ஈழத்துக்காக இதயங்களை திறக்க கோரி பிரான்சு பாராளுமன்றம் முன்பு இன்றும் இனப்படுகொலை சாட்சியங்கள்

இலங்கையில் சிங்கள பேரினவாத படுகொலை அரசாங்கங்களால் தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையில் வடக்கு கிழக்கிலும் அதை கடந்த இலங்கை மாகாணங்களிலும் கடந்த 73 ஆண்டுகளாக படுகொலை செய்தும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டும் உரிமைகளும் நிலமும் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தி நீதி தரும்படி கோரி ஐநாவை நோக்கியும் சர்வதேச நாடுகளை நோக்கியும் போராடிவருகின்றார்கள்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த அறவழிப்போராட்டம் புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் தாயக நிலத்திலும் தீவிரம் பெற்றிருக்கின்றது.எனினும் இந்த போராட்டங்களையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை இலங்கை இனப்படுகொலை அரசாங்கம் மேற்கொண்டு வந்தபோதிலும் நீதிக்காக ஏங்கி நிற்கும் மக்களின் போராட்டங்கள் ஓய்வறியாத ஒன்றாய் நிலத்திலும் புலத்திலும் தொடருகின்றது.

ஐநா சபையின் ஊடாக தமிழர்கள் தமது தாயகத்துக்கான நீதியை உரிமையையும் அங்கீகாரத்தையும் பெற மிகக்கடுமையான ஓயாத ராஜதந்திர போராட்டங்களில் பயணிக்கவேண்டியுள்ளது.உலகில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனங்களும் நிலங்களும் மிகுந்த நீண்ட தொடர் முயற்சிகள் போராட்டங்களின் பின்னேதான் நீதியை உரிமையையும் பெற்றுள்ளதை வரலாறு பாடமாகஈழ மக்களுக்கு காட்டி நிற்கின்றது இன்றல்ல எனினும் என்றோ ஒரு நாள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இன்றும் ஓயாத போராட்டங்களை செய்யவேண்டியுள்ளது .இன்று நீதி கோரும் பயணங்கள் சோர்வுற்றால் ஈழத்துக்கான நீதியும் தள்ளி தள்ளியே போகும் எனவேதான் சர்வதேசத்தின் பார்வையில் ஈழ மக்களின் தொடர்போராட்டங்கள் தென்படவேண்டியுள்ளது.அந்த வகையில்தான் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன இனப்படுகொலை ஆதாரங்களை சர்வதேச நாடுகளின் பார்வைக்கு வைத்து பரப்புரை செய்து ஈழத்துக்கான ஆதரவை கோரும் போராட்டத்தை வடிவமைத்து முன்னெடுத்து வருகின்றனர்.இது ஒரு தொடர்போராட்டமாக நடக்கின்றது.நாடுகளின் அரசியல் ராஜதந்திர மையங்களை இலக்கு வைத்து இந்த போராட்டம் தினமும் முன்னெடுக்கப்படுகின்றது.இன்று பிரான்சு பாராளுமன்றம் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது என்பதுடன் கிழமை புதன் தோறும் பிரான்சு பாராளுமன்றம் முன்பாக இந்த கவனயீர்ப்பு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.