அடையாளங்களும் அழிப்புக்களும் அளம்பில் துயிலும் இல்லங்களையும் விட்டுவைக்கவில்லை.

391

அடையாளங்களும் அழிப்புக்களும் அளம்பில் துயிலும் இல்லங்களையும் விட்டுவைக்கவில்லை.

தமிழினம் உலகின் மூத்த இனம் என்பதை உறுதி செய்ய இன்னமும் தேடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.அகழ்வாராய்ச்சிகளில் தடயங்கள் கிடைக்கும் போதெல்லாம் தமிழினம் மகிழ்கின்றது.மார்தட்டிக்கொள்கின்றது.இன் றைக்கும் தமிழன் தலைநிமிர்ந்து இருப்பதற்கும் தமிழன் என்று சொல்லி பெருமை கொள்வதற்கும் காரணம் எமது மூதாதையர்கள் விட்டுவைத்த எச்சங்கள்தான். அன்னியர்களாலும் இயற்கையாலும் அழிந்ததுபோக எஞ்சியவைதான் இன் றைக்கு தமிழனுக்கு பலமாய் இருக்கின்றன.

அன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழினம்.தன் வாழ்வில் எல்லாச்சந்தர்ப்பத்திலும் பண்பாட்டு ரீதியாக தன் அடையாளங்களையும் தனித்துவத்தையும் நிலைநாட்டி காத்து வந்துள்ளது.பண்டிகைகள் தொடக்கம் பழக்கவழக்கம் கட்டிடங்கள் எல்லாவற்றிலும் தமிழின அடையாளம் வெளித்தெரிந்தது.அதன் வழி தமிழினத்தின் புகழுக்கு காரணமான போரும் அதன் வாழ்வியலும் கூட தனித்துவ அடையாளங்களை கொண்டவை.இன்றைக்கு நாம் கண்முன்னே காணுகின்ற சேதி.எகிப்தியர்களின் பண்பாடாக காணப்படும் மம்மி கல்லறைகள்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழுதுபட்டுப்போகாமல் புதைக்கப்பட்ட அன்றைய மனிதர்களின் உடல்கள் இன்றைக்கு அறிவியலாளர்கள் ஊடாக வியக்கத்தகு மனிதர்களை பற்றியும் அவர்தம் இராச்சியம்.நுட்பங்கள் ஆடை அணிகலன்கள் மருத்துவம் போன்றவற்றை பற்றியும் வெறும் பிணங்களாய் கிடந்தே பேசுகின்றன.அதுதான் அடையாளங்களை காப்பதில் உள்ள வலிமை.

தமிழினத்துக்கும் அவ்வாறான தனித்துவங்கள் இருந்தன.குறிப்பாக போரில் மரணித்த வீரர்களுக்கு செதுக்கி நட்ட நடுகற்கள் அவற்றில் பொறித்த வாசகங்கள் .கல்வெட்டுக்கள் .கோயில்கள் கோபுரங்கள் இவையாவும் காலம் கடந்தும் பேச வல்லன என்பது அன்று புரிந்துகொண்டே உருவாக்கப்பட்டன.இன்றைக்கு தமிழினத்துக்கு உலகமெங்கும் பலமாய் இருக்கும் ஆதாரங்கள் அவை.இன்றைக்கு உலகை வியக்கவைக்கும் ராஜராஜசோழனின் தஞ்சை பெருங்கோபுரம் தமிழனுக்கு என்றும் தலைநிமிர்வு நூற்றாண்டு கடந்தும் அந்த கோபுரம் தமிழனுக்கு பெரு அத்திபாரம்.ஈழத்தமிழர்களை பொறுத்த மட்டிலும் தமிழர் தாயகமெங்கும் பரந்து கிடக்கும் தொல்பொருள் சின்னங்கள் தமிழினம் வாழ்ந்ததை செப்பி நிற்கின்றன.அதை பின்வந்த தொல்பொருள் ஆய்வியலாளர்கள் பத்திரப்படுத்தியதும்.

