகள் அமைந்திருந்தன.

இனவழிப்பாளர்களைச் சர்வதேச நீதிமன்றின் முன் முன்னிறுத்தி சர்வதேச வழிமுறையினூடான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியவாய்ப்புக்கள் அமைந்திருந்தன. எமது மக்களால் பெரிதும் நம்பப்பட்ட அரசியல் தலைமை கள் பொறுப்புணர்ந்து செயற்படாமையின் விளைவுகளை இனவழிப்பின் பத்தாண்டுகள் கடந்தும் அனுபவித்து வருகின்ற துயர்நிலையைக் கொண்டவர்களாக நாம் இன்று வாழ்ந்து வருகின்றோம்.
இன்று முற்று முழுதாகச் சமூகக் கட்டமைப்புக்கள் சிதைவடைந்து போயுள்ள எமது இனத்தின் துயர் நிலையை மாற்றிஎழுதக் கூடிய சக்தி வாய்ந்தவர்களுள் ஒரு குழுமமாகவே நான் உங்களைப் பார்க்கின்றேன்.

இன்று ஒரு இக்கட்டான அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்கி உள்ள எமது இனத்தின் மீட்சிக்காக, ஜனநாயக அரசியல் வழி நின்று பயணப்பட உங்களின் சேவையை நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.

இது எனது அவா மட்டுமல்ல. ஒட்டு மொத்த இனத்தினதும் எதிர்பார்ப்பாகவே அமைந்திருக்கின்றது என்பது எனது கருத்து.

அன்புக்குரிய எமது முன்னாள் போராளிகளே!

நாம் இன்று எமக்கான ஒரு கொள்கைப் பற்றுறுதியுடைய அரசியல் கட்டமைப்பொன்றை ஒருமித்துக் கட்டியயழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேவையற்ற விமர்சனங்களையும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும் களைந்து ஒன்றாகப் பயணிக்க வேண்டிய நம்பிக்கை மிகுந்த சந்திப்பாகவே இச்சந்திப்பைக் கருதுகின்றேன்.

அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகப் பயணிக்கின்றபோது தலைமையோடு சேர்ந்து கூடப் பயணிப் பவர்களும் அதே கொள்கைப்பற்றுறுதியோடு பயணிக்கும்போது தான் அடையவேண்டிய இலக்குகளை நாம் அடைந்துவிட முடியும்.
எனவேதான் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பயணத்தில் பங்குபற்றியிருந்த உங்கள் அனைவரினதும் பங்களிப்பினையும் ஆலோசனைகளையும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் எமது கட்சிக்கு வழங்குமாறு உங்கள் அனைவரிடமும் விநயமுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எச் சந்தர்ப்பத்திலும் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளாத கொள்கைத் தெளிவுடன் பயணித்த உங்களின் வருகை எமது கட்சிக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த எமது இனத்தின் மீட்சிக்கும் வழிகோலும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இந்த வரலாற்று அழைப்பினை உதாசீனம் செய்துவிடமாட்டீர்கள் என நான் நம்புகின்றேன்.

வெறுமனே விமர்சனங்கள் மட்டும் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை. அரைச்ச மாவைப் போல்மீண்டும் மீண்டும் தாயக தேசம் என்ற சொற்களை மட்டும் உச்சரிப்பதால் எமக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை. உளமார்ந்து
செயலாற்றும் திறன்மிக்க செயல் களே வரலாற்றைப் படைக்கும் தீர்வாக அமைந்துவிடமுடியும். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நீங்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்கள் வாழ்வாதாரத்துக்காக தொழில்களைப் பெற்றுக்கொள்வதில் நீங்கள் எதிர்நோக்கும் சவால்களை நான் நன்கு அறிவேன்.

முன்னாள் பெண் போராளிகள் பலர் என்னை சந்தித்து சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக்கூறி இருக்கின்றார்கள்.
மக்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் உயிர் மூச்சாக கொண்டு நீங்கள் பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்தபின்னர் யதார்த்த நிலைகளை ஏற்றுக்கொண்டு நற்பிரஜைகளாகவும் முன்மாதிரியாகவும் நீங்கள் வாழ்ந்து வருவது கண்கூடு.

