தமிழர்களின் பந்தயக் குதிரை எது- ஜனாதிபதி தேர்தல்-சே.பி ஈழம்

352

ஓடுகின்ற குதிரையில் பந்தயத்தில் பணம் கட்டவே அனைவரும் விரும்புவார்கள்.ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஓடுகின்ற குதிரைகளை இனங் காண்பதில் எதிர்வரும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் தமிழர்கள் தடுமாறிக்கொண்டே இருக்கின்றார்கள்.சிறீலங்காவில் அதன் சிங்களவர்களின் பெரும்பான்மை என்பவற்றை பொறுத்த மட்டில் கடவுளே வந்து தமிழர் தரப்பில் வேட்பாளராக நின்றாலும் ஜனாதிபதி பந்தயத்தில் வெல்லப்போவது ஒரு சிங்களவரே.தமிழர்கள் வெல்கின்ற ஆச்சரியம் நிகழவேண்டுமாயின் சிங்களவர்களும் ஒரு பேராச்சிரியத்தை நிகழ்;த்த வேண்டும்.அதாவது சிங்களப் பெரும்பான்மை கட்சியொன்றில் தமிழர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும்.இதற்கு ஐக்கிய தேசிய கட்சியோ சிறீலங்கா சுதந்திர கட்சியோ ஜேவிபியோ தற்பொழுது மகிந்தவின் பொது ஜன பெரமுனவோ தயாராயிருந்ததா அல்லது இனியும் தயாராய் இருக்குமா என்றால் அது இல்லையென்பதே முடிவான பதில்.

இரண்டாவது நிலையில் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் முசுலிம்கள் அப்பால் தெற்கிலும் மலையகத்திலும் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை சமுகங்கள் தமது தேசிய அடையாளத்தை உணர்ந்து ஒருமித்த நிலையெடுத்து இதுவரையில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதி ஆகாவிட்டாலும் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த பலத்தை காட்டிய வரலாறு இல்லை.மாறாக கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிரிந்து கடந்த எழுபது ஆண்டுகளில் சிறீலங்கா ஜனாபதி தேர்தலில் சிங்களப் பெரும்பான்மை கட்சியொன்றுக்கு வாக்களித்து வந்துள்ளார்கள்.அது இப்பொழுதும் மாற்றமுடியாத அரசியல் பண்பாடு பழக்கதோசமாகவும் மாறிவிட்டது.இதை சிங்களப்பெரும்பான்மை கட்சிகள் அதாவது பேரினவாத கட்சிகள் தமக்கு சாதகமான சூழலாக கருதிக்கொண்டிருப்பதும் அதை தக்கவைப்பதும் அவர்களுக்கு தேவையாக இருக்கின்றது.

சிறீலங்காவின் சுதந்திரத்துக்கு பின் வந்த முப்பது ஆண்டுகளில் சிங்கள பேரினவாதத்தின் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டை உணர்ந்தும் அதை எதிர்த்தும் அதற்காக சிங்களவர்களோடு ஒப்பந்தங்கள் பேச்சுவாத்தைகளை செய்தும் பின் அவை கிழித்தெறியப்பட்டும் தமிழரை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக சாத்வீக வழியில் போராடியும் வந்த நிலையில் 1970களில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பிரிந்திருந்த தமிழர் தரப்பெல்லாம் ஒன்றாகி ஒத்த கட்சி நிலைப்பாடு ஏற்பட்ட சூழல் வரலாற்றில் இருந்தது.அந்த வரலாறுதான் தமிழ் அரசே தமிழருக்கு முடிவான ஒரு தீர்வென வரலாற்றையும் படைத்து பின் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களை வீரம்செறிந்து போராடவும் தூண்டியது.ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒரு சிறுபான்மை சமுகங்களுக்கான ஒத்த நிலைப்பாடு வந்தபோதும் இதில் கடைசி நேரத்தில் மலையகத்தலைமைத்துவம் விலகிக்கொண்டது.வடக்கு கிழக்கு முசுலிம்கள் பங்கெடுக்கவில்லை.இதன் பிறகு வந்த முப்பது ஆண்டுகளில் பிறகு ஆயுதப்போராட்ட இயக்கங்கள் சிறீலங்காவின் தேர்தல்களை புறக்கணித்து தமிழர்களுக்கான பலத்தை பேரம் பேசும் சக்தியை ஆயுதப்போராட்ட வெற்றிகள் மூலம் ஏற்படுத்தி சிறிலங்கா அரச தரப்போடு பேச விளைந்தது.ஆயுதப்போராட்டத்தில் முசுலிம் மாவீரர்களின் பங்கும் மகத்தானது.இது திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் விடுதலைப்புலிகள்-சிறீலங்கா அரசு ஒஸ்லோ பேச்சுவார்த்தை என 2000மாம் ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

70களுக்குப் பிறகு மிக நீண்ட ஆயுதப்போராட்டங்கள் அதற்குள்ளும் பிரிவினைகள் மோதல்கள் என்பவற்றுக்கு பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்த நிலையில் மீண்டும் அனைத்து தமிழ் கட்சிகளையும் முசுலிம் கட்சிகளையும் மலையக கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு ஒத்த நிலைப்பாட்டை ஏற்படுத்தி சிறுபான்மை சமுகங்களை ஒரு பெரும் பலம்வாய்ந்த பேரம் பேசும் சக்தியாக சிறீலங்கா பாராளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்டு மாற்றவும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை தீர்மானிக்கும் தரப்பாகவும் உருவாக்க விடுதலைப்புலிகள் முயன்று வெற்றியும் கண்டனர்.அந்த வெற்றி என்பது சிறுபான்மை சமுகத்தின் பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் ஒத்த நிலைப்பாட்டுடன் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதாய் மட்டும் இருந்தது.விடுதலைப்புலிகளின் காலத்தில் ஒரு சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்து ஒரு சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதிஆக்கும் நிலையும் இருந்தது.இவை அனைத்தும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சக்தியாக பேச்சுவார்த்தைகள் தோல்வியென்றால் மீண்டும் ஆயுதவழியில் விடுதலையை வென்றெடுக்கப்பயணிக்கலாம் என்ற புலிகளின் பலம் இருந்த சந்தர்ப்பத்தில் நடந்தவை.ஆனால் துரதிஸ்ட வசமாக அந்த நிலைப்பாடுகளை முள்ளிவாய்க்கால் தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது.

ஆனால் தமிழர்களிடம் வடக்கு கிழக்கு மலையக சமுகத்திடம் 2009க்குப் பின்னும் பேரம் பேசும் சக்தியையும் சிறீலங்காவின் மத்தியில் அரசாங்கத்தை உருவாக்கும் பலத்தையும் உருவாக்கும் வாக்குப்பலம் இருந்தது.இதையே போர் முடிந்தபின் வந்த ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தி வாக்களிக்கும் அரசியல் தந்திரத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களும் மலையக முசுலிம் சமுகத்தின் ஒரு பகுதியும் கலந்திருந்தது.ஆனால் துரதிஸ்டவசமாக அப்போது போரின் நாயகர்களாக சிங்கள தேசத்தில் இருந்த ராஜபக்சக்களால் பொன்சேகாவின் வெற்றி சர்வாதிகாரத்தின் மூலம் மறுதலிக்கப்பட்டது.இதன் பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் வடக்கு கிழக்கு தமிழர்கள் உட்பட்ட முசுலிம்கள் மலையக மக்களின் கட்சிகள் மகிந்தவுடனும் ஐக்கிய தேசியக்கட்சியுடனும் பிரிந்து கூட்டுச்சேர்ந்து கொண்டு சிறுபான்மை சமுகத்தின் பேரம் பேசும் பலம் சிதைந்து பாராளுமன்றத்தில் உலக்கை உளிப்பிடியான கதையாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவோடு பேசிப்பார்த்தது பலனில்லை.

சிறீலங்காவின் உள்ளகத்தில் மகிந்தராஜ பக்சவின் இரும்பு திரைக்குள் இவ்வாறான நிலைப்பாடு இருந்த சந்தரப்பத்தில் சர்வதேச பிராந்திய வல்லாண்மைகள் தமது நலனகளுக்காக ஐநாவில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போரத்; தர்ம மீறல்களை வைத்து எடுத்த மனித உரிமைப் பேரவை மூலமான சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்களை ஈழத்தமிழர்கள் தரப்பும் சிறீலங்காவில் காணப்படுகின்ற சிறுபான்மை சமுகங்களின் பிரதிநிதிகளும் தமது தேசிய அடையாளங்களை எதிர்காலத்தில் காப்பாற்ற ஒற்றுமையோடு ஐநா மனித உரிமைப்பேரவையை எதிர்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை.இன்னொரு புறத்தில் 2015வரை சர்வதேச விசாரணை சமஸ்டி என தீர்வுகளை வலியுறுத்தி வந்த தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் அதிக பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பும் 2015ல் ரணில்-மைத்திரி என ஒரு கூட்டில் உருவான நல்லாட்சி ஜனாதிபதி பொது வேட்பாளர் என்ற நிலைக்குள் வீழ்ந்து சகலதும் மெனனித்துப்போனபின் தமிழர்களின் எந்தவித கோரிக்கைளும் உள்ளகத்திலும் ஐநாவிலும் நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்ட கடந்த நான்கு வருடங்களின் பின் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது மீண்டும் இந்த பத்தியின் ஆரம்பத்தில் கூறிய ஓடுகின்ற குதிரையில் பணத்தை கட்டுவதே புத்திசாலியின் தந்திரம்.இப்போது ஓடுகின்ற குதிரை எதுவென்று தீர்மானிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இன்னமும் பிரிந்து பிரிந்து தடுமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.ஓடுகின்ற குதிரைகள் தமிழர்கள் தரப்பில் இருந்தாலும் அதில் பணம் கட்டி ஓடவைத்தாலும் சிறீலங்காவின் ஜனாதிபதி ஆகமுடியாது என்பது முடிந்த முடிபு.தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் ஒரு சிங்களவர் ஜனாதிபதியாய் வருவது உறுதி.எனவே தமிழர்கள் ஒட்டுமொத்தமாய் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட சிங்கள ஜனாதிபதியால் தமிழர்களுக்கு கிடைத்தது என்ன.ஒட்டு மொத்த தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளிக்காமல் புறக்கணித்து தமிழர்களுக்கு கிடைத்தது என்ன. முடிவு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.
சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலிலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலிலோ தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலமும் வாக்காளிக்காமல் விடுவதன் மூலமும் சிங்களதரப்பு வேட்பாளர்களின் வெற்றியை அரசாங்கங்களின் இருப்பை தீர்மானிக்கலாம் என்பது உண்மையாக இருந்தாலும்.அதனால் கிடைத்தவை இதுவரை எதுவாகவும் இருந்ததில்லை.எதுவும் கிடைக்காதபோது மாற்றுவழியாக 2009க்கு முன் தமிழர்களிடம் ஆயுதப்போராட்ட வழிப்பலம் இருந்தது இப்போது அது இல்லை.எனவே ஆயுதப்போராட்ட காலத்தை அடிப்படையாக வைத்தும் சிறீலங்கா தேர்தல்கள் தொடர்பான தீர்மானத்தை இப்போது எடுக்க முடியாது.

ஆக வரும் ஜனாதிபதி தேரத்தில் தமிழர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்.என்ன செய்யவேண்டும் என்பதாய் முடிவெடுத்து ரெலாவை சேர்ந்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது கட்டுப்பணம் செலுத்தி உள்ளார்.இன்னொரு புறத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை பிறகு யோசித்து சொல்கிறேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தமிழ் சமுக சிவில் பிரதிநிதிகளுக்கு சொல்லி அனுப்பி இருக்கிறார்.இன்னும் இரண்டு கட்சிகளின் தலைவர்களான விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் இன்னமும் உத்தியோகபூர்வமாக முடிவுகளை அறிவிக்கவில்லை.இன்னொரு புறத்தில் யாழ் பல்கலைக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துத் தமிழ் கட்சிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.முதலில் நாம் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேரம்பேசவேண்டும் கோரிக்கைளுக்கு இணங்காவிட்டால் அடுத்து எமது தரப்பு முடிவை எடுப்போம் என்ற அளவில் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

தமிழர் தரப்பில் இத்தேர்தலில் ஒற்றுமையாக அதாவது கட்சி வேறுபாடுகள் கடந்து ஒரு குடையின் கீழ் சில முடிவுகளை எடுக்கலாம்.

முதலாவது சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளரை புறக்கணித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் முசுலிம்கள் மலையக தமிழர்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வடக்கு கிழக்கு இணைப்பை வலியுத்தியும் அதிகார அலகுகளை வலியுறுத்தியும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு அடிப்படையிலான செய்தியை சர்வதேச சமுகத்துக்கு சிங்களப்பெரும்பான்மை சமுகத்துக்கும் சொல்லலாம்.அக்கருத்து வலுவாய் இருக்கவேண்டுமாயின் கிழக்கு மாகாணத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அக்கருத்துக்கு சார்பாய் வாக்களிக்கவேண்டும்.அதே போலவே வடக்கு மக்களும்.

இரண்டாவது ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்காமல் சிங்களப்பெரும்பான்மையால் நிறுத்தப்பட்டுள்ள ஓடும் குதிரைகளில் ஏதோ ஒரு குதிரையில் பணத்தை கட்டி பந்தயத்தில் வெல்ல வேண்டும் அதற்கான தீர்மானமும் தமிழர் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் முடிவெடுத்தே செய்யவேண்டும்.செய்தால் அதே ஒற்றுமை பலத்துடன் அடுத்து வரும் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்தை தீர்மானித்து வலுவான பேரம் பேசும் சக்தியுடன் சர்வதேசத்தையும் கைப்பிடித்துக்கொண்டு தமிழர்களின் அபிலாசைகளுக்கான பயணத்தில் ஏதோ சில படிகள் முன்னகரலாம்.

மூன்றாவது ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தியுள்ள சஜித்தும் போட்டபாயமும் தமிழர்களின் வாக்குகள் இல்லாமலே வெல்லும் நிலையான பலமான குதிரைகளே.ரணில் கோட்டபாய என்பதற்கும் கோட்டபாய சஜித் என்பதற்கும் இரண்டுக்கும் சிங்கள மக்கள் இரண்டுவகையான தீர்மானங்களையே எடுப்பார்கள்.சிங்களவர்கள் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாக பிரிந்து மூன்றாக பிரிந்து தீர்மானங்களை எடுக்கலாம் ஆனால் தமிழர்களின் கட்சிகள் நான்காக ஐந்தாக பிரிந்திருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவெடுப்பதே சிறப்பு

ஆனால் தமிழ் மக்களை பொறுத்த அளவில் மனதுக்குள் இப்போது ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பார்கள் ஆனால் சொல்லப்போவதில்லை.அதை கண்டறிந்து அதற்கு ஏற்ப தீர்மானத்தை எடுப்பவர்களே ராஜதந்திரிகள்.

SHARE