ஹேமசிறி – பூஜித்தின் பிணை இரத்து: இருவருக்கும் விளக்கமறியல்!

65

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கிய பிணையை தள்ளுபடி செய்ததை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதமையின் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை அடுத்து அவர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டபோதும் அவர்களை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனவே நீதவான் நீதிமன்றம் பெர்னாண்டோ மற்றும் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்குவதை எதிர்த்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் திருத்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த விண்ணப்பம் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும் போது கொழும்பு பிரதான நீதவான் தனக்கு அற்ற அதிகாரம் ஒன்றினை உருவாக்கி சட்டத்தை மீறி பிணை உத்தரவை வழங்கியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலு ஆராய்ச்சி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

SHARE