அதிகளவில் வாக்களிப்பீர்: தமிழகம், புதுச்சேரி மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள்

50

அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு எந்தவிதப் பிரச்சினையுமின்றி சுமுகமாக நடைபெற்று வருகிறது.

300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இன்று தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதே போன்று அசாம், கேரளா மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.