காணி விடுவிப்பு குறித்து ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

50

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பது  தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த கலந்துரையாடலில் பல்வேறுப்பட்ட விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது காணி விடுவிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறைகளுக்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

SHARE