அவை பற்றிய ஏராளம் நூல்கள் யாக்கப்பட்டதும் இன்று ஈழத்தமிழருக்கு பலம்.அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஈழத்திலும் தமிழன் தனித்துவமாய் ஆட்சி நடத்தினான் என்பதை எடுத்துரைக்கின்றன.ஏன்அண்மையநூற்றாண்டுகளில் வெள்ளையரோடு போரிட்ட வன்னி மன்னன் இறுதியில் தோற்றதாய் கூறப்படுகின்றபோதும் அப்படி ஒரு அடங்காப்பற்றாளன் வாழ்ந்ததற்கான சான்றை கற்சிலை மடுவில் அவனோடு போரிட்ட ஆங்கிலேயர்களே  அவன் பெயர் பொறித்து நட்ட கல்தான் இன்று வரலாறு பேசிக்கொண்டிருக்கின்றது

அன்னியர்களே தமிழருக்கான சான்றுகளை விட்டுச்சென்றுள்ளார்கள்.வெள்ளையர்கள் நினைத்திருந்தால் பண்டாரவன்னியன் வாழ்ந்ததற்கான தடயங்களே இல்லாத செய்திருக்கவும் முடியும்.ஆனால் ஏதோ ஒரு அறம் காக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி தமிழர்கள் விடுதலைக்காக போரிட்ட சிங்கள படைகளின் மூதாதை மன்னனான துட்டைகைமுனுகூட அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனோடு போரிட்டு இறுதியில் துட்டகைமுனு வெற்றி கண்டபோதும் அனுராதபுரத்திலே எல்லாள மன்னனுக்கு சமாதி எழுப்பி அதை எல்லாளரின் நினைவிடமாக்கி அதற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டுமென்பதில் இருந்து ஒரு அறமும் நிராகரிக்கப்படமுடியாத தமிழனின் வீரமும் புலப்படுகின்றது அல்லவா.மட்டுமன்றி யாழ்ப்பாண இராட்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னரின் மாடங்களும் மனைகளும் இன்னமும் தமிழர் தாயகத்தை உறுதி செய்து காட்சி தருகின்றன. தென் தமிழ் ஈழத்தில் குளக்கோட்ட மன்னரின் ஆட்சிக்கு சாட்சியாக கல் வெட்டுக்கள் கோணேஸ்வரம் என்ற நாயனார்களின் பாடல் பெற்ற பல்லாயிரம் ஆண்டு பழமையான தமிழர் பாரம்பரியம் காக்கபட்டு வந்ததால் தான் இன்றைக்கும் தமிழர் தம் நிலமென்று வாதாட முடிகிறது.


இப்போது நாம் வாழ்ந்த காலத்தில் முப்பது ஆண்களுக்கு மேலாக தமிழர் தாயகத்தில் நடந்த விடுதலைப்போரில் மறைந்து கிடந்த தமிழர்களின் தொன்மை வீரமும் அதன் பண்பாடும் இராச்சிய செழுமையும் மீண்டதை அறிவோம்.தமிழர் தாயகம் தூய தமிழில் இலங்கியதையும் கண்டோம்.மீண்டும் சங்க காலத்திற்கு திரும்பியதான உணர்ச்சியை தமிழர்கள் அனுபவித்ததை மறந்திடமாட்டார்கள்.அதற்கு காரணம் ஒவ்வொன்றிலும் தமிழின தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான படைகள் பிரிவுகள் தனித்துவ தமிழ் அடையாளத்தை நிலை நாட்டிக்கொண்டிருந்தன.

அந்த அடையாளங்களே ஈழத்தமிழர்களுக்கு தமக்கு ஓர் இராச்சியம் வேண்டும்.மீண்டும் சொந்த மண்ணில் தாயகத்தில் சுய ஆட்சி செய்யவேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது.அதில் முக்கியமாக தம் விடுதலைக்காக வீழ்ந்த வீரர்களை போற்றிய விதம் உச்சமானது.தொன்மைத்தமிழர் பண்பாட்டின் வழி அவர்களுக்கு நடுககற்கள் நாட்டப்பட்டன.மாவீரர்களை ஒன்றுசேர தரிசிக்கும் துயிலுமில்லங்கள் ஆலயங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டன.ஒவ்வொரு துயிலுமில்லங்களும் நூற்றுக்கணக்கான கல்லறைகள் நடுகற்களோடு காட்சி அளித்தன.தமிழர்கள் மாவட்டங்கள் எங்கணும் ஒன்றோ இரண்டோ என துயிமில்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.இதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் ஈழத்தமிழர்கள் வாழ்ந்தார்கள் விடுதலைக்காக போரிட்டார்கள் உயிர்துறந்தார்கள் என்ற வலுவான சாட்சி காட்சியாகி நின்றது.

