ஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்!

401
ஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்!
இது ஈழத்தமிழர்களுக்கானது.ஏனெனில் அடையாளங்களை இழந்து இன்று உலகமெலாம் வாழ்ந்துகொண்டு எமது இனத்திற்கு உரித்தான உரிமைகளை பெறுவதற்கு கனவு காணுகின்ற இனத்திற்கானதாய் அமைகின்றது.
ஈழத்தமிழர்களை கடந்து வந்திருக்கின்ற அரைநூற்றாண்டுக்கு மேலான விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஆயுதப்போராட்ட காலத்தில் குறிப்பாக தலைவர் பிரபாகரனை தலைமையாகக்கொண்டு நடத்தப்பட்ட வீரம்செறிந்த போராட்டத்தில் மாண்டு கிடந்த தமிழர்களின் பல்பரிமாணப்பட்ட அடையாளங்கள் மீள உயிர்த்தெழுந்தன.
மொழி கலாச்சார இலக்கிய பௌதீக அடிப்படையிலும் புத்தாக்கல் வழிகளிலும் உலகத்தின் தமிழர்கள் பற்றிய ஒரு முகத்தை அப்போராட்டம் நிறுவப்பாடுபட்டிருக்கின்றது.
குறிப்பாக புரட்சிகர ஆயுதப்போராட்டத்தில் மண்ணுக்காக உயிரை அர்ப்பணிக்கும் மாவீரர்களை ஒட்டிய ஒரு தேசிய கலாச்சார மரபு உருவாக்கம் பெற்றது.
அது இன்றளவிலும் நிலத்திலும் புலத்திலும் மக்களால் ஒரு வாழ்வியலின் இன்றிமையாத சடங்காக நினைக்கப்பட்டு அனுட்டிக்கப்படுகின்றது.
அத்தேசிய அனுட்டிப்பு நாட்களில் தமிழர்கள் பற்றிய ஒரு தோற்றப்பாட்டை உலகத்தின் பல்லினங்களும் உணரும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
அந்த அடையாள உணர்வுத்தளத்தில் இருந்து ஒரு நாடற்ற இனத்தின் ஏனைய கூறுகள் பற்றிய ஒரு ஆராய்வு அல்லது பிரக்ஞை உலக இனங்கள் மத்தியில் ஒரு பொறியாக மனதில் விழுவதற்கு பெருவாரியான வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஒரு விடுதலைப்போராட்டம் சர்வதேச மயப்படுதல் என்பது அப்போராட்டத்தில் செய்யப்பட்ட அர்ப்பணிப்பின் கனதியில் இருந்தே அதிகம் பிறக்கின்றது.
உலகம் அடிமைப்படுத்தப்படும் இனங்களில் விழித்துக்கொள்வது அந்த இனங்களில் குருதியில் அந்த இனங்களின் அகதி வாழ்வில் அந்த இனங்களின் குழந்தைகளின் மரணத்தில் அந்த இனங்களின் பெண்களின் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறையில் என விரிகின்றது.
ஈழத்தமிழினம் உலகம் விழித்துக்கொள்ளக்கூடிய அத்தனை விதமான அர்ப்பணிப்புக்களையும் இழப்புக்களையும் வாழ்க்கையையும் சந்தித்திருக்கின்றது.
இதில் குறிப்பாக இன்று சர்வதேச மையமான ஐநாவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை சார்ந்த விடயம் நாம் மேற்சொன்ன ஒரு இனத்தின் அர்ப்பணிப்பில் இருந்தே மேலெழுகின்றது.
இதுவிடுதலைக்கான படிக்கற்களாக மாறுகின்றது.உலகில் எமது இனம் பேச்சை தொடக்க முகவரியாகின்றது வழியாகின்றது.
