பள்ளிக்கூட புத்தகம் பை தூக்க வேண்டிய வயதில் துவக்கு தூக்கி போராட போனதுகள். யாருக்காக

135

பள்ளிக்கூட புத்தகம் பை தூக்க வேண்டிய வயதில் துவக்கு தூக்கி போராட போனதுகள். யாருக்காக

சுந்தரப்பிள்ளை சிவமணி. கொக்குத்தொடுவாய் பகுதியில் வாழ்ந்து 1984 இறுதிக்காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் விரட்டப்பட்டு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் வாழ்ந்து வந்தவர்கள். இந்த அளம்பில் துயிலுமில்லத்தில் குடும்பத்தினர் எல்லோரும் சேர்த்து பதினாறு வித்துடல்களை விதைத்துவிட்டு இன்று கண்ணீரோடு நின்று பேசும் கொக்குத்தொடுவாயை சேர்ந்த தாயாரின் கண்ணீரூடான வாக்குமூலம்.
மனசாட்சி உள்ள மனிதகுலமே இதை கேக்கும் போதாவது மனம் இரங்காதா?.

நாங்கள் 84 ம் ஆண்டு இடம்பெயர்ந்து வந்தனாங்கள். இறுதி யுத்தகாலம் வரைக்கும் அளம்பில்லதான் இருந்தனாங்கள். அளம்பில் உள்ள வரலாறுகள் கூடுதலாக எங்களுக்குத் தெரியும். நாங்கள் அறிஞ்சிருக்கிறம்.

  • இந்த அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில எங்கள் பிள்ளைகளின் வித்துடல் விதைக்கப்பட்டிருக்கா?.

இதில வந்து என்ட பெறாமகன் பிள்ளையை நான் எடுத்து வளர்த்தனான். அந்த பிள்ளையை வளர்த்து நான்தான் கொண்டுபோய் இயக்கத்தில் இணைச்சனான். அந்தப்பிள்ளை போராடி அந்தப்பிள்ளை வீரச்சாவு. இதே துயிலுமில்லத்திலதான் அந்த பிள்ளையை விதைச்சிருக்கிறம். அதைவிட என்ட பெறாமக்கள் அண்ணன்ட பிள்ளைகள், தம்பிட பிள்ளைகள், தங்கச்சிட பிள்ளைக் என்டு மச்சான்மார் அப்பிடி எங்கட உறவுகள் இரத்த உறவுகள் ஒரு பதினெட்டு, இருபது வித்துடல்களை விதைச்சிருக்கிறம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

அம்மா அந்த வித்துடலை விதைக்கப்பட்ட இடங்களை உங்களால் இனங்காட்ட முடியுமா?.

காட்ட முடியும் அதில பள்ளிக்கூட பக்கத்தில வேப்பமரம் ஒன்டு நிக்குது. அந்த அடையாளம் வடிவா தெரியிது. அந்த வேப்பமரத்திலிருந்து இங்கால வீதி பக்கத்திலதான் கூடுதலான வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கு. அதில வந்து இருபத்தேழு வித்துடல் விதைக்கப்பட்ட இடத்தை அந்த துயிலுமில்ல நிலத்தை ஒரு தனிநபர் விலைக்கு எடுத்து
இந்த நிலையியில் ஒரு Foot city கட்டியிருக்கினம். எங்கடை பிள்ளைகளை விதைத்த இடத்தில் வியாபாரம் நடக்குது. அது மட்டுமல்ல அந்த கடைக்கு பின்னால கிணறு கட்டப்பட்டிருக்கு. மலசலகூடம் கட்டி பாவிக்கினம். அதாவது எங்கட பிள்ளைகளை விதைச்ச இடத்திற்கு மேல மலசலகூடம் கட்டி பாவிக்கினம்

. இதுகலெல்லாம் எங்களுக்கு ஒரு வேதனை ஊட்டுற விடயம். ஒரு மாவீரரை பெத்து நாங்கள் அதுகளை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தனாங்கள். அதுகள் பள்ளிக்கூட புத்தகம் பை தூக்கவேண்டிய வயதில் துவக்கு தூக்கி போராட போனதுகள். யாருக்காக போராடினதுகள் எங்களுக்காக எங்கடை இனத்துக்காக தங்களுக்கு பின்னால வார சந்ததிக்காக. அதுகள் தாங்கள் வாழுற வயசு. சந்தோசமாய் இளம்வயசில சந்தோசங்களை அனுபவிக்கிற வயசு. அந்த வயசில வந்து அதுகள் தங்களின்ர ஆசையை, தாய் தகப்பன்ர பாசத்தை, சகோதரத்தின் பாச உணர்வுகளை எல்லாத்தையும் அர்ப்பணிச்சு தங்களுக்கெண்டு ஒரு வாழ்க்கையை தேடுற வயசிலகூட எல்லாத்தையும் அதுகள் தூசு மாதிரி காத்தில விட்டிட்டு துவக்குத்தூக்க போனதுகள் என்டால் ஒரு உணர்வுபூர்வணான பிள்ளைகள். இந்த இனத்திற்கு ஒரு விடுதலையை பெற்றுக் கொடுக்கவேணும் என்பதற்காக தங்களை அர்ப்பணிச்சதுகள். தங்களை அர்ப்பணிச்சு வீரச்சாவடைந்த பிள்ளைகளின்ட வித்துடலுக்கு மேல இன்னொரு மனுசர் வந்து எப்படி கடை கட்டுவினம்?.

எப்படி மலசலகூடம் கட்டி பாவிப்பினம்?. எப்படி கிணறுகட்டி தண்ணி குடிப்பினம்?. இவையும் ஒரு மாவீரர் குடும்பம்தானே?. நான் தெரியாமல் கேக்கிறன் அந்த கடையை கட்டி நடத்திற ஆக்கள் ஒரு தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகள்தானே?. அவர்களும் ஒரு மாவீரர் குடும்பம்தான். இருந்தும் தமிழன் என்ற ஒரு தன்மையை கூட இழந்து இனத்துக்கே ஒரு அவமானமான வேலையை செய்தமாதிரி அந்த இடத்தை விலைக்கு வாங்கினவை. அது துயிலுமில்லம் என்டு தெரியும். துயிலுமில்லத்துக்கெண்டு ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில உடலுகள் விதைக்கப்பட்டிருக்கு என்டு தெரியும். தெரிஞ்சும் அந்த ஊரை சேர்ந்தவரே வாங்கி இப்படி செய்கிறார் என்றால் இது மன்னிக்கப்படாத ஒரு விடயம்.