முதல் பந்தில் மிஸ் பீல்ட்… பிறகு ஹீரோ: இந்திய டி20 வெற்றியில் அறிமுக வீரர் குருணால் பாண்டியா

94

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி மே.இ.தீவுகளின் 109/8 என்ற ரன் எண்ணிக்கையை விரட்டும் போது ஒஷேன் தாமஸ்,தாமஸ், பிராத்வெய்ட் பந்து வீச்சில் சற்றே தடுமாற்றம் கண்டு 4/45 என்று சரிந்து பிறகு தினேஷ் கார்த்திக் (31 நாட் அவுட்), அறிமுக வீரர் குருணால் பாண்டியா (21 நாட் அவுட்) ஆகியோரால் 17.5 ஓவர்களில் 110/5 என்று போராடி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரையும் ஒஷேன் தாமஸ்  தனது மணிக்கு 147 கிமீ மிசைல் வேகப்பந்தில் வெளியேற்ற ராகுல், பந்த், இருவரையும் பிராத்வெய்ட் காலி செய்தார். 45/4 என்ற நிலையில் கார்த்திக், மணீஷ் பாண்டே (19) இணைந்து ஸ்கோரை 83 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது பாண்டேவும் பியர் பந்தில் வெளியேற 83/5 என்று 15 ஒவர்கள் முடிவில் கொஞ்சம் சூழ்நிலை தடுமாற்றம் ஆனது.

ஆனால் தினேஷ் கார்த்திக், அறிமுக வீரர் குருணால் பாண்டியா இருவரும் சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தப் போட்டியில் குருணால் பாண்டியா அதிக எதிர்பார்ப்பில் களமிறக்கப்பட்டார், ஆனால் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிஸ் பீல்ட் செய்து பவுண்டரி விட்டு சொதப்பலான தொடக்கம் கண்டார்.

பிறகு பந்து வீச்சிலும் முதல் ஓவரிலேயே 10 ரன்கள் விட்டுக் கொடுத்தார். லெக் திசையில் 2 லெக் திசை வைடுகளை வீசினார். பிறகு பொலார்ட் ஒரு பந்தை லாங் ஆஃபில் தூக்கி அடித்தார்.

2வது ஓவரில் பொலார்டுக்கு குருணால் பாண்டியாவின் பந்து ஒன்று எல்.பி.முறையீட்டுக்கு வித்திட்டது, ஆனால் நாட் அவுட். அடுத்த பந்தே பொலார்ட் லாங் ஆனில் குருணால் பாண்டியாவின் முதல் விக்கெட்டாக கேட்ச் ஆனார்.

இருவரும் மும்பை இந்தியன்ஸ் தோழர்கள். பாண்டியா பிறகு கூறியது போல், “பொலார்ட் என் சகோதரர் போல். அவர் விக்கெட்டை என் முதல் சர்வதேச விக்கெட்டாக வீழ்த்தியது எனக்குப் பெரிய விஷயம்.  நான் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டேன் என்று அவரை நட்புக் கேலி செய்ததே, அவர் மீது எனக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதே அவர் ஆட்டமிழந்த பிறகு நான் காற்றில் அளித்த முத்தங்கள்.  குருணாலுக்கு விக்கெட் அதன் பிறகு இல்லை, ஆனால் அவர் பவுண்டரிகளும் கொடுக்கவில்லை. 15 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், முதல் ஒவரில் 10 ரன்கள் ஆனால் அடுத்த 3 ஓவர்களில் 5 ரன்கள்தான்.

அதே போல் பேட்டிங்கில் 83/5 என்று ஒருமாதிரியான இரண்டுங்கெட்டான் நிலையில் இறங்கினார் குருணால், மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தார், இவரும் ஆட்டமிழந்திருந்தால் கீழ்வரிசை வீரர்கள்தான் உள்ளனர். ஆனால் முதல் பந்தில் சிங்கிள், பிறகு  வேகமாக ஓடி 2 ரன்கள், பேபியன் பந்தை ரிவர்ஸ் ஷாட்டில் தேர்ட் மேன் பவுண்டரி அடித்தார். பிறகு பியரை ஒரு பவுண்டரி பிறகு கீமோ பால் பந்தை மிட்விக்கெட்டில் பிளிக் பவுண்டரி. பிறகு வெற்றிக்கான ஷாட்டை கவர் மேல் தூக்கி அடித்து 2 என்று அசத்தி 9 பந்துகளில் 21 ரன்கள் என்று சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் முடித்தார்.

SHARE