ஜம்மு காஷ்மீரின் சோபியானில் 2-வது நாளாக துப்பாக்கிச் சண்டை: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

118

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சோபியான் மாவட்டத்தில் 2-வது நாளாக இன்றும் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சோபியான் மாவட்டத்தில் ரேபான் கிராமத்தில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் இயக்கத்தின் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இன்று பின்ஜோரா பகுதியில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்

இது தொடர்பாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில் “ தெற்கு காஷ்மீரில்உள்ள பின்ஜோரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அதிகாலை முதல் அப்பகுதியை சுற்றி வளைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

பாதுகாப்பு படையினர் சுற்று வளைத்தது அறிந்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே தீவிரமான சண்டைநடந்து வருகிறது.. இதில் இதுவரை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 3 பேர் காயமடைந்தனர். ஆனால் எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் எனத் தெரியிவில்லை” எனத் தெரிவித்தனர்

சோபியான் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்தும் 2-வது என்கவுன்ட்டர் ஆகும். ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று மத்திய ரிசர்வ் படையின் 178 பட்டாலியன் பிரிவு, ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவு ஆகிய படைகள் இணைந்து தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் இறங்கினர்.

தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்பு படையினர் நெருங்கியதும் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் ரேபான் கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 5 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது