சிங்கக்கொடி பற்றி 1951ல் தந்தை செல்வா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

376

தேசியக்கொடி
பாராளுமன்றம்: நாள் 01.03.1951

இந்த நாட்டுத் தேசியக்கொடியினது வடிவம் இதற்கென நியமிக்கப்பட்ட விசேடக் குழுவின் பரிந்துரையில் உள்ளபடி அமைவதை இச்சபை ஏற்றுக்கொள்கிறது.

-முன் வைத்தவர் அன்றைய பிரதமர் மாண்புமிகு
டி.எஸ். சேனநாயக்க. இவ்வேளை எழுந்த தந்தை செல்வா (அன்று காங்கேசன்துறைப் பிரதிநிதி திரு. சா. ஜே. வே. செல்வநாயகம்) அவர்கள் ஆற்றிய உரை:

சபாநாயகர் அவர்களே,

இந்தத் தேசியக்கொடி சார்பான கருத்துக்கள் இச்சபையில் 1948ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட போது அக்கருத்துக்களை நான் எதிர்த்தேன். ஒரு நாட்டின் தேசியக் கொடி என்பது குறுகிய வலுக்கட்டாய வடிவத்திற்கு அப்பாற்பட்டதாகப் பரந்துயர்ந்த நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். தேசத்தின் இலட்சியத்தையும் இதய மேம்பாட்டையும் இக் கொடி எடுத்துக்காட்டுவதாக வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன்.

ஒரு தேசத்தின் தேசியக் கொடி என்பது அங்குள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தினைக் குறிக்கும் கொடியாகக் குறுகிவிடக் கூடாது என்பதை நான் அன்று இச்சபையிற் தெரிவித்தேன். இங்கு போல் பல இன மக்கள் வாழும் நாடுகளில் தேசியக் கொடியை நிர்ணயிக்கும்போது அந்தந்த இன மக்களின் விருப்பும் இதய உணர்வுகளும் தேசியக் கொடியில் இடம் பெறும் வகையிலேயே இயன்றளவு இக்கொடி உருவாக்கப்பட்டு உயர்ந்து நிற்பதை நான் வலியுறுத்திக் கூறினேன்.

உலகிலே அவ்வித நல்ல விளக்கங்கள் தோன்றிவரும் காலம் இப்போது எழுந்து நிற்கிறது என்பதை எடுத்துக்காட்டி, பிரித்தானிய நாட்டின் யூனியன் யாக் கொடியும் பிரான்சு, இந்தியா ஆகிய நாடுகளின் தேசியக் கொடியும் எவ்வாறு அங்குள்ள மக்களின் உணர்வுக்கு இடமளித் துள்ளது என்பதை அன்று எடுத்துக் காட்டினேன்.

இந்த அளவிற் சிறிய இலங்கையும் அந்த உயரிய மட்டத்திற்கு இலட்சிய ரீதியில் எழுந்திட வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு எதிர்மாறாக இன்று இந்தத் தேசியக்கொடி விடயத்தில் நாம் முரண்டுபட்டு நிற்பதன் காரணம் எங்கள் அடிப்படை நோக்கே பிழையாக இருப்பதுதான். இனத்தின் பிரதிநிதித்துவ உரிமைகளுக்குப் பதிலாக மதிப்புக்குரிய தலைமை  அமைச்சர் அவர்கள் இங்கு சலுகைகள் பற்றியும் இந்தச் சலுகைகள் மூலம் நாங்கள் ஏற்க வேண்டிய உடன்பாடு பற்றியும் பேசுகிறார்.

