இனப் படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பின் ஜெனிவா தீர்மானம்!

117

இனப் படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பின் ஜெனிவா தீர்மானம்

ஜெனிவாவில் 12ம் திகதி செப்டம்பர் மாதம் மாபெரும் ஒன்றுகூடல் நடைபெற்றது. அன்றைய தினம் இனப் படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு பின்வருமாறு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தனர்.

ஈழத் தமிழர்களையும் இலங்கை தீவையும் மட்டுமல்ல உலகலாவிய மனிதகுலத்தை பொறுத்தவரையிலும் இலங்கைத் தீவில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் மிகவும் முக்கியமானது.

பொறுப்புக் கூறலின் முக்கியத்துவத்திற்கு மேலாக எந்த சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் என்பது மிகவும் முக்கியமானது. இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு தாயகத்திலிருந்து இது குறித்து ஆழமான ஆய்வுக்கும், நிலைப்பாட்டிற்கும், செயற்பாட்டிற்க்குமான ஏது வகையை முதற்கட்டமாக பாரம்பரிய தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு கடந்த ஜீலை 23ம் நாள் அன்று கருப்பு ஜீலை நினைவேந்தலில் அழைப்பாளர்களாக இணைந்து அறிவித்திருந்தோம்.

எமது ஆய்வுகளும் தயார்படுத்தல்களும் நடைமுறை சிக்கல்களால் தாமதங்களோடு ஆனால் பொறுத்தமான ஓர் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்றது. இந்த நிலையில் ஜெனிவாவில் எமது நிலைப்பாட்டையாவது குறைந்த பட்சம் முன்வைக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கே நடைபெறும் தமிழர் முன்னெடுப்புக்கு பலம் சேர்க்க தாயகத்திலிருந்து நாம் கலந்து கொள்கின்றோம்.

இத் தருணத்தில் எமது தற்போதைய நிலைப்பாட்டை இங்கே அழுத்தம் திருத்தமாக முன்வைக்க விரும்புகின்றோம். சர்வதேச குற்றங்களில் தலையாய குற்றம் இன அழிப்பு. இந்த பெருங்குற்றத்தை கண்டறியாமல் அதை முறையான ஒரு சர்வதே விசாரணைக்கு உள்ளாக்காமல் போர் குற்றங்களையோ, ஏனைய மாந்தர்துவத்திற்கு எதிரான குற்றங்களையோ மட்டுமே குற்றங்களாக கருதுவது அடிப்படையில் தவறான அணுகுமுறை.

இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு முதற்கட்டமாக தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக 1948ம் ஆண்டுக்கு முன்னரே கட்டவிழ்க்கப்பட்ட ஒன்று. ஈழத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு கிழக்கின் பிரதேச ஒருமைப்பாட்டை உடைக்கும் நோக்குடன் அதாவது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்ற நோக்குடன் வலிந்து மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் 1948 க்கு முன்னரே குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதிகளிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ் சேனநாயக்கா பிரித்தானிய அரசின் காலத்திலேயே இந்த திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு வித்திட்டிருந்தார்.

அதைப்போலவே பின்னர் ஒட்டுமொத்த தீவிலும் தமிழ் மக்களின் குடித்தொகையை குறைக்கும் நோக்குடன் மலையக தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நேரடி இனப்படுகொலை தாக்குதல்களாகவும் விரிவடைந்தது.

இந்த நீளிய இன அழிப்பு வரலாற்றை சரியாக அடையாளம் கண்டு அது எந்த குற்றம் என்பது தெளிவாயிருந்து சர்வதேச நீதி கோரப்பட வேண்டும். இலங்கைத் தீவில் நடைபெற்றது மட்டுமல்ல தொடர்ந்தும் நடைபெறுவதும் இன அழிப்பு என்பதை சர்வதேச அரசியலில் ஈடுபடும் நாடுகள் ஏற்றுக்கொள்ளவோ, கண்டறியவோ, விசாரிக்கவோ தயாராக இல்லை என்பதற்காக ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் மட்டுமல்ல முழுத் தீவின் இஸ்லாமிய மக்களில் 2/3 பங்கினரை வடக்கு கிழக்கு பாரம்பரிய தாயகத்தில் கொண்டுள்ள முஸ்லீம் மக்களும்  அடையாளம் கண்டிருப்பதும் அதற்கான பொறுப்புகூறலை கோருவதிலும் ஒன்றினைய வேண்டும்.

பாரம்பரிய தாயகம் எவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளதோ அதற்கு ஈடாக மலையக தமிழ் மக்களும் மிக மோசமான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஆழமானதோர் உண்மை. பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்ட அரசியலின் போது மலையக தமிழ் மக்களுக்கு காலப்போக்கில் குடியுரிமை வழங்கப்பட்டாலும் அவர்கள் நில உரிமையற்ற மக்களாகவே வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இன அழிப்பு என்ற சர்வதேச பெரும் குற்றம் நடைபெற்ற தொடர்ந்தும் நடைபெருகின்ற ஒரு நாட்டில் அதற்கு உள்ளாக்கப்பட்டுள்ள எதிர்காலத்தில் உள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அனைத்து தரப்புகளும் குறித்த குற்றம் தொடர்பாக கருத்து ஒருமிக்க வேண்டும். இதற்கான அறிவு போதாமல் இருக்கின்றது. இந்த அறிவு தமிழ் மொழியில் உருவாக்கப்பட வேண்டும்.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் அமர்வில் இன அழிப்பு என்ற குற்றம் முறையாக கண்டறியப்பட வேண்டியதன் அவசியத்தை சர்வதேச அரசியலின் போக்குகளுக்கும் அப்பாற்பட்டு நின்று வலியுறுத்த வேண்டும். அறிவுக் குறைவினாலும், சர்வதேச மற்றும் உள்ளூர் தேர்த்தல் அரசியல் போக்குகளாலும், சந்தர்ப்பவாத அரசியலாலும், வளக்குறைவினாலும், ஒற்றுமையற்ற தன்மையாலும், தமிழர் தரப்பு தமது கருத்தை வலுவாக முன்வைக்க தவறி வருகிறது கவலைக்குரியது. ஆகவே இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு தாயகத்தில் கருத்தியலை முன்னெடுக்க ஆரம்பிக்கின்ற இத் தருணத்தில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 51வது அமர்வில் பின்வரும் நிலைப்பாட்டை தமிழர் தரப்பு என்ற பெயரில் இயங்கும் அனைவரும் வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். 


1).  மனித உரிமை பேரவையின் எதிர்கால தீர்மானங்களும், செயல்வடிவங்களும் இலங்கைத் தீவில் இன அழிப்பு குற்றம் குறித்த கண்டறிதலை முக்கியத்துவப்படுத்த வேண்டும்.  ஏற்கனவே போர் குற்றங்களும், மாந்தர்த்துவத்திற்கு எதிரான குற்றங்களும் நடைபெற்றுள்ளமையை அலுவலக விசாரணை கண்டறிந்துள்ளது. ஆனால் இன அழிப்பு என்ற பெரும் குற்றம் கண்டறிதல் நேரடியாக இதுவரை வெளிப்படவில்லை.

*2). சாட்சிய பொறிமுறை ஒன்று 46/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அது பெருங்குற்றத்திற்குரிய சர்வதேச விசாரணைக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கும் வகையில் அமைக்கப்படவில்லை. ஆகவே அதன் தரம் உயர்த்தப்பட்டு அலுவலக விசாரணை பொறிமுறையாக அன்றி பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச சாட்சியாக பொறிமுறையாக உருவாக்கப்பட வேண்டும். 


3). பொறுப்புக்கூறலை வேறு எந்த அரசியலோடும் கலக்கக்கூடது. இன்று தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையை காரணம் காட்டியோ, சர்வதேச சூழலை காரணம் காட்டியோ, இலங்கைத்தீவின் புவிசார் அரசியலை காரணம் காட்டியோ பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம் எதுவிதத்திலும் பாதிக்கப்படலாகாது. இலங்கை அரசு மனித உரிமை பேரவையிலிருந்தே முழுமையாக பொறுப்புக்கூறலை அகற்றிவிட வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழர் தரப்போ, சர்வதேச தரப்புகளோ இடமளிப்பது ஆபத்தானது. ஆகவே ஒரு விடயத்தில் தமிழர் தரப்பு தெளிவாக இருக்க வேண்டும். இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், இன அழிப்பை மையப்படுத்திய இலங்கை அரசும், அதன் சிங்கள பௌத்த பேரினவாதமுமாகும். ஆதலால் அரசியல் தீர்வு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், பாரம்பரிய தாயகத்தில் அவர்களுக்கான இறைமையையும் அங்கீகரிப்பதாக அமைய வேண்டும் என்ற கருத்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தப்பட வேண்டும். அதேவேளை பொறுப்புக்கூறல் குறிப்பாக இன அழிப்புக்கான பொறுப்புக்கூறல் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் கூட தமிழர் தரப்பால் கைவிடப்படலாகாது. இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் இனப் பிரச்சினைக்கான தீர்வும் இரண்டு சமாந்தரமான தனிவேறான வழிவரை  வரைபடங்களோடு முன்னெடுக்கப்பட வேண்டியை. ஒன்றுக்காக மற்றொன்றில் விட்டுக் கொடுப்போ முக்கியத்துவ மாற்றமோ செய்யப்படுதல் என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை. இந்தக் கருத்தை நாம் அனைவரும் உணர்ந்து சர்வதேச தரப்புகளுக்கு வலியுறுத்த வேண்டும். சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பது பல முன்னேற்றங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டியது. இதில் ஒரு தனித் துறையாக உரிய முக்கியத்துவத்தோடு தமிழர் தரப்பு அணுக வேண்டும். இதிலே தமிழ்நாட்டிற்கும் மிகுந்த ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழ்நாடு அதை சரிவர இதுவரை புரிந்துகொள்ளவில்லை என்பது   ஈழத் தமிழர்களுக்கு வேதனை தருகின்றது. ஆகவே தமிழ்நாட்டிற்கு முக்கியமான ஒரு செய்தியை ஈழத் தமிழர் சார்பாக இத்தருணத்தில் நாம் முன்வைக்க விரும்புகின்றோம். ஈழத்தமிழர் மீதான இன அழிப்பை இலங்கை தீவு சார்ந்த ஒரு விடயமாக நோக்குவதும், ஈழத்தமிழர் மீதான இரக்கத்தோடு அதனை அணுகுவதுமாகவே தமிழ்நாட்டின் அணுகுமுறை இதுவரை இருந்து வந்துள்ளது. இந்த மனநிலையிலிருந்து தமிழ் நாட்டின் அணுகுமுறையினை தரம் உயர வேண்டும். ஈழத்தமிழர் மீதான இன அழிப்பை தடுத்து நிறுத்தப்படாமைக்கு தமிழ்நாட்டிற்கும் பொறுப்பு உள்ளது. 
1. பிராந்திய வல்லாதிக்கமான இந்தியா நாட்டின் ஒரு அங்கமான தமிழ் நாட்டிற்கு இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஒரு பாரிய பொறுப்புள்ளது. 


2. ஈழத்தமிழர் தேசத்தின் மீதோ அன்றேல் ஈழத்தமிழ் தேசியத்தின் மீதோ மட்டுபடுத்தப்பட்ட ஒரு பேரினவாதத்தின் வெளிப்பாடு அல்ல ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு. தமிழ் நாகரிகத்தின் மீதான இன அழிப்பாக ஈழத்தமிழர் மீதும் தமிழ் பேசும் மக்கள் மீதும் நடைபெறும் நீளிய இன அழிப்பை தமிழ்நாடு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேட்ப செயற்பட வேண்டும்.

இலங்கைத் தீவில் நடைபெற்ற இனப் படுகொலை, இன அழிப்பு, நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மாந்தர்த்துவத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் திட்டமிட்ட நீளிய இன அழிப்பின் பாகங்கள் என்பதை ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள், கடல் தாண்டி அருகே எண்பது மில்லியன் மக்கள் தொகையோடு வாழும் தமிழ்நாடு ஆகிய அனைத்திற்கும் உரியது. 


இறுதியாக சிங்கள மக்களுக்குரிய பொறுப்பு என்ன என்பதை இத் தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கைத் தீவின் தொடர்ந்து வந்த அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் பேரினவாத போக்கில் இயங்கியமைக்கும் எந்த நிலை வந்தாலும் தொடர்ந்தும் அவ்வாறு இயங்கும் நிலை தீவில் தக்க வைக்கப்படுவதற்குமான சமூகப் பொறுப்பு சிங்கள மக்களுக்கு உண்டு. பதினெட்டு மில்லியன் சிங்கள மக்களில் விரல்விட்டு எண்ணி விடக்கூடிய சிலரே இன அழிப்பு என்ற பெருங்குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராக உள்ளனர்.

இலங்கை அரசின் இன அழிப்பை பொறுப்புக் கூறலுக்கு உள்ளாக்கி அதிலிருந்து ஓர் உன்னதமான நிலைக்கு தொடர்வதற்க்கு சிங்கள சமூகம் தயாராக வேண்டும். அவ்வாறு தயாராகாத வரை நல்லிணக்க அரசியலைப் பற்றியோ, பன்மைச் சமூகத்தை பற்றியோ பேசுவதை வெறும் அரசியலாகவே இன அழிப்புக்கு உள்ளாகிய மக்களாகிய நாம் நோக்குவோம். இன அழிப்பு என்பது வெறும் ஸ்லோகத்திற்குரிய ஒரு விடயமல்ல. இனத்திற்குரிய முக்கியத்துவம், பொறுப்பு , இது அணுகப்பட வேண்டிய விதம் ஆகியவற்றில் ஜெனிவாவிலிருந்து இந்தியா, தமிழ்நாடு, சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள் என்று அனைத்து மட்டங்களிலும் இப் பெருங்குற்றத்தின் தனதி உணரப்பட வேண்டும். உரிய முறையில் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். இதை அணுகுவதற்கான பொறிமுறை உரிய முறையில் வகுக்கப்பட வேண்டும்.

இதுவே இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பின் அணுகுமுறையும், செல் நெறியுமாக அமையும். 

.

நன்ற

இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ்