நீர் முகாமைத்துவத்துடனான விவசாய செய்கை. இலங்கையின் புதிய முயற்சி வவுனியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு

235

நீர் முகாமைத்துவத்துடனான விவசாய செய்கைஇலங்கையின் புதிய முயற்சி வவுனியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு 
வவுனியா
நீர் முகாமைத்துவத்துடனான விவசாய செய்கையை மேற்கொள்ளும் புதிய முயற்சி இலங்கையில் முதன்முதலாக வவுனியாவில்  மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டது. வவுனியா சாம்பல் தோட்டம் குளத்தில் இன்று குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வழமையான நெற்செய்கையின் போது  குளத்திலிருந்து வாய்க்கால்கள் வழியாக நீர் விநியோகப்பட்டுவருகின்றது. அதனால் அதிகமான நீர் வீண் விரயமாகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குளத்திலிருந்து நேரடியாகவே குழாய் மூலமாக நீரினை வயலுக்கு கொண்டு சென்று பாசனம் செய்யும் முகமாக குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
அந்தவகையில் இலங்கையில் முதன்முதலாக வவுனியா சாம்பல் தோட்டம் குளத்தில்  47 இலட்சம் ரூபா செலவில் குறித்த திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. குறித்த குளத்தின் கீழ் தற்போது 58 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளபட்டுவந்த நிலையில் இனிவரும் காலங்களில் 75 ஏக்கர் அளவில் நெற்செய்கையினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் மேலும் 3 குளங்கள் குறித்த திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம். பி. வீரசேகர கலந்துகொண்டு திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.இதன்போது வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.