எந்தவிதமான இன்னல்களை எதிர்நோக்கினாலும் ஒருபோதும் உங்கள் நம்பிக்கையை தளரவிடாதீர்கள். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் நிச்சயம் பிறக்கும். நான் முதலைமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் நிதியத்தை அமைத்து உங்களுக்கான சில செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சித்தேன்.
ஆனால், அந்த முயற்சிகள் கைகூடவில்லை.தொண்டு நிறுவனங்களுக்கு ஊடாக உங்கள் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்றுஆராய்ந்து சில நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன். அத்துடன் நேற்றைய தினந்தான் தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்புபதிவுசெய்யப்பட்டு ஆவணம் கைக்குக்கிடைத்தது.

உங்கள் சார்பான செயற்றிட்டங்களைத் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவற்றை நடைறைப்படுத்ததமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்புஆவனசெய்யும் என்று கூறிவைக்கின்றேன்.
எனது அன்பார்ந்த இளையோர்களே எமது இன்றைய சந்திப்பு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகச் சமகாலத்தில் சிலர் என்மீது சேறுபூச முனைந்து வருகின்றார்கள். நான் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப காலங்களில் எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முழுமையாக அறிந்திராதவனாக இருந்திருந்தேன் என்பதை நான் பல தடவை ஒப்புக் கொண்டிருக்கின்றேன்.
மக்களோடு மக்களாக நான் யாழ்ப்பாணம் வந்துவாழத் தொடங்கியதன் பின்னரே எம்மக்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளையும் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தின் நீதியையும் நன்கு உணரத் தொடங்கினேன்.

எனது மக்கள் பணிக்கு இடையூறாக எனது கடந்தகாலப் பேச்சுக்களை வைத்து சிலர் களங்கம் ஏற்படுத்த முனைகின்றார்கள்.

பின்னணியில் இருந்து வாக்கியங்களாக பிரித்தெடுத்து வசை பாட எத்தனித்துள்ளார்கள்.

கடந்த காலங்கள் நிகழ்காலப்பயணங்களிற்கு விலங்கிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
என் மீது களங்கம் ஏற்படுத்த முயலும் குறிப்பிட்ட தரப்பினர் கடந்த காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என்னோடு சேர்ந்து பயணித்திருக்கின்றார்கள் என்பதனை அனைவரும் அறிவீர்கள்.
ஆயினும் தற்போது என் மீது குற்றஞ்சாட்டப்படும் விடயங்களை அந்தந்தக் காலத்தில் சுட்டிக்காட்டாமல் நாம் ஒரு தனித்த கட்சி யாக மக்கள் பணியாற்ற விளைகின்ற போது சுட்டிக்காட்டப்படுவதன் அரசியல் உள்நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் நான் வடமாகாண முதலமைச்சராக இருந்தபோது என்னை அரசியலுக்குகொண்டு வந்தவர்களாலேயே எனது மக்களுக்கான பணியை ஆற்றமுடியாதவனாக் கப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் பின்னர், நான் சார்ந்திருந்த கட்சியினராலேயே நிர்வாகக் கட்டமைப்புக்குள் விரிசல்கள் ஏற்படுத்தப்பட்டு என்னை ஒரு நிர்வாகக் குறைபாடுள்ளவனாகக் காட்ட மேற்கொண்ட முயற்சிகளையும் நீங்கள் அறிவீர்கள்.

வரையறுக்கப்பட்ட மிகச்சொற்ப அதிகாரங்களை மட்டுமேஉடைய வடமாகாண சபையின் முதல்வராக மத்தியைக் கண்டு பயப்படாமல், பல்லிளிக்காமல் என்னால் இயன்றளவு பணிகளை ஆற்றியிருக்கின்றேன்.

குறிப்பாக முதலமைச்சர் நிதியம் ஒன்றினை உருவாக்கி எமது முன்னாள் போராளிகளினதும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களதும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் எனது சிந்தனையை அரச தரப்பும் அன்று நான் வகிபாகம் வகித்திருந்த கட்சியினரும் சேர்ந்து அது உருவாவதைத் தடுத்தமை நான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியின் அதிகாரங்களை உங்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

SHARE