முதலில் குடும்பக் கட்டுப்பாட்டை செய்யுங்கள் பின்னர் பிள்ளை பெறலாம்.

965

கஸ்ரோ அண்ணா அன்று சொன்னது இன்றும் நடக்கிறது. இந்தியாவின் கோடரிக்காம்புகளோடு மேற்குலகின் புல்லுருவிகளும் சேர்ந்துகொள்கிறார்கள்!

இந்தியாவோடு சேர்ந்து இரண்டகம் புரிந்துவிட்டு, பின்னர் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக தேசியத் தலைவரிடம் தமிழ்த் தேசிய அங்கீகாரம் பெற்றுத் தம்மைப் புனிதர்களாக்கிவிட்டு, தற்போது மீண்டும் முருங்கையில் ஏறும் வேதாளங்கள் போலச் செயற்படும் முன்னாள் ஆயுதக்குழு கோடரிக்காம்பு அரசியல் வாதிகளோடு மேற்குலகில் வலம்வரும் சில புல்லுருவிகளும் பதின்மூன்றுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளது.

அறப்படித்தவன் கூழ்ப்பானைக்குள் விழுந்து கிடந்து கதை அளக்கும் நிலையில் ஒரு சிலர் புத்திஜீவிகள் என்ற போர்வையில் மேற்கு நாடுகளில் வலம் வருகிறார்கள். இவ்வாறு ஒரு நிலை 2009 இற்கு முன்னரும் இருந்தது என்பதை புலம்பெயர் சமூகத்தின் நடவடிக்கைகளுக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்த மணிவண்ணன் (காஸ்ரோ) அண்ணா அன்றே தனது செயற்பாட்டாளர்களுக்குச் சொல்லி வைத்திருந்தார். அவர் அன்று சொன்னது இன்றும் அதேபோன்ற வேறு வடிவங்களில் நடைபெறுகிறது.

இதை நேரடியாக எங்கள் மக்களுக்கு அம்பலப் படுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம். எவரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவது எனது நோக்கம் அல்ல. காணொளி ஆதாரத்தோடு மக்களுக்கு முன் எடுத்துச் சொல்லவேண்டியது எனது கடமை.

ஜெனீவாவிலும் ஐரோப்பாவின் பல இடங்களிலும் எமது மக்களின் உரிமைக்காகவும் நடந்தேறிய இன அழிப்புக்கு நீதி வழங்குமாறும் போராட்டத்தை முன்னெடுத்துவரும் எனக்கு, இந்த புதிய ஒளிவட்டம் காட்டும் புத்திசீவிகள் ஒரு நாளும் புலம்பெயர் களத்தில் தென்பட்டதில்லை.

சிறீலங்கா அரசின் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதியை நிறுவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டிய இந்த நேரத்தில் பதின்மூன்றுக்குப் பின்னால் எந்த வகையிலும் நாம் போகமுடியாது.

1987 இல் களத்தில் நின்ற ஒரு போராளியாக நான் பல விடயங்களை எமது மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2009 இன அழிப்பைக் கண்டு அதற்காக நீதி கேட்டு அற வழியில் பயணிக்கும் ஒருவனாக நான் முன்வைக்கும் கருத்துகளைப் பொறுமையாகக் கேட்டு முடிவெடுங்கள்.

நீதிக்காகத் தொடர்ந்தும் நாம் உறுதியோடு பயணிப்போம்!