என்னை நீக்க நினைப்பது ஆட்சிக் கவிழ்ப்புக்கு சமம் – ட்ரம்ப்

58

ஜனநாயக கட்சியினர் தன்னை பதவியில் இருந்து நீக்க நினைப்பது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக ட்ரம்பை பதவியில் இருந்து நிக்கும் விசாரணையை ஜனநாயகக் கட்சி முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியினர் தன்னை பதவியில் இருந்து நீக்க நினைப்பது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“ஒவ்வொரு நாளும் நான் மேலும் மேலும் கற்றுக் கொள்ளும்போது, இது பதவி நீக்கும் முயற்சியல்ல ஆட்சியை கவிழ்க்க முயலும் சதி என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் நோக்கம் கொண்டது. அது மட்டும் இன்றி அவர்களின் வாக்கு, சுதந்திரங்கள், மதம், இராணுவம், எல்லைச் சுவர் மற்றும் அமெரிக்காவின் குடிமகனாக இருக்க கடவுள் கொடுத்த உரிமைகள் ஆகியவற்றையும் பறிப்பதற்கான முயற்சியாக இது உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உக்ரைனில் பணியாற்றிய அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ட்ரம்ப் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ட்ரம்பை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் (பிரதிநிதிகள் சபை) ஜனநாயக கட்சி தொடங்கியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் ட்ரம்ப் ஜனநாயக கட்சியினரின் இந்த முயற்சி வேடிக்கையானது என்றும் வரலாற்று ஊழல் என்றும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE