அளம்பில் துயிலுமில்லத்தின் ஆக்கிரமிப்பு சார்ந்த இரண்டாவது பதிவுடன்

257

அளம்பில் துயிலுமில்லத்தின் ஆக்கிரமிப்பு சார்ந்த இரண்டாவது பதிவுடன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தின் ஆக்கிரமிப்பு சார்ந்த இரண்டாவது பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன். (காணொளி இணைப்பு).

இந்த விடயம் தொடர்பாக சிலர் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். இப் பிரபா வர்த்தக நிலையம் கட்டும்வரையில் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?. கட்டிடம் இவ்வளவு உயரமாக கட்டிஎழுப்பும் வரையில் ஏன் நீங்கள் அதனை தடுக்கவில்லை?. என பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டது.அதனை விளக்கும் முகமாக இந்த காணொளி பதிவை முன் வைக்கின்றேன்.

2009ம் ஆண்டு இத் துயிலும் இல்லம் இலங்கை இராணுவத்தினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டது. அதன் பின்பு வெறும் அத்திவாரத்துடனே இத் துயிலும் இல்லம் இருந்தது. அதேநேரம் இந்தக் காணி உரிமையாளர் கொழும்பில் வசிக்கின்றார். அவருடைய பிள்ளைகள் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வசிக்கின்றனர். இக் காணி உரிமையாளருடன் இக் காணி உறுதியினை எழுத்து மூலம் மாற்றி எழுதுவது பற்றி அளம்பில் பிரதேசத்தினை சேர்ந்த ஒரு சில மக்களுடன் முயற்ச்சியினை எடுத்திருந்தோம்.

என்னுடைய நண்பர் முற்றுமுழுதாக செயற்பட்டார். இதற்காக ஒருவரை தூதுவராக அனுப்பியிருந்தோம். அவர் யார் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள். எம்.பி சாந்தி அக்கா ஊடாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் நேரடியாக கொழும்பிற்கு சென்று அவர்களுடன் கதைத்தபோது காணி உரிமையாளர் அந்த காணிக்குரிய பெறுமதியினை தந்துவிட்டு காணியை முழுமையாக எடுங்கள் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாக என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவரும் உரிமையாளருடன் பேசியிருந்தார். அதனை இன்னொரு பகுதியிலிருந்து நானும் கேட்டு ஆலோசித்துருந்தோம். இவ்வாறு அந்த காணியை மீட்பதற்கான சகல வேலைகளும் நாங்கள் செய்திருந்தோம்.

ஏன் என்றால் சில துயிலும் இல்லங்கள் அரச நிறுவனங்கள் சார்ந்த பகுதிகளுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் அமைந்திருந்தது. ஆனால் இத் துயிலுமில்லம் தனியாருடைய காணியில் இருப்பதனால் வாங்குவது இலகுவாக இருக்கும் என்று முயற்ச்சி எடுத்திருந்தோம். இதில் சாந்தி அக்கா தன்னால் முடிந்தளவு சகல முயற்சிகளும் மேற்கொண்டிருந்தா. அது மட்டுமன்றி முல்லைத்தீவினை சேர்ந்த ரவிகரன் அண்ணாவும் முழுக்க முழுக்க உறுதுணையாகவும் இருந்தார். இன்னொரு விடயம் என்னவென்றால் சாந்தி அக்கா கொழும்புக்கு சென்று காணி உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்பு அளம்பிலை சேர்ந்த இன்னொரு குடும்பத்துடன் இரகசிய சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். அந்த நேரம் கோத்தாபாயாவின் ஆட்சிக்காலம் என்பதால் இந்த இரகசிய சந்திப்பு நடைபெற்றது.


அதன் பின்னர் இந்த காணியை இராணுவத்தினர் முழுமையாக ஆக்கிரமிப்பதற்காக காணியை அளப்பதற்காக 20ம் திகதி 10ம் மாதம் 2018ம் ஆண்டு நில அளவை திணைக்களத்திலிருந்து அதிகாரிகள் வந்த போது அதனை எதிர்த்து சாந்தி அக்கா, ரவிகரன் அண்ணா மற்றும் அங்கு வாழ்கின்ற மக்கள் சிலர் அங்கே ஒரு போராட்டத்தினை நடத்தினர். அதன் பின்னர் 10ம் திகதி 7ம் மாதம் 2019ம் ஆண்டும் இதே போன்று இன்னொரு பிரச்சினை காரணமாக போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இதற்குரிய ஆதாரமும், அதேநேரம் பிரபா வர்த்தக நிலையம் இருக்கின்ற காணி எவ்வாறு இருந்தது என்றும் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் பின்னரே இந்த காணியில் அத்திவாரம் வேகமாக எழும்பியது. அந்த காலகட்டத்தில் கோவிட்-19 என்ற காரணத்தினால் யாரும் வெளியில் செல்ல முடியாத ஒரு காலகட்டம் அந்த வேளையில்தான் தனிநபர் பிரபாகரன் என்பவர் இந்த வர்த்தக நிலையத்தினை கட்டுகின்றார். அக் காணியிலிருந்த வித்துடல்களை டோசர் (Doser)இயந்திரங்கள் ஊடாக முற்றுமுழுதாக அழிக்கிறார். இப்பவும் நாங்கள் சொல்வது தவறு செய்வது மனிதர்களுடைய இயல்பு எனவே இத் தவறினை நீங்கள் உணர்ந்து அந்த இடத்தினை நீங்கள் மீளளிக்க வேண்டும். எத்தினை ஆயிரம் மாவீரர்களை இழந்து அந்த மக்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கும் போது நீங்கள் செய்தது தவறு. அதனை உணர்ந்து அந்த மாவீரர்களின் பெற்றோரின் கையில் இக் காணியனை நீங்கள் ஒப்படைக்க வேண்டும் என்பதனை உங்களுக்கு நாங்கள் தெளிவாக கூறிக் கொள்கின்றோம்.


மேலும் இந்த காணொளியை முழுமையாக பார்த்தீர்களேயானால் மாவீரர் பெற்றோரின் கவனயீனமா அல்லது தனிநபரான பிரபாகரன் அவர்கள் இந்த காணியை விலை கொடுத்து சுவீகரித்தாரா என்பது உங்களுக்கு விளங்கும்.
தமிழீழ விடிவுக்காய் தம் உயிரை தியாகம் செய்த அந்த மாவீரச் செல்வங்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என அனைவரும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் திகதி கண்ணீர் சிந்தி தமது சோகங்களை வெளிப்படுத்தி ஈகைச்சுடர் ஏற்றி அவர்களுக்குரிய அஞ்சலி செலுத்துவதற்காக நீங்கள் அந்த இடத்தினை விட்டுத்தர வேண்டும்.

இதில் மாவீரர் குடும்பங்களின் தவறு அல்ல காணியை சுவீகரித்த உங்களின் தவறு. அந்த தவறினை உணர்ந்து அந்த காணியினை விட்டுத்தர வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் இதனை மீளளிப்பதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொண்டு நாங்களும் எங்கள் பதிவுகளிலிருந்து விடைபெற்றுச் செல்கின்றோம் என்பதனை கூறிக் கொள்கின்றோம்.

நன்றி
வணக்கம். மனித உரிமை செயல்பாட்டாளர். ம .கஜன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தின் ஆக்கிரமிப்பு சார்ந்த இரண்டாவது பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன். (காணொளி இணைப்பு).

இராணுவத்தினர் முழுமையாக ஆக்கிரமிப்பதற்காக காணியை அளப்பதற்காக 20ம் திகதி 10ம் மாதம் 2018ம் ஆண்டு நில அளவை திணைக்களத்திலிருந்து அதிகாரிகள் வந்த போது அதனை எதிர்த்து சாந்தி அக்கா, ரவிகரன் அண்ணா மற்றும் அங்கு வாழ்கின்ற மக்கள் சிலர் அங்கே ஒரு போராட்டத்தினை நடத்தினர்.