இவ்விதப் பிழையான முடிவுக்கு இவர் வருவதன் காரணம், இவர் இன்றையக் காலத்துக்குரிய இலட்சிய விளக்கங்களையோ உயரிய நோக்கங்களையோ தமது குறிக்கோளாகக் கொள்ளாததுதான்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைமுறையிலிருந்து இன்று வழக்கிழந்து நிற்கும் கொள்கைகளுக்கு இவர் இலக்காகி நிற்கிறார். இதனால் ஒரு தனி இனத்தின் கொடியை இந்த முழு நாட்டின் தேசியக் கொடியாக்கும் தவறான செயலில் இவர் இறங்க விரும்புகிறார். இதனை ஓர் அற்ப திருத்தத்துடன் வழிமொழியப் போகும் கௌரவ அங்கத்தவரும் வேறெதையும் செய்யப் போவதில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களின் கொடியாகியிருந்த அதே (சிங்கக்) கொடியை தேசியக் கொடியாக்கும் பிரதமரின் முயற்சிக்கு உறுதிப்பாடு வழங்கும் பேச்சாகவே இவரது உரை அமையப்போவதை நான் உணருகிறேன்.

நான் 1948 ஆம் ஆண்டு கூறிய அதே நிலைப்பாட்டிலிருந்தே மீண்டும் என் மக்களின் சார்பில் இந்தத் தேசியக்கொடி அமுலாக்கப்படுவதை கண்டித்துப் பேச வேண்டியவனாயுள்ளேன். காரணம், அரசின் நோக்கில் முன்னேற்றம் ஏற்படாததுதான்.

நாட்டின் தேசியக்கொடி போன்ற முக்கிய விடயங்கள் சாதாரணமானவை அல்ல. இவை நாட்டின் உன்னத உயர்நிலையை நோக்கிய இலட்சியக் கோட்பாட்டுடன் அணுகப்படவேண்டியவை. செயற்படுத்தப்பட வேண்டியவை. வலுக்கட்டுபாட்டு முறைகளிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட இனம் இன்னொன்றின் மீது குறுகிய மனோபாவநோக்குடன் தனது அரச பலம் கொண்டு திணிக்க முயலும் குறுகிய செயற்பாட்டிலிருந்தும் விடுபட வேண்டும். ஆனால் இந்தத் தவறான போக்கையே இன்றைய அரசு பின்பற்ற முயலுகிறது. எனவேதான் மீண்டும் என் எதிர்க்குரலை இச்சபையில் நான் எழுப்ப வேண்டியவனாயுள்ளேன்.

இச்சபையில் (1948 ஆண்டு) இடம் பெற்ற விவாதத்தின் போது குருணாகல் தொகுதியின் அன்றைய உறுப்பினர் (திரு. சிறீநிசங்க) தமது கருத்துக்களை மிக உயர்ந்த நிலையிலிருந்து எடுத்துக் காட்டினார். பர்மா நாட்டிலிருந்து அப்போதுதான் அவர் திரும்பியிருந்தார். அங்கு புதிதாக உருப்பெற்றுள்ள அந்நாட்டின் தேசிய உணர்வானது அங்கு பல நூற்றாண்டு காலத்திற்கு முன் இருந்த மயிற்பட்சியைத் தாங்கிய கொடியை மாற்றிப் புதிய கருத்து வடிவம் கொண்ட அங்கு நிலவும் தேசிய முன்நோக்கிற்கு ஏற்ற ஒரு புதிய தேசியக் கொடியை அமைத்துள்ளதைக் கூறினார்.

ஆனால் இதற்கு எதிர்மாறாக இங்கு என்ன நடைபெறுகிறது? 10 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் வழக்கிலிருந்த ஒரு தனி இனத்தின் சிங்கக்கொடி இன்று இங்குள்ள பல இனங்களின் தேசியக் கொடியாக ஆக்கப்படுகிறது. இதற்கு ஏதோ மாற்று மருந்து போல இன்னும் ஒரு சாரார் இதே சிங்கக் கொடிக் கொள்கையை ஒரு சிறு மாற்றத்துடன் ஏற்கும் உடன்படிக்கைக்குச் தம்மைத்தாம் தயாராக்குகின்றனர். இவை இன்றைய முன்னேற்ற நாடுகளுக்கு உகந்த வழிவகையாக இருக்கமாட்டா என்பதை நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

மதிப்பிற்குரிய தலைமை அமைச்சர் அவர்கள் தமக்கு மிகப் பரந்த மனப்பாங்கு இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். இந்த அவரது பரந்த மனப் பான்மையைப் பரவலாக்கும்வகையிற் போலும் அவர் பண்டாரவளைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் (திரு. நாடராஜன்) அவர்களை முன் குறித்த வகையிலான ஒரு திருத்தத்தை இச்சபையிற் கொண்டுவருமாறு நிர்பந்தித்து உள்ளார். அந்த அங்கத்தவருக்கு நடந்துள்ள மனமாற்றதைப் பாருங்கள்! அவர் எது செய்கின்றார்? ஏனைய சிறுபான்மைச் சமூகத்தினரை தாராள மனப்பான்மையோடு நடத்திடும்படி அவர் வேண்டி நிற்கின்றார். தமிழரும் முஸ்லீம் மக்களும் தாராள மனப்பான்மையைக் கைக்கொள்ள வேண்டுமாம். இந்தத் தாராள மனப்பான்மை என்ற வேண்டுகோள் எதற்கு, என்ன விடயத்தில் என்பதே கேள்வி.

பிரதமரின் இந்தத் தாராள மனப்பான்மையும் இவரது அரசின் செயற்பாடும் பண்டாரவளைப் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளது என்பதையும் இவர் சார்ந்த பதுளைப் பகுதியின் ஒரு பிரிவை இவரிடமிருந்து அறவே நீக்கியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இந்தத் தாராள மனப் பான்மை முறையை சீரணித்து நிற்கும் சில தமிழ்ப் பிரதிநிதிகள், அதாவது தமிழ் இனத்தின் சார்பாக இங்கு வந்துள்ளதாகக் கருதப்படும் தமிழ்ப் பிரதிநிதிகள், இங்கு பல இனம் அல்ல ஒரு தேசிய இனம், ஒரு மொழி, என்ற கிளிக் கூச்சலில் இறங்கியுள்ளதைக் காண்கின்றோம். இன்னும் வெகு விரைவில் ஒரு மதம் என்ற கோஷமும் எழும். இவர்கள் வேண்டுவது இவ்விதமான பெரியது சிறியதை விழுங்கும் ஒருமைப்பாட்டைத்தான்.

நான் மீண்டும் கூறக்கூடியது என்னவெனில் இங்கு முன்னேற்றத்துக்குரிய அறிகுறியோ உண்மையிலான ஒற்றுமை உணர்வின் தத்துவமோ இந்த அரசாங்கத்தில் இல்லை என்பதே. இந்நிலையில் பண்டாரவளைத் தொகுதி அங்கத்தவர் இங்கு இந்நாட்டில் இடம்பெற வேண்டியது ஒரு தேசிய இனமும் ஒரு மொழியும் என தம் வாய்விட்டுப் பேசிய வார்த்தைகளையிட்டு நான் ஆழ்ந்த துயரம் கொள்ளுகிறேன்.

இந்நாட்டில் சில இயல்பான பிரச்சினைகள் இருப்பது உண்மையே. இவற்றை நாம் கருத்தில் எடுத்துத் தீர்க்க வேண்டும். இந்நாடு ஆயிரவருடக்கணக்காக ஒன்றிற்கு மேற்பட்ட இனங்களைக் கொண்டு வந்துள்ளது. இவர்கள் மொழிவாரியாக இரண்டு பெரும்பாகமாக இந்த நெடுங்காலமும் இருந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த இயல்பைத் தாங்க முடியாத சில குறுகிய மனத்தோர் இந்த மொழிவாரி இனங்களில் ஒன்றை மாற்றி ஒழித்து இங்கு இருப்பது ஒரேயொரு இனம் என்ற நிலையை ஏற்படுத்த முயல்வதைப் பெயரளவில் எமக்குக் கிடைத்த சுதந்திரம் வந்த இந்த மூன்று வருட காலத்துக்குள்ளேயே காண முடிகிறது.

இந்தப் பாராளுமன்றத்திலேயே தமிழ்ப் பிரதிநிதிகளாயுள்ள சிலர் உங்கள் மொழி உரிமை என்பதை விட்டுக்கொடுங்கள் எனத் தமிழினத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். இவ்வித உடன்பாட்டு ஒற்றுமைதான் இங்கு பரிந்து கேட்கப்படுகிது. அன்று கல்குடாப் பாராளு மன்ற உறுப்பினர் (திரு. நல்லையா) அவர்கள் இதே சபையில் தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டது இதுதான். தமிழ் மக்களே, நீங்கள் சிங்களம் படியுங்கள் என்பதுதான். சிங்களவர்களிடம் அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் எனக் கூறவில்லை. தமிழர் சிங்களம் படிக்க வேண்டும் என்பதை அந்த உறுப்பினர் இந்தச் சபையினுள்ளே கூறினாரேயொழிய மட்டக்களப்பு மக்களின் முன்னால் அங்கு போய்க் கூறத் துணிய மாட்டார்.

இதே ரீதியில் எனது நண்பர் பண்டாரவளைப் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் தமிழ் மக்களிடமும் முஸ்லீம் மக்களிடமும் அவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை எனக் கொண்டுள்ள சிலவற்றை விட்டுக் கொடுக்கும்படி கேட்பதையிட்டு நான் வேதனைப்படுகிறேன், இந்த வழியில் நாட்டின் தேசியத்தைக் காக்க முடியாது. சிறுபான்மை இனங்களை அழிக்க முயன்றல்ல. அவர்களின் மனத்திலே ஏற்படக் கூடிய ஐயப்பாடுகளை நீக்கியே ஐக்கிய உறுதிப்பாடு கொண்ட தேசிய உணர்வை நாம் கட்டி வளர்க்க முடியும். இதற்குப் பதிலாக சிறியதைப் பெரியது விழுங்கும் முயற்சியே இங்கு நடைபெறுகிறது.

இந்த வழிமுறைதான் அரசாங்கத்தினால் மொழி விடயத்திலும். இந்தக் கொடி விடயத்திலும் கையாளப்படுவதைக் காண்கின்றோம். இதுதான் சரணாகதி அடைய மறுக்கும் ஒரு சாராராகிய எங்களை எதிர்த்து எழ வைக்கின்றது; எங்களை நாங்கள் பாதுகாக்க தனியான ஒரு தமிழ்ப்பேசும் அரசை உருவாக்குவோம் என்ற உணர்வுக்குத் தூண்டுகிறது. அவ்வித ஓர் அரசு இருக்குமானால் அத்தகைய அரசில் மதிப்புக்குரிய கல்குடாப் பிரதிநிதியவர்கள் இங்கு கூறியதை அங்கு கூறமாட்டார்.

மதிப்பிற்குரிய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க: அப்போதும் அவரும் இன்னொரு கொடியை அங்கு வைத்துக் கொள்ளலாம்.

திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் : நேற்று, கௌரவ பண்டாரவளைப் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்நாட்டிற்குரியது ஒரேயொரு மொழி (சிங்களம்) எனப் பேசியபோது இந்த நாட்டிலுள்ள 20 இலட்சம் தமிழ் பேசும் மக்களை அந்தத் தனிச் சிங்களக் கூண்டுக்குள் சிறை வைக்கும் பேச்சாகவே அது இருந்தது. அவ்விதம் தமிழ் பேசும் மக்கள் தங்கள் தாய்மொழியை இழக்க வேண்டுமாம், இழந்து படிப்படியே சிங்கள மொழி பேச வேண்டுமாம். இவ்விதம் மொழியுரிமையிலும், இன்று பேசப்படும் தேசியக் கொடியுரிமையிலும் எதிலும் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் உடன்பாடு உடையோராக தமிழ் பேசும் மக்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமாம். இதை அந்த அங்கத்தவர் கூறியபோது அரசியல் விவகார அமைச்சர் அவரைக் கைகொட்டி மகிழ்வித்ததைக் கண்டோம்!  இவ்விதம் உரிமைகளை இழந்து பெறும் உடன்பாடுகளையும் இந்த அடிப்படையில் உருவாகும் தேசிய ஒருமைப்பாட்டையும் நான் அறவே ஒதுக்குகிறேன். அதில் என் வன்மையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்.

