குடியுரிமை மசோதாவை எதிர்த்து மலையக மக்களுக்காக குரல் கொடுத்த தந்தை செல்வாவின் உரை-19.8.1948

90

தந்தை செல்வா – சபாநாயகர் அவர்களே! இந்த மசோதா எனக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. இதைப்பற்றிய அபிப்பிராயத்தைப் பற்றியோ அல்லது இதைப்பற்றி நான் கொண்டிருக்கும் மனப்பாங்கு பற்றியோ, அல்லது இதைப் பற்றி நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற நிலை பற்றியோ அல்ல. ஏனெனில், இந்த மசோதா இந்த அரசாங்கத்தின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இப்படி நடைபெறுகிற பல அநியாயங்களில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட மிகக் குறுகிய ஒரு மனப்பான்மை எந்த மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்கிறார்களோ அந்த மக்களுக்கே தீங்கு விளைவிக்கும் என்பதனை என்னால் இயன்ற மட்டும் எடுத்துக்காட்டுவேன்.

ஆனால், நான் அதற்குப் போகுமுன்பு, கடைசியாகப் பேசிய உறுப்பினரின் விவாதத்தைப் பற்றிக் கொஞ்சம் பேச விரும்புகிறேன். அவர் நியமன உறுப்பினர் மேஜர் ஓல்டு பீல்டு. அவர் சொல்கிறார், இதில் யாருக்கும் பாரபட்சமாய் எதுவுமில்லை என்று. அவர் தொடர்ந்து சொல்கிறார் இது ஐரோப்பியர்களுக்கு எந்த அளவுக்குப் பொருந்துமோ அதே போலத்தான் இந்தியர்களுக்கும் என்றார். அவரின் இரண்டு வசனங்களும் ஒன்றோடு மற்றொன்று ஒத்துப்போகவில்லை. அதில் ஐரோப்பியர்களுக்குப் பாதகமாய் உள்ளது எது அல்லது எது ஐரோப்பியர்களுக்குப் பாதகமில்லாமல் உள்ளது?

உண்மையில், அது ஐரோப்பியர்களைத் தாக்கவில்லை. ஆனால் அது இந்தியர்களுக்குப் பாதகமாய் உள்ளது. எனவே, கவுரவ நியமன உறுப்பினர் இந்த மசோதாவைப் பாரபட்சம் எதுவுமில்லை என்று சொல்லும்போது நான் அதைப் புரிந்து கொள்கிறேன். பின்பு, அவர் சொல்கிறார் இந்த மசோதா பாரபட்சமுடையதாய் இருந்தாலும் கூட இந்த மசோதாவைக் கொண்டு வரவும், அதை இயற்றவும், சபையால் அங்கீகரிக்கவும் இந்நாட்டுக்கு உரிமை இருக்கிறது என்று. ஆனால், இதில் இந்தியர்களுக்கு எதிராக ஒன்றுமில்லை என்று சொல்லும் போது, அவரது மூளை வளம் எப்படி உள்ளது என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

சபாநாயகர் அவர்களே, என்னுடைய முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், இந்த மசோதாவைத் தயார் செய்தவர்கள் ஏதோ என்னத்துக்கோ பயந்த நிலையில் இருந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

கவுரவ நிதியமைச்சர் ஒளிவு மறைவின்றிச் சொல்லியுள்ளார். இந்த நாட்டில் இந்தியர்களை வெளியில் வைப்பதில் இது முதல் முயற்சி என்று.

தலைமை அமைச்சர் டி.எஸ். சேனநாயக்க: இல்லை. இல்லை.

