நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான நிலையம்

153

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து நாளை மீண்டும் தொடங்குகிறது.

இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு விமானங்களை இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளுடன் மதுரை விமான நிலையம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அன்று முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்தை நாளை முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க வேண்டாம் என மத்திய அரசை தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் நாளை முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்த தொடங்குவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து விமான பயணத்தின் போது பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உள்நாட்டு விமானச் சேவையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்குவதால் 2 மாதங்களுக்கு பிறகு மதுரை விமான நிலையம் விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளது.

மதுரையில் இருந்து விமானத்தில் பயணிப்போரை விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது, பயணிகளை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.விமான டிக்கெட் முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

கரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்இந்தியா விமானங்கள் மதுரையிலிருந்து நாளை முதல் உள்நாட்டு பயணிகள் விமானங்களை இயக்குகிறது.