இங்கு ஒரு புதுவிதமான அரசியற் சித்தாந்தம் அல்லது நாகரிகம் தோன்ற முயலுகிறது. அதில் பெரும்பான்மையினரின் இனத் துவேஷம் அவர்களின் தேசிய உணர்வு எனப் போற்றப்படுகிறது. சிறுபான்மையினரின் இனப்பற்றோ அவர்களின் தேசிய உணர்வல்ல, அது அவர்களின் இனத்துவேஷம் எனக்கொள்ளப்படுகிறது.

இந்தச் சபையில் முன் வைக்கப்பட்டுள்ள இந்த மசோதாவை இது உயரிய கொள்கையின் அடிப்படையில் ஆகாத மசோதா எனக் கூறி இதனை நான் எதிர்க்கிறேன்.

இந்தக் கொடியை இங்கு அறிமுகம் செய்து இதற்குத் தேசிய வடிவம் கற்பித்து இதனையே இந்த நாட்டின் தேசியக் கொடியாக்க முயலும் இவ்வேளையில் இதில் சிறுபான்மை இனத்தவருக்கும் சலுகை காட்டப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இவ்விதம் உரிமைகள் மறுக்கப்பட்டு சலுகையின் அடிப்படையிலான சரணாகதி உடன்பாடுகளை என் இனத்தின் சார்பில் நான் எதிர்க்கிறேன்.

இந்த சிங்கக் கொடியை இந்நாட்டின் தேசியக் கொடியாக ஆக்கும் போது நீங்கள் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் புறக்கணிக்கிறீர்கள். ஏனைய சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகளுக்கும் தங்கள் உணர்வுகளை இங்கு வெளிக்காட்டவே உள்ளனர்.

இங்கு பெரிதெனக் கருதி மதிப்புக்கரிய கைத்தொழில் கடற்றொழில் அமைச்சர் கொண்டு வந்துள்ள மசோதா நிறைவேறப்படினும் இது ஏனைய இனத்தவர்களை நீங்கள் புறக்கணிப்பதாக மட்டுமல்ல தொடர்ந்து அவமதிப்பதாவே இருக்கும்.

(சபையில் குழப்ப ஒலி கிளம்புகிறது)

திரு. சா. ஜே. வே. செல்வநாயகம்: சாவகச்சேரி பா. உ. (திரு. குமாரசாமி) எப்போதும் கேள்விக்குரியவராகவே இருப்பார்.

நான் மீண்டும் கூறுகிறேன். இது ஏனைய இனத்தவர்களை அவமதிப்பதாகவே உள்ளது. தேசியக்கொடியானது நாட்டின் பல்வேறு இனத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும். அனைத்து இனங்களின் பிரதிநிதித்துவமும் நாட்டின் தேசியக் கொடியில் இருக்க வேண்டும்.

நீங்கள் இந்தச் சிங்கக் கொடியை மாற்றமின்றி அன்று அக்காலத் திலிருந்து ஒரு தனி இனத்தின் கொடி போலவே இன்றும் இங்கு கொண்டு வர முயலுகிறீர்கள். இந்த முன்னைய கொடியே இப்போது வரும் தேசியக் கொடி எனப்பட்டதிலும் முக்கிய மத்திய பெரும்பாகமாக இருக்கிறது. இதற்கு வெளியே கரையோரத்தில் கட்டப்படும் வெளிக் கோடுதானாம் ஏதோ வேண்டா வெறுப்புடன் சகிக்கப்படும் இருபது இலட்சம் சிறுபான்மை மக்களைக் காட்டி நிற்கும் அடையாளச் சின்னம். இது இம்மக்களை அவமதிப்பதாக இல்லையானால்…

(சபையில் குழப்ப ஒலி)

ஆமாம், சாவகச்சேரி அங்கத்தவரின் உணர்வுக்கு இவை எட்டக் கூடியவை அல்ல.

ஓர் அனுபவம் மிக்க ஆசிரியரும் பிரபல பாடசாலையொன்றின் உப அதிபரும் நேரடி அரசியலில் இல்லாத பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இந்தக் கொடித் திருத்தத்தைப் பற்றிக் கூறியதுண்டாம் – ‘பொன்னா (கைத்தொழில் கடற்றொழில் அமைச்சர்) கொண்டுவந்துள்ளது தேசியக் கொடியில் திருத்தமல்ல. அதன் கச்சை போல இரு கோடுகளையே’ என!

இதுதான் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்கள் எந்த மக்களது மனதைத் தமது சலுகைகளால் திருப்திப்படுத்தி விட்டதாகக் கருதுகிறாரோ, அந்த மக்களது கருத்தாகும்.

தேசிய ஒருமைப்பாடு எனவும், குரல் கொடுக்கப்பட்டள்ளது. இந்த ஒருமைப்பாடு ஒவ்வொரு இனத்திற்கும் உரிய தனித்துவத்தைப் பேணும் வகையில் ஒருவரையொருவர் மதிக்கும் வகையில் சமத்துவ நல்லுறவின் அடிப்படையில் வேண்டுமேயொழிய இன அழிப்பு முறையில் அல்ல.

குடியுரிமையிலும் சரி, மொழியுரிமையிலும், ஏனைய விடயங்களிலும் சரி, நீங்கள் உங்களிலும் அளவிற் சிறிய இனங்களை இன்னல்படுத்தி அழித்தொழிக்கும் நோக்குடனேயே செயற்படுகிறீர்கள். இந்த அடிப்படையில் ஒற்றுமையோ இங்கு கூறப்படும் ஒருமைப்பாடோ தலைதூக்க முடியுமா?

நான் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் அளவிற் சிறியதோ, பெரியதோ அந்த இனத்தின் சார்பில், ஏனைய சிலர் பெரிதென மதிக்கும் பிற பொருளிலும் பார்க்க கொள்கையே பெரிதென மதித்து அதற்கு முதலிடம் கொடுத்துத் தன்மானத்தோடும் சுய கௌரவத்தோடும் வாழ விரும்பும் என் தமிழ் இனத்தின் சார்பில் நான் இங்கு கொண்டு வரப்படும் சிங்கக் கொடியையும், இதன் ஓரத்தில் இரு கோடுகள் இடப்பட்ட மாற்றுச் சிங்கக் கொடியாகி வரும் இரண்டையும் எதிர்க்கிறேன். இந்த இரண்டு கொடிகளும் நாங்கள் மதிக்கும் உயரிய இலட்சியத்தின் அடிப்படையில் அமையவில்லை. மிகவும் பின்தங்கிய பிற்போக்கான கருத்துக்களைக் கொண்டு இவை உருவம் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒரு புதுத் தேசியத்தை நீங்கள் எழுப்ப முடியாது.

நான் இங்கு முன் வைக்கப்பட்டுள்ள திருத்த மசோதாவை எதிர்க்கிறேன். இது பற்றி இச்சபையில் நேற்று பண்டாரவளைத் தொகுதி அங்கத்தவர் பேசிய உரையையிட்டு வேதனை அடைகிறேன். சிலரைத் தாம் திருப்பதிப்படுத்தி விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் பிரதமர் குறிப்பிட்ட கொடியையும் நான் எதிர்க்கிறேன். இக்கொடிகள் தமிழ் மக்களின் விருப்பைத் திருப்தி செய்யவில்லை. இவை அமுலாக்கப் படுவதற்கு என் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இம்மசோதாவை நான் எதிர்க்கிறேன்

SHARE