கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10.80 லட்சம் வாக்காளர்கள்; 22 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

69

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சித் தனி தொகுதியில் 417, உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் 410, ரிஷிவந்தியம் தொகுதியில் 372, சங்கராபுரம் தொகுதியில் 370 என, 4 தொகுதிகளில் 1,569 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 7,568 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையங்கள் நேற்று முன் தினம் சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 472 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 36 ஆயிரத்து 851 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும், 202 திருநங்கைகளும் வாக்களிக்கவுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 1,569 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குச்சாவடிகள் மிகபதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பேர் வீதம் 3,118 சுகாதாரப்பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, சானிடைசர், கையுறை வழங்குவார்கள்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாவுல்ஹக் தலைமையில் காவல் அதிகாரிகள், கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 3,567 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இன்று (ஏப். 05) காலை வரை மொத்தம் ரூ. 82 லட்சத்து 800 ரொக்கம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன