சிறீலங்கா அரசாங்கங்களின் தமிழின அழிப்பு ஆதாரங்கள் பிரான்சு பாராளுமன்றம் முன்பாக

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு மாறிமாறி வந்த சிங்கள அரசாங்கங்களால் நடத்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு அதன் உச்சக்கட்ட கொடுரத்தை முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்று அரங்கேறியுள்ளது.மனித குலத்துக்கு எதிரான போர் என்று ஐநாவின் மனித உரிமை அமைப்புக்களே வர்ணிக்கும் முள்ளிவாய்க்கால் போர்க்குற்றாவாளிகள் இனப்படுகொலையாளிகள் இன்னமும் சர்வதேச நீதிக்கு முன் நிறுத்தப்படாமல் உலகத்தின் வல்லரசு நாடுகளின் பனிப்போரை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளும் நிலையே காணப்படுகின்றது.இதன் காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சர்வதேச நீதிகோரி போராடும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதி தாமதமடைந்தே செல்கின்றது.ஐநாவில் இம்முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான சாட்சியங்கள் ஆதாரங்களை சர்வதேசத்தின் முன் வைத்துப் போராடும் செயற்பாட்டை கடந்த பல ஆண்டுகளாக பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன முன்னெடுத்துவருகின்றன.தற்பொழுது பிரான்சில் அனைத்துஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்த போராட்டம் நடைபெறுகின்றது.

அந்தவகையில் பிரான்சு பாராளுமன்றம் முன்பாக வாராந்தம் புதன் நாளில் தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பார்வைக்கு வைத்து பரப்புரையும் நீதி கோரும் செயற்பாடும் நடைபெற்று வருகின்றது.ஒரு நாட்டின் பாராளுமன்றத்திற்கு முன் காணப்படுகின்றன சிங்களப் பேரினவாத்தின் இனப்படுகொலை முகங்கள் பிரான்சு நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தை பெறும் என்பதில் ஐயமில்லை.