தமிழர்களுக்கு துயிமில்லங்கள் மிகப்பெரும் அடையாளம்.அதனால்தான் வஞ்சகங்களால் தமிழ் மக்களின் ஆயுத விடுதலைப்போராட்டம் ஒடுக்கப்பட்ட  பின்னர் முதல் வேலையாக தமிழர்களுக்கு அடையாளங்கள் இருக்கவே கூடாது என்பதற்காக சிங்களப்  பேரினவாதப்படைகள் துயிமில்லங்களை வேரோடு உடைத்து நொறுக்கி வெற்றுத்தரையாக்கி அதில் தங்கள் பாசறைகளை அமைத்து தங்கி இருந்தன.மாவீரர் நாட்களை அனுட்டிக்க விடாமல் தடுத்தன.ஏனெனில் துயிமில்லங்களும் மாவீரர்நாளும் தமிழர்களின் மிகப்பெரிய பண்பாட்டு கருவூலம் என்பது சிங்கள பேரினவாதத்துக்கு நன்கு தெரியும்.இன்றைக்கு உடைக்கப்பட்ட கல்லறை சிதறல் துண்டுகள் கூட எவ்வளவு வலிமையானது தமிழர்களுக்கு என்பதை இறுதியாக நடந்த மாவீரர் தினம் கூட உலகுக்கு உணர்த்தியுள்ளது.


எனவே துயிமில்லங்களை அடையாள அழிப்புச்செய்வதில் ஒரு புறத்தில் சிங்களப்படைகள்.இன்னொரு புறத்தில் தமிழர்களும் அதில் பங்காளிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான் காலத்துரதிஸ்டம்.துயிலுமில்லக்காணிகள் என்பவை போர் காலத்தில் மாவீரர்களின் ஈகங்களுக்கு மதிப்பளித்து நல்லுள்ளங்களால் கொடுக்கப்பட்டவை.ஆனால் போர் முடிந்த பின் தமிழர்களின் காவலர்களான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பு தமிழர்கள் தாயகத்தில் இல்லாது போனபின் தங்களை காக்க மடிந்த வீரர்களின் கல்லறைகள் நடுகற்கள் இருந்த காணிகளையே விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற மனோநிலை விசமிகளால் ஊக்கிவிக்கப்பட்டுள்ளது.

துயிலுமில்லங்களை விலைக்கு வாங்கி அதன் மேல் வீடும் ஆடம்பர விடுதியும் கடைத்தொகுதியும் கட்டி வாழலாம் என்ற பிறழ்வான மனோ நிலைக்கும் சென்றுள்ள தமிழர்களையும் காணக்கிடைப்பது வேதனைக்குரியது.தமிழர்களை வைத்தே தமிழர்களின் அடையாளங்களை அழித்தொழிக்கும் திரைமறைவு சதிகளின் வெளிப்பாடே இது.தற்போது அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்  அவ்வாறுதான் அடாத்துப்பண்ணப்பட்டுள்ளது.எனவே தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.துயிமில்லக்காணிகளை மாவீரர்களுக்காக வாங்குவதற்காக ஏராளம்பேர் தயாராக உள்ளார்கள்.ஏனெனில் துயிமில்லங்கள் தமிழர்களின் அடையாளம்.எவ்விலை கொடுத்தேனும் அவை காக்கப்படவேண்டும்.

இன்னமும் சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள துயிலுமில்லங்கள் விடுவிக்கப்பட்டு அவை அந்தந்த பிரதேச மக்களால் காக்கப்படவேண்டும்.மாறாக அந்தந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் துயிமில்லக்காணியில் மாடிவீடு கட்டலாம் தோட்டம் செய்யலாம் என்று நினைத்தால்.தமிழன் தமிழனுக்கே வைக்கும் கொள்ளி என்பதை மறக்கக்கூடாது.இன்றைக்கு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு தமிழர் தாயகம் உட்பட்டுள்ளது.குருந்தூர் மலை உட்பட ஏராளம் தமிழர் பாரம்பரிய அடையாளங்கள் பௌத்த சின்னங்களாக மாற்றப்படும்போது.நாமே நமது அடையாளங்களை அழிக்கும் வேலைகளை செய்தாலும் துணைபோனாலும் அது தமிழர்களை வேரோடு பிடுங்க நினைப்பவர்களுக்கு இலகுவாகிவிடும்.எனவே தமிழர் அடையாளங்களை காப்போம்.துயிமில்லங்களை மீட்போம் காப்போம்.

அனைத்து உலக மனித உரிமை சங்கம்

லோகநாதன் மருதையா