சிவாஜி, அனந்திக்கு கொலை அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

95

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தனக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்மை தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதன் காரணமாக தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கடிதம் மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரெலோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்து நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தொலைபேசி மூலமாக தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து ஆதவன் செய்திசேவை அவரை தொடர்புகொண்டு வினவியது. இதன்போதே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக தாம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பிரதான வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்களாலேயே தமக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

SHARE