செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் வள்ளிபுனத்தில்.

189

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். 

முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் .! செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது. “பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்?