சிறீலங்கா பேரினவாத அரசாங்கத்தின் தமிழினப்படுகொலை சாட்சியங்கள் பிரான்சு Périgny நகரசபைக்கு முன்பாகவும்

சிறிலங்காவிற்கு பிரித்தானியா வழங்கிய சுதந்திர காலத்திலிருந்து இன்று வரை இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பூர்வீக குடிகளான ஈழத்தமிழர்கள் மீது ஆட்சியில் மாறி மாறி ஏறிய பேரினவாத சிங்கள அரசாங்கங்கள் நடத்திய மிகமோசமான இனஅழிப்பு இன அடையாள அழிப்பு என்பனவற்றுக்கு சர்வதேசத்தில் நீதி கோரி தமிழ் மக்களும் தமிழின ஆதரவாளர்களும் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை உள்நாட்டுக்குள் அதிகாரம் தரலாம் என்று சொல்லி பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களை செய்து பின்பு அவற்றை கிழித்து குப்பையில் போட்டுவிட்டு படுகொலைகளை செய்த சிங்கள அரசாங்கம் தற்போது சர்வதேச வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போரை தமக்கு சாதமாக பயன்படுத்தி ஐநாவின் பொறுப்புக்கூறலை உதாசினப்படுத்தி தொடர்ந்தும் தமிழினத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.எனினும் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக சர்வதேசத்தில் பாரிய அறவழிபோராட்டங்களை தொடர்ந்தும் செய்யவேண்டிய கடமை தமிழர்கள் அனைவருக்கும் உண்டு.அந்த வகையில் அதன் ஒரு வழியாக இனப்படுகொலை ஆதாரங்களை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டுவந்து ஈழத்துக்காக இதயத்தை திறவுங்கள் என பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன போராடிவருகின்றன.

பிரான்சு நாட்டின் அனைத்து இடங்களிலும் தமிழினப்படுகொலை சாட்சிய ஆவணங்களை ஊர்தியில் எடுத்துச்சென்று இரவு பகலாக தினமும் இந்த போராட்டம் நடைபெறுகின்றது.சர்வதேசத்தின் கதவுகளை தமிழின நீதிக்காக தட்டும்போது ஒரு நாள் அகலத்திறக்கும் என்ற நம்பிக்கை இந்த செயற்பாட்டாளர்களுக்கு உண்டு அதனால் கொரானா பேரிடரின் ஆபத்துக்களின் மத்தியிலும் இனத்துக்காக தம்மை அர்ப்பணித்து சர்வதேசத்தின் வாசல்களில் நிற்கின்றார்கள்.இன்று பிரான்சு Rue Paul Doumer, 94520 Périgny நகரசபை முன்றலில் தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பரப்புரைகள் இடம்பெறுகின்றன