இந்த அர்ப்பணிப்புக்களை வைத்து திரும்ப திரும்ப உலகத்தில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நிகழ்வுகளில் எல்லாம் செய்யப்படும் ஒரு வணக்கமுறை கலாச்சாரம் தமிழினம் பற்றிய வரலாற்று படிமத்தை அந்த நாடுகளில் உள்ள பிரஜைகள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.
இந்த அடிப்படையில்தான் போராட்டகாலத்தில் நிலத்தில் தலைவர் பிரபாகரன் மாவீரர் தினம் என்ற தேசிய வணக்க நாள் நிகழ்வையும்.
தியாக திலீபன்………….
அன்னைபூபதி………….
கரும்புலிகள் தினம்……………
பெண்கள் எழுச்சி நாள்………………….
மாணவர் எழுச்சி நாள்………………
  தலைவர் பிரபாகரன் மாவீரர் தினம் என்ற தேசிய வணக்க நாள் நிகழ்வையும் தியாக திலீபன் அன்னைபூபதி கரும்புலிகள் தினம் பெண்கள் எழுச்சி நாள் மாணவர் எழுச்சி நாள் என்பனவற்றை கட்டமைத்திருந்தார்.
சம நேரத்தில் புலம் பெயர் தமிழர் வாழ் நாடுகளில் இயக்கத்தின் கிளைகள் ஊடாக இந்த வணக்க நிகழ்வுகளுக்கு ஊக்குவிக்கப்பட்டன.
அதை எப்பிடி சகல நாடுகளிலும் நிலத்திலும் அனுட்டிக்க வேண்டுமென சுற்றுநிருபங்களும் வெளியிடப்பட்டன.
இவை அனைத்துமே மிகவும் தூரநோக்கோடு ஒரு போராட்ட இயக்கத்தால் கட்டமைக்கப்பட்டது.
ஏனெனில் இந்த ஒவ்வொரு வணக்க நிகழ்வுகள் எழுச்சி நிகழ்வுகளுக்கு பின்னால் ஒரு இனத்தின் அர்ப்பணிப்பு கதையுண்டு.தியாகி திலீபனின் மாலதியின் அன்னை பூபதியின் கதையின் பின்னால் ஈழத்தமிழருக்கும் இந்திய அரசாங்கத்துக்குமிடையில் இருந்த உறவு நிலை கதையுண்டு.
மில்லரின் நாளில் இலங்கை இந்திய ஒப்பந்தம் அதன் அதிகார வரம்புகள் என்ன என்ற ஒரு நினைவுப்பேருரையுண்டு.இவ்வாறே அனைத்தும் ஈழத்தமிழர்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தை முறைகளை வெளி ககொண்டுவருவதன் மூலம் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான கூறுகள் மறைந்திருக்கின்றன.
இன்றைக்கு முள்ளிவாய்க்காலின் போரின் பின் ஈழநிலம் வேறு தோற்றத்தில் உள்ளது.ஈழ நிலம் ஆக்கிரமிப்பாளரின் முழுப்பிடிக்குள் உள்ளது.ஈழநிலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் நிலமீட்பு தொடர்போராட்டங்கள் மாவீரர்நாள் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பதன் மூலமே ஈழநிலத்தின் தணியாத விடுதலை அவாவை உலகறியச்செய்யமுடிகின்றது.
இன்னொரு புறத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சியமான விடயங்களை வைத்து ஐநாவிலும் அந்தந்த நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதி குரலெழுப்பிவருகின்றது.
