ஈழ நெருப்பை விதைத்த தவமுனி! மதுரை ஆதீனத்தின் பிரிவு மாமலை ஒன்றின் சரிவு! கவிஞர் காசி ஆனந்தன்.

129

தமிழ்நாட்டில் ஈழ நெருப்பை விதைத்த தவமுனி!
மதுரை ஆதீனத்தின் பிரிவு மாமலை ஒன்றின் சரிவு!
கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்


மதுரை ஆதீனம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாதவர். தமிழ்நாட்டு
மக்களிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறிமுகப்படுத்திய மாபெரும் விடுதலையாளர்.
இன்று 20 அகவையில் முகநூலிலும் – இணையத்தளத்திலும் புலிகள் பற்றி முழங்கும்
இளைஞனுக்கு – மதுரை ஆதீனம் 292 ஆவது மகா சன்னிதானம் அருணகிரிநாத ஸ்ரீ
ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
37 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனம் அவர்களோடு இணைந்து நான் ஊட்டி – குன்னூர் –
கோத்தகிரி உள்ளடங்கிய பல சிற்றூர்களில் புலிகளை மக்களுக்கு அறிமுகம் செய்து
இயக்கத்தை முழு மூச்சோடு கட்டி வளர்த்த நினைவு நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.
உலகப் பற்றுக்கள் அனைத்தையும் துறந்த அவர் – தமிழையும் தமிழினத்தையும் துறக்காத
உயர்தமிழ் நெஞ்சினர்.
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மதுரை ஆதீனம் அவர்கள் மீது வைத்திருந்த பாசம்
தனியானது.
அரசின் இசைவு பெற்றுத் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை ஒரு பொதுக்கூட்டத்தில் –
மக்களிடையே காட்டி – ‘எங்களிடமும் துப்பாக்கி இருக்கிறது என்பதைச் சிங்கள
ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விருப்புகிறேன்’ என்று ஒடுக்குமுறைச் சிங்கள இன
வெறியர்களுக்கு அறைகூவல் விடுத்தவர் மதுரை ஆதீனம்.
இன்று தமிழ்நாட்டு மக்களிடையே ‘ஈழவிடுதலை’ பற்றி ஓரளவு தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
அன்று இந்நிலை இல்லை. ‘தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குப் பிழைக்கப் போன
தமிழனுக்கு அந்த மண்ணில் என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்பவர்களாக தமிழ்நாட்டில்
உள்ள பலர் வரலாறு தெரியாதவர்களாய் இருந்தார்கள்.
மதுரை ஆதீனம் தமிழ்நாட்டு மேடைகளில் ஈழ வரலாற்றை மக்களுக்கு விளக்கினார்.
ஒப்பற்ற தமிழ்நாட்டின் தலைவரான பழ.நெடுமாறன் அவர்களும் – மதுரை ஆதீனம் அவர்களும்
நானும் – பல மேடைகளில் ஒன்றாகவே உரையாற்றிய காலம் அது.
புலியின் உறுமலாய் – புயலின் வெடிப்பாய் மதுரை ஆதீனம் அவர்களின் முழக்கம் தமிழக
மக்களைப் புரட்டி எடுத்தது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் வேர் ஊன்ற நீர் விட்டவர் மதுரை ஆதீனம்.
புலிகளை வைத்துத் தன்னை வளர்த்தவர் அல்லர் – தன்னை வைத்துப் புலிகளை வளர்த்தவர்.
2009க்குப் பின்பு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர் வழங்கிய அருளுரையை இங்கே
பதிவு செய்கிறேன்.
‘தமிழீழ விடுதலை இறைவனால் நிச்சயிக்கப்பட்டது. நம்பியிருங்கள் – காத்திருங்கள் தமிழீழ
விடுதலை மலரும்.’

மதுரை ஆதீனம் அவர்களின் மறைவுக்கு – அவரோடு 40 ஆண்டுகள் காலம் பழகும்
வாய்ப்பினை இறைவன் அருளால் பெற்ற நிறைவோடு – மனம் கசிந்து கொட்டும் கண்ணீரை
அஞ்சலியாய் வைக்கிறேன்.


தவத்திரு மதுரை ஆதீனம் அவர்களுக்குத் தமிழீழ மக்களின் ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

கவிஞர் காசிஆனந்தன்
தலைவர்,
ஈழத் தமிழர் நட்புறவு மையம்