தந்தை செல்வா: ஆனால் அதை அவர் மிகவும் அனுபவமுள்ள வழக்குரைஞர்களுக்கே உரிய பாணியில், நகரத்திலே குடிகொண்டுள்ள இந்திய வியாபாரியைக் குறிப்பிட்டார். ஆனால் அவர் மலையகத் தோட்டங்களிலே பலப்பல வருடங்களாக உழைத்து வரும் தோட்டத் தொழிலாளியைக் குறிப்பிடவில்லை,  குண்டு வீசப்பட்ட போது ஒடிப்போன இந்தியர்களைக் குறிப்பிட்டார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் ஒடாததைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வடஇந்தியாவிலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ வந்து இங்கே வியாபாரம் நடத்தும் இந்தியர்களைப் பற்றியும், தற்காலிகமாக இங்கே தங்கியிருப்போரைப் பற்றியும் பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி பகுதியிலிருந்து யாரேனும் கேட்கவில்லை குறிப்பிட்ட இவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென்று.

சபையின் இந்தப் பகுதியிலிருந்து பேசியவர்கள் அனைவரும் வினயமாகக் கேட்டுக் கொண்டதெல்லாம் இந்த நாட்டு முன்னேற்றத்துக்காக எல்லா வழிகளிலும் வியர்வை சிந்த உழைத்தவர்களுக்கு எல்லா முறைகளிலும் அவர்கள் இங்கே தங்கியிருந்த காலம் அவர்கள் இந்த நாட்டு மக்களாகக் கணிக்கப்பட்டு, எல்லா நடவடிக்கைகளிலும் பங்கு கொண்டு இதையே தங்கள் நாடாகக் கொண்டுள்ளவர்களுக்கு இந்த நாட்டுக்கெதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத மக்களுக்குத்தான் குடியுரிமை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். இப்படிப் பட்ட இந்த மக்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டவேண்டாமென்று கேட்கின்றோம்.

இந்த மக்களின் உழைப்பால் மாத்திரமே கவுரவ நியமன உறுப்பினர் இந்த நாட்டில் தங்க வேண்டி வந்ததையும். அவரது இனத்தவர் இங்கு இரப்பர் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி அவைகளில் வேலை செய்வதற்கென இந்த மக்களை இங்கே வருவித்துக் கடைசியில் இப்போது அவர்களைக் கைவிட்டு இந்த மசோதாவில் அவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் எதுவுமில்லை யென்று சொல்லி, அவர்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்கள் நலனுக்கு எதிராகத் தனது வாக்கை பாவிக்கும் அவருடைய மனச்சாட்சியைப் பற்றி நான் என்னவென்று சொல்ல?

அவருடைய நாட்டவர் இப்படிப்பட்ட ஒரு மசோதா அங்கே கொண்டு வந்தபோது, அவர்கள் வித்தியாசமாகத் தெளிவாக நடந்துள்ளார்கள். அவர்கள் தங்களை வழிநடத்த வேறு முறைகளைக் கையாண்டனர். அவர்கள் அங்கே பிறந்தவர்களுக்கும் பரம்பரையாய் இருந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கினார்கள். அங்கே சிறந்த நியாயமான முறைகளை அனுசரித்தனர்.

சபாநாயகர் அவர்களே, என்னுடைய கூற்று இதுதான். இந்நாட்டு நிரந்தரக் குடிமக்களுக்கு ஆபத்து வரும் வகையில் வேறுநாட்டு மக்கள் இங்கே படையெடுப்பது போல வந்து, இந்நாட்டு மக்களுக்குப் பிரச்சனை உண்டாக்குவதென்றால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப் பற்றி யாருக்கும் இரண்டு அபிப்பிராயங்கள் இல்லை. எல்லோரும் ஒத்துக் கொள்கிறோம். இந்த நாட்டுக்கு வெளியிலிருந்து வருபவர்களைக் கட்டுப்படுத்தி இந்த நாட்டில் இப்போதுள்ள சனத்தொகையினர் வெளியிலிருந்து வருபவரால் எதுவித இடைஞ்சலுக்கும் ஆளாகாமல் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அதற்காகச் சட்டமியற்ற வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு எதுவுமில்லை.