இந்த நிலையில் விடுதலைக்கான ஊடகங்களாக நிறுவப்பட்ட பல அமைப்புகளில் இன்றைக்கு அங்கு நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் மாவீரர்களை நினைத்து ஒரு அகவணக்கமோ அல்லது ஒரு மலர்வணக்கமோ செய்யப்படாத ஒரு நடுநிலைவாத தோற்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இது தமிழர் மொழி கலாச்சாரம் பேணுவதாக சொல்லப்படுகின்ற இடங்களிலும் வேறு தமிழர் வர்த்தக துறைகள் உள்ளிட்ட பிற தமிழர்களால் நிர்வகிக்கப்படுகின்ற துறைகளிலும் இந்த நடுவுநிலை என்ற கோதாவில் அல்லது ஜனநாயக விரும்பிகள் என்ற முகத்துள் ஒரு இனத்தின் அர்ப்பணிப்பை மறைத்து ஈழத்தமிழினத்தை உலகத்திற்கு அறியச்செய்த இரத்தத்தோடும் குருதியோடும் சம்மந்தப்பட்ட தியாகிகளின் கதையை மறைத்து பயணிக்க முயல்கின்றார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ தன்னினத்துக்கான ஒரு அடையாளத்தை பொத்திவைக்கிறார்கள்.
குறிப்பாக இளைய தமிழ் சந்ததிகள் கல்வி மொழி கலை கலாச்சாரம் கற்கும் புலம்பெயர் மண்ணிலுள்ள அமைப்புக்கள் பள்ளிகள் சிலவற்றில் மாவீரர்களின் தியாகிகளின் வணக்க நிகழ்வுகள் வணக்கங்கள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.
எந்த நாட்டின் சட்ட வரையறையும் இறந்துபோனவர்களுக்கு வணக்கம் செலுத்துவதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற மனிதாபிமானம் அற்ற போக்குகள் இருப்பதாக உணரமுடியவில்லை.
நாமாக நம்முடைய சிலவற்றை புறக்கணிக்கின்றோம்.ஈழநிலத்தினுடைய அர்ப்பணிப்பு வரலாற்றுக்கு உரித்தானவர்கள் பற்றியும் ஏன் அவர்கள் மரணித்தார்கள் எப்படி மரணித்தார்கள் என்ற கேள்விகளை வணக்க நிகழ்வுகள் இளைய சமுதாயத்தின் மனதில் எழவைக்கும்போது வரலாற்றை தாமாக தேடவும் கற்கவும் எமது சந்ததிக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.அத்தகைய வாய்ப்புக்களை கடமைகளை பொறுப்பு வாய்ந்தவர்கள் தவறவிடுகின்றார்கள் என்றே காணமுடிகின்றது.
உலகின் நாடற்றவன் அல்லது ஒதுக்கப்பட்டவன் உலகத்தின் கவனங்கள் ஈர்க்கப்படுகின்ற ஒலிப்பிக்கிலோ அல்லது சர்வதேச நிகழ்வுகளிலோ தன்னை தன் இனத்தை அடையாளப்படுத்த விரும்புகின்றான்.நாடற்ற ஈழத்தமிழினமும் தன்னை நாடுகள் தோறும் அடையாளப்படுத்தவும் தன் சந்ததிக்கு தன்னினத்தின் வரலாற்றை தெளிவுபடுத்தவும் மிகவும் கூர்மை மிக்க சக்தியாக விளங்குவது அர்ப்பணித்தவர்களின் நினைவு வணக்கமுறைகள் சடங்குகள் அதை புலம்பெயர் அமைப்புக்கள் இன்றைக்கு நிலத்தில் ஒரு போராட்ட இயக்கம் தமிழின பலமான கட்டமைப்பு இல்லாத சூழலில் கடைப்பிடிக்கவேண்டியது தூரநோக்கான கடமை.
நிலத்தில் ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் உடைக்கப்பட்ட கல்லறைகள் ஒரு இனத்தின் பெரும் கதையை உலகுக்கு சொல்லும்போது உயிரோடு புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் சில அமைப்புக்கள்  உடைக்கப்பட்ட கல்லறையின் ஆத்மாக்களை வணங்க மறப்பதும் சில இடங்களில் மறுப்பதும் ஏன்!
நன்றி
யுகவண்ணன்
ஆசிரியர்
புனிதபூமி இணையத்தளம்
மட்டக்களப்பு
ஈழம்
SHARE