அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் மீட்பதற்கான ஆர்ப்பாட்டம்

242

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் மீட்பதற்கான ஆர்ப்பாட்டம்

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் மீட்பதற்கான ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்காக இன்று வன்னி பரப்பிலிருந்தும் யாழ்ப்பாணம் போன்ற பல பகுதிகளை சேர்ந்த பிரதேசங்களிலிருந்தும் அநேகமான மக்கள் பேருந்துகள் மூலமாகவும் ஏனைய வாகனங்கள் மூலமாகவும் பயணித்து அளம்பில் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர். அளம்பில் பிரதேச நகரத்தை சேர்ந்தவர்கள் அங்கே பேச்சு வார்த்தை நடத்தி சில தீர்மானங்களை முடிவெடுப்பதற்காக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


இத் துயிலும் இல்லத்தை அபகரித்த திரு. பிரபாகரன் என்பவர் காணியை (40,00,000) நாற்பது இலட்சம் ரூபாவிற்கு மீளளிப்பதாகவும், அவருடைய வீட்டு எல்லைக்கு உள்ளே உள்ள மாவீரர் வித்துடல் அமைந்துள்ள இடத்தினையும் மீளளிப்பதாகவும் உறுதியளித்தார். ஆனால் அதன் பின்னர் அவருடைய மனைவியின் சகோதரரான (சுகிர்தன் ) என்பவர் அங்கு வந்திருந்த மக்களை காது கொடுத்து கேட்கமுடியாத வார்த்தைகளாலும் சாதி பெயர்களை கூறியும் திட்டினார்.

அங்கு வந்திருந்த காவல்துறையினரும், குற்றப்புலனாய்வு பிரிவினரும் சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தனர் ஆனால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. பின்னர் திரு. பிரபாகரன் என்பவர் மேலும் (20,00,000) இருபது இலட்சம் ரூபா தரும்படியும் கிணறு மற்றும் மலசலகூடம் அமைந்திருக்கும் பகுதியை தரமுடியாது என்றும் மறுத்துவிட்டார்.

ஆர்ப்பாட்டத்துக்கென வந்திருந்த மக்கள் வேறு முடிவெடுக்க முடியாமல் இருந்தவேளையில் அந்த மூன்று வரிசையில் வித்துடல்களை அமைந்துள்ள அதாவது கிணறு மற்றும் மலசலகூடம் அமைந்த இடத்தினை தவிர்ந்த ஏனைய பகுதியினை பெறுவதற்கு (60,00,000)அறுபது இலட்சம் ரூபா வேண்டும் எனவும் அதன் பின்னர் ஒரு மதிலை உடைத்து கட்டுவதற்கு (15,00,000) பதினைந்து இலட்சமும் கேட்டு மொத்தமாக (75,00,000) எழுபத்து ஐந்து இலட்சம் ரூபாவும் எழுத்துகூலிக்கான செலவினை மாவீரர் செயற்பாட்டுக் குழுவினர் தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தற்பொழுது இக் காணியினை அளவிடுகின்ற வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் அந்த மூன்று வரிசைக்குரிய மாவீரர் வித்துடல் இன்னும் வர்த்தக நிலையத்திற்குள் இருப்பதென்பது. ஒரு மனசாட்சியற்ற வர்த்தகரின் செயற்பாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.