ஆனால், 70 இலட்சம் மக்களுக்கிடையில் வாழும் இந்த ஏழு லட்சம் மக்கள், 70 லட்சம் மக்களை மிஞ்சி விடுவார்கள் என்று பயங்கொள்ளுதல் வியப்பை அளிக்கிறது. இப்படிப்பட்டப் பயம் காரணமாய் இது போன்ற ஒரு நியாயமற்ற மசோதாவைத் தயார் செய்து அதைச் சட்டமாக்க முனைந்து நிற்கிறார்கள். இது போன்ற ஒரு சட்ட நகல் உலகத்தில் எந்தப் பாகத்திலும் முன்னெப்போதும் கொண்டுவரப்பட்டதில்லை.

இப்படிப்பட்ட ஒரு மசோதாவை உருவாக்கியவர்களின் மனப்பக்குவத்தைப் பற்றி நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சபாநாயகர் அவர்களே, 1847 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு இங்கேயுள்ள தோட்டங்களில் சீனத் தொழிலாளர்களை அறிமுகப்படுத்த யோசித்தார்கள். இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக இந்த 7 லட்சம் தொழிலாளர்களும் சீனத் தொழிலாளர்களாக இருந்திருந்தால், நிலைமை எப்படியிருக்கும் என்பதனை நாங்கள் நினைத்துப் பார்க்கலாம். ஆனால், பின்பு அது அப்படி நடைபெறவில்லை. அந்த அளவுக்குப் பிரச்சினை குறைந்தது பெரிய விடயம். இங்கே கொண்டுவரப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் ஒரே மொழி பேசுபவர்களாய் வந்தனர். அதே மொழி இங்கே ஒரு பகுதி நிரந்தர மக்களால் பேசப்படுகிற மொழியாய் இருந்தது. அவர்கள் இந்த நாட்டுப் பூர்வீகக் குடிமக்கள். அந்த அளவுக்கும் பிரச்சினை எவ்வளவோ குறைக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த ஏழு லட்சம் மக்களும் நாளைக்குச் சிங்கள மொழியைத் தழுவி, சிங்களவர்களாய் மாறுவார்களாயின், இப்படிப்பட்ட ஒரு மசோதா தோன்றியிருக்கவே மாட்டாது. அதுதான் நான் சொல்லுகிறேன், இது ஒரு மொழி பேசுகிற மக்களுக் கெதிராக பாரபட்சமாய் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சட்ட நகல்.

 பல வருடங்களாக எனது மனதில் குடிகொண்டிருந்தது, எப்படி ஒரு ஒற்றுமைப்பட்ட இலங்கை இருக்க முடியும் என்றும், இருக்க வேண்டும் என்றும். கவுரவ நிதியமைச்சர் மனதில் இருப்பதைப் போல் அல்ல. மிக அண்மைக் காலம் வரை நான் அதைப் பற்றிக் கனவு கண்டிருந்தேன். கவுரவ நிதியமைச்சர் தலைமை வகித்த மொழிக் குழு முன்பு நான் சாட்சியமளித்தேன். நான் சொன்னேன். இந்த இரண்டு மொழிகளையும் நீதிமன்றங்களில் பாவிப்போம், தேசியப் பேரவையில் பாவிப்போம். மற்றும் எங்கெங்கே பாவிக்க வேண்டுமோ அங்கெல்லாம் இரண்டு மொழி களுக்கும் சம அந்தஸ்து இருக்கவேண்டுமென்று. நான் சொன்னேன், நீதிமன்றங்களில் ஒரு தமிழர் தமிழிலும் ஒரு சிங்களவர் சிங்களத்திலும் விசாரணை நடத்தமுடியுமென்று.

இப்படி நாட்டின் எல்லாப் பாகங்களிலும் ஒரே மாதிரி நடத்த முடியுமென்றும் இந்த முறையால் ஒற்றுமையுள்ள ஒரே நாட்டைக் கட்டிக்காக்க முடியுமென்றும் சொன்னேன். ஒரேயொரு வித்தியாசம் இரு மொழிகளும் பாவிக்கப்படுமென்றும் சொன்னேன். இரு மொழிகளும் இந்நாட்டில் காப்பாற்றப்படவேண்டும். எந்த அரசாங்கமும் இரு மொழிகளையும் காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டுமென்றும், ஆனால், கவுரவ நிதியமைச்சர் வேறுவிதமாய் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால், அவர் தன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அதற்காக நான் அவருடன் கோபிக்கவில்லை. ஆனால், அவருடைய கருத்துக் களிலிருந்து நான் மாறுபடுகிறேன். அவர் எடுத்துள்ள நடவடிக்கையைப் பற்றிய தர்க்கரீதியான முடிவுகளை அவர் ஏற்றுக்  கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

அவர் சொன்னார், தமிழ் மொழி வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் பாவிக்கலாம் என்றும், மற்றைய ஏழு மாகாணங்களில் நீதிமன்றங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் சிங்களமொழி பாவிக்கப்படலாம் என்றும். அவர்தான் இலங்கையில் பாகிஸ்தானின் தந்தை எனக் குறிப்பிடலாம். அந்த இரண்டு மாகாணங்களையும் அரசாணை இல்லாத பாகிஸ்தானாக அவர் கணிக்கிறார். நான் சொன்னேன், இந்த வழியைத்தான் அரசு பின்பற்றப்போகிறது என்றால்….

கவுரவ ஜெயவர்த்தனே: கவுரவ உறுப்பினர் சொல்வதைப் போல் அந்த அறிக்கை இல்லையென்பதை நான் சொல்லி வைக்க விரும்புகிறேன்.

தந்தை செல்வா: அதற்குள்ள தொடர்பை நான் காட்டுகிறேன். இந்தத் தொடர்பை அவர் கவனிக்கவில்லை என்று நான் வருத்தப்படுகிறேன். நான் சரியான கட்டத்தை விளக்கும்போது, அந்தத்தொடர்பை நன்கு கவனிக்கலாம். இன்னும் ஒரு நிமிடத்தில் நான் அதைக் காட்டுவேன்.

அவர்கள் மக்களை இருமொழிப் பிரிவினர்களாக ஆக்கிவிட்டார்கள். வடக்கு, கிழக்கு மாகாணத்தவர் ஒரு பிரிவினர் என்றும் ஏனைய ஏழு மாகாணத்தவர் வேறு பிரிவினர் என்றும்.

கவுரவ ஜெயவர்த்தனே: நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

தந்தை செல்வா: நான் சொல்கிறேன், அப்படித்தான் ஒரு முறையைத் தீர்மானித்துள்ளீர்கள். அதாவது இரண்டு தமிழ் மாகாணங்களிலும் நீதிமன்றங்களில் சாட்சிகளின் விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் முதலியன தமிழிலும் மற்ற ஏழு மாகாணங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் சிங்களத்திலும் நடைமுறைப்படுத்தப்படும். இதுதான் கவுரவ நிதியமைச்சர் தலைவராக உள்ள மொழிக் குழுவின் சிபாரிசுகள்.

கவுரவ ஜெயவர்த்தனே: அது அப்படியில்லை.

தந்தை செல்வா: நான் மீண்டும் சொல்கிறேன். அது அப்படித்தான். கவுரவ நிதியமைச்சர் இப்போது சொல்கின்றார். தமிழ் மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கிற குறைகளை நாங்கள் படிப்படியாகத் தீர்த்துவைப்போம் என்று. நான் குறிப்பிட்ட தொடர்பை இப்போது அறிகிறீர்களா?  அதனால்தான் நான் சொன்னேன், இப்படிப்பட்ட சட்ட நகலைப் பற்றி நான் வருந்துகிறேன் என்று. ஏனென்றால், அரசாங்கத்தின் உள் நோக்கத்தை இது துலாம்பரமாகக் காட்டுகிறது, அல்லது அரசாங்கத்தில் சிலர் இப்படிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நாட்டை ஒரு வகையில் இரண்டாகப் பிரித்துச் சில மாகாணங்களை அரசியல் ரீதியாகவும். வேறு வழிகளிலும் அந்த இரண்டு மாகாணங்களையும் முக்கியத்துவமின்றி அப்படியே நிலைத்து நிற்கும் ஒரு தேக்கத்தை உண்டாக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால், இப்போதைய நிலையில் அப்படியொன்றும் இல்லை, இப்படிச் செய்வதில். நான் சொன்னேன், தர்க்க ரீதியில் சில முடிவுகளுக்கு அவை வழிவகுக்கும் என்று,  ஒரு மொழியினரை முறியடித்தல் நடக்கக் கூடிய ஒன்று. மற்றைய நடக்கக்கூடிய முடிவு மக்களைப் பிரித்தல். இதை எவ்வளவு வலுவான அரசாங்கமாக இருந்தாலும் கூடக் கட்டுப்படுத்துதல் மிக அரிது. இந்த முடிவைப் பற்றிச் சொல்லக்கூடியவர் உண்மையாக ஒரு பலம் மிக்கவராக இருப்பார். இப்போது இதை நான் சொல்கிறேன், சிங்கள இன மக்களை வேறு ஒரு இன மக்கள் எண்ணிக்கையில் மிஞ்சுவதை யாரும் விரும்பவில்லை. சரித்திரம் காட்டுகிறது, சிங்கள இனத்தை அழிக்க முடியாதென்று.

கவுரவ ஜெயவர்த்தனே: நாங்கள் எப்போதும் நின்று பிடித்துப் போர் செய்துள்ளோம்.

தந்தை செல்வா: நான் சொல்கிறேன். தமிழின மக்களை அழிக்க முடியாது. சரித்திரம் அப்படிக் காட்டுகின்றது. நான் சொல்வதென்னவென்றால், இப்போதைய பிரச்சினையைக் காலத்திற்கேற்ப இப்போதைய முறைகளில் தீர்வு காண வேண்டும்.

இப்போதைய பிரச்சினையைப் பழங்காலத்து முறைகளைக் கொண்டு தீர்க்க இயலாது. 20ஆம் நூற்றாண்டுப் பிரச்சினையை 15ஆம் நூற்றாண்டு முறைகளைக் கொண்டு திருப்தியாய் நல்ல முடிவுகளை எய்த முடியாது. 20ஆம் நூற்றாண்டுப் பிரச்சினையை 20ஆம் நூற்றாண்டு மனப் பாங்குடன்தான் நன்றாகத் தீர்க்க முடியும். கூடிய எண்ணிக்கையில் உள்ளவர்களே பயப்படுகின்றார்கள் என்றால் சிறுபான்மையிரான உள்ளவர்கள் இன்னும் எத்தனை மடங்கு பயம் உள்ளவர்களாக இருப்பார்கள்? இங்கே சிறுபான்மையினராய் இருப்பவர்கள் மிகவும் பலவீனமாய் உள்ளார்கள். அதை நாங்கள் மறுப்பதற்கில்லை. கவுரவ நிதியமைச்சர் அவர்கள் ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட்டார். இந்தச் சட்டத்தை அவர்கள் கொண்டுவருவது இங்குள்ள இந்திய வமிசாவழியினருக்குக் குடியுரிமை இல்லாமல் செய்யுமென்பதை.

இந்த மசோதாவை சரத்து சரத்தாக எடுத்துக்காட்டி இதிலுள்ள விதிகளின்படி நடைமுறைப் படுத்தினால், கேலிக் கூத்துக்குரிய விளைவுகளைப் பற்றி நான் பேச வேண்டிய தேவையில்லை. புது விளைவைப் பற்றி பண்டாரவளை கவுரவ உறுப்பினர் சுட்டிக்காட்டினார். அதாவது மலை நாட்டில் வசிக்கின்ற ‘ஏ’ என்ற ஒரு இந்தியருக்கு ‘பி’ என்ற ஒரு மகன் குறிக்கப்பட்ட திகதிக்கு முன்பு பிறந்திருந்தால், அவர் ஒரு இலங்கைக் குடிமகனாகக் கருதப்படுவார். ஆனால் அவருக்கு ‘சி’ என்ற இன்னொரு மகன் குறிக்கப்பட்ட திகதிக்குப் பின்னர் பிறந்திருந்தால், ‘சி’ இலங்கை குடியுரிமைக்கு உரிமையற்றவராவார். ஏனெனில், அவர் குறிக்கப்பட்ட திகதிக்குப் பின்பு பிறந்தபடியால், நான் சொல்வது இதுதான், இந்த மக்கள் மலையகத் தோட்டங்களிலே இன்னும் 500 வருடங்களுக்கும் வாழலாம். எனக்குத் தெரிந்த உண்மையின்படிக்கும், எனது அனுபவத்திலும் நான் அறிவேன். இந்த மக்களுக்கு மிக அதிகமானோருக்கு இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டைத் தெரியவும் மாட்டாது. வேறு எந்த நாட்டுடனும் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.

இந்த மசோதா சட்டமாகி அதே சட்டம் இன்னும் 500 வருடங்களுக்கு நடைமுறையிலிருக்குமாயின் அந்த 500 வருடங்களுக்கும் இவர்கள் நிலையில் மாற்றமேதும் நிகழாது.

அவர்கள் குடியுரிமை அற்றவர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள்.  அப்படியிருந்தும் கூட நியமன உறுப்பினர் (மேஜர் ஓல்டு பீல்டு) சொல்கிறார். இந்த மசோதாவில் இந்த மக்களுக்கு எதிராக ஒருவித பாரபட்சமும் இல்லையென்று. இந்த மக்களின் கடின உழைப்பின் பேரில்தான் நாட்டில் செல்வம் கொழிக்க அதன் நிமித்தமே ஐரோப்பிய மக்கள் இங்கே குடியேறியுள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால், இந்த மனோநிலை எங்கே போய் நிற்கும் என்றும் சொல்ல இயலாது. ஒரு பகுதி மக்களுக்கு எதிராக, அதற்கென்றே அவர்களுக்குப் பாதகமாகச் சட்டங்கள் கொண்டுவரத் தொடங்கினால், நான் பகிரங்கமாகவே சொல்லி வைக்கிறேன். இதுதான் எங்களுக்கு இருக்கிற பயம். கவுரவ தலைமை அமைச்சர் அவர்கள் சொல்வார்கள், அப்படியொன்றுமில்லையென்று. எனக்கும் அவருக்கும் நேர்நேரே என்றால், நான் அவரை நம்புவேன். ஆனால், கவுரவ பிரதம அமைச்சர் தன்னளவில் சொல்லலாம். அதுவும் அவரது இந்த அரசாங்கம் அவரது பொறுப்பில் இரக்கும் வரை அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் – ஆனால் அவர் அவருக்குப் பின்பு வருபவருக்காக எப்படிப் பேச முடியும்? அல்லது அவருக்குப் பின்பு பொறுப்பேற்கும் ஒரு குழுவினரைப் பற்றி அவர் எப்படி உத்தரவாதம் அளிக்க முடியும்?

இப்படிப்பட்ட ஒரு மனோநிலையும் சட்டங்கள் இயற்றுவதில் எதிர்ப்பான கொள்கையும்தான் வளரும். அதுவும் மிகப் பிரம்மாண்டமான அளவில். அது என்னத்தை காட்டுகிறது? ஒரு பகுதி மக்களுக்கெதிராகப் பாரபட்சமான சட்டங்களை இயற்றிப் பழகி அந்த மனோநிலையும் பழக்கமும் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகச் சட்டமியற்றவும் தயங்க மாட்டார்கள். அப்படியே நாங்கள் காண்கிறோம். என்ன மோசமான முடிவுகளுக்கு நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை ஜெர்மனியில் உதாரணம் காணலாம். வேறு சில நாடுகளும் உள்ளன. இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றுபவர்கள் கடைசியாக அழிவுகள் உச்சகட்டத்துக்குப் போகிறபோது, அவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். நான் சொல்கிறேன், ஒரு பகுதியினரின் சில தேவைகளின் பாதுகாப்புக்காகத்தானும் இது ஒரு புத்திசாலித்தனமான முறையா? கையாள்வதற்கு.

வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறுவதை எல்லா வகையிலும் தடுப்பதற்குரிய சட்டங்களை இயற்றுங்கள், நடைமுறைப்படுத்துங்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குரிய பொதுச் சட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை. உண்மையில் அப்படிப்பட்ட சட்டம் கொண்டு வருவதற்கு யாரும் ஒத்துக் கொள்கின்றனர். இங்கே கொண்டு வரப்பட்ட இங்கேயே தங்கியுள்ள மக்களுக்கு ஒரு நியாயமான திட்டத்தின் கீழ் அவர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள். அப்படி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும்போது, உண்மையாகவே தகுதியுள்ளவர்களுக்கு வேறு எந்த நாட்டுடனும் தொடர்பில்லாதவராய் இந்த நாட்டுக்கே விசுவாசமுள்ளவராய் இருப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்குங்கள். இவைகளுக்குத் தேவையான எல்லா ஆதாரங்களையும் நன்றாகப் பரிசீலனை செய்யுங்கள். அப்படி நீங்கள் செய்யும்போது மனிதாபிமான முறையில் இந்த நாட்டு நலனுக்கும் செல்வ உழைப்புக்கும் பாடுபட்ட மக்களைக் கணித்து அவர்களைப் புறக்கணிக்காதீர். அந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. இவையெல்லாவற்றையும் அரசாங்கம் உணர்ந்து அதற்கேற்பச் சிறந்த வகையில் அவர்களுக்கு உதவ அரசாங்கத்திற்கும் கடமைப்பாடு உண்டு.

இவையனைத்தும் அநேகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மிகவும் விபரமாய் சரத்து சரத்தாக ஆராய்ந்து பேசத் தேவையில்லை. ஒரு சரத்தை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்தோ, வடமாகாணத்திலிருந்தோ அநேக மக்கள் கடந்த 50, 60, 70 வருடங்களில் மலேயா நாட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அங்கே இப்போது 60,000 இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்களில் 35,000 பேர் வரை யாழ்பாணத் தமிழர்கள். இவர்களில் அநேகம் பேர் அங்கேயே பிறந்தவர்கள். 50 வருடங்களுக்கு முன்பு நானும் அங்கே தான் பிறந்தேன். இந்நாட்டின் குடியுரிமைக்கு நான் விண்ணப்பிப்பதென்றால், எனது தகப்பனார் இங்கேயே இலங்கையில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர் இலங்கையில்தான் பிறந்தார் என்று எனக்குத் தெரியும். ஆனால் 86 வருடங்களுக்கு முன்பு இங்கே பிறந்தார். இது மாத்திரமல்ல. நான் இன்னும் மேலே போய் என் பாட்டானும் இங்கே பிறந்தார் என நிரூபிக்க வேண்டும். அது எப்படியென்றாலும், 116 வருடங்களுக்க முன்பு நடைபெற்ற நிகழ்வு. இவைகளெல்லாவற்றையும் நிரூபிப்பது மிகக் கடினமான விடயம்.

இதற்கெல்லாம் கவுரவ தலைமை அமைச்சர் சொல்வார், நன்றாகத் தெரிந்த இலங்கைக் குடும்பங்களில் இவை அனைத்தும் இலகுவாய்த் தீர்த்துக் கொள்ளலாம் என்று. ஆனால், நிர்வாக அலுவலர்கள் இப்படிப்பட்ட விடயங்களில் தீர்மானம் எடுக்க இடம் கொடுத்தால், அநேகமாக உரியவர்களுக்கு நியாயம் மறுக்கப்படும். குடியுரிமை போன்ற மிக முக்கிய விடயங்களில் ஒரு அமைச்சரோ அல்லது ஒரு அதிகாரியோ அவரது எண்ணப்படி தீர்ப்புக் காண்பதென்றால், எல்லாம் குழப்பத்தில்தான் முடியும்.

மலேயாவில் இருக்கின்ற பலர் அங்கே போய்க் குடியேறியவர்கள், திரும்பி இலங்கைக்கு வர விருப்பமில்லாமல் அங்கேயே வாழ்கின்றனர். அவர்கள் திருமணம் செய்து அவர்களுக்கு வளர்ந்த பிள்ளைகளும் உள்ளனர். இந்தப் பிள்ளைகள் அவர்கள் பொதுவாக யாழ்ப்பாணத் தமிழர்களாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் மலேயாவில் இலங்கைத் தமிழ் சமூகத்தினராகவே வாழ்கின்றனர். அவர்கள் இந்த நாட்டுக்குக் குடியுரிமை பெறுவதற்கு இயலாமல் இருக்கிறார்கள். அவர்களுடைய சந்ததியினரும் இந்நாட்டுக் குடியுரிமைக்கு உரிமையற்றவர்களாகின்றனர். இவையனைத்தும் நடக்கும், இந்த நகல் சட்டம் எதுவித மாற்றமுமின்றிச் சட்டமாக வந்தால்.

கவுரவ நிதியமைச்சர் குறிப்பிட்டார், அரசாங்கத்தைப் பயப்படுத்த முடியாதென்று. அரசாங்கத்தைப் பயப்படுத்த யாரும் எண்ணவில்லை. அரசாங்கத்தில் இதுகளுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் யாரும் இருப் பார்களென்று எதிர்பார்க்கவுமில்லை. ஆனால், உண்மையான துணிவுக்கும் பகட்டுத் தைரியத்துக்குமிடையில் வித்தியாசம் உண்டு. பகட்டுத் தைரியமும், உண்மையான துணிவும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவையல்ல. நாங்கள் யாரையும் பயப்படுத்த வில்லை. யாரையும் பயந்தவர்களாக இருக்கவும் எதிர்பார்க்கவுமில்லை. இந்த நகல் சட்டத்தை ஒரு மனிதாபிமானமுள்ள ஒன்றாகத் திருத்த வேண்டுமெனக் கேட்கிறோம். அதுதான் எங்கள் வேண்டுகோள். அதுதான் சபையின் இப்பகுதியிலிருந்து எழும் ஒருமித்த ஓசை.

சபாநாயகர் அவர்களே! எனவே, எனது கட்சி சார்பாக நான் சொல்லும்போது, நானிந்த மசோதாவை வன்மையாக எதிர்க்கிறேன். முதலாவதாக, இந்த நாட்டிலுள்ள அநேகமான மக்களை சாதாரணமாய் எந்த வகையில் பார்த்தாலும், இந்நாட்டுக் குடியுரிமைக்கு உரித்துள்ள மக்களை அவ்வுரிமை இல்லாமல் ஆக்குகின்றதற்காகவும், இரண்டாவதாக இப்படிப்பட்ட பாகுபாடுடைய ஒரு மசோதாவைத் தயார் செய்து நடைமுறைப்படுத்த எண்ணியுள்ள மனோநிலை கொண்டுள்ளவர்கள் வருங்காலத்திலும் இதேபோல ஒரு இனத்தவருக்கு எதிராக, ஒரு வகுப்பினருக்குப் பாதகமாக நடப்பார்கள் என்பதற்காகவும், இந்த அரசாங்கம் வருங்காலத்திலாவது இவ்வளவு பாதமாக நடக்காமலிருப்பதற்காவும், நாங்கள் எதிர்ப்பதாக மீண்டும் சொல்லி வைக்க விருப்புகிறேன்.

SHARE