யாழில் சட்டவிரோத ரயில் கடவைகள் அகற்றப்பட வேண்டும்: பொலிஸார்

71

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ரயில் கடவைகள் நீதிமன்றத்தின் அனுமதியோடு அகற்றப்படவேண்டும் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பொலிஸ்நிலைய கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்ற வீதிப்போக்குவரத்து நடைமுறைதொடர்பான மீளாய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக 5இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் நீதிமன்றத்தின் அனுமதியோடு அகற்றப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட சுமார் 30 இடங்களில் வீதி சமிக்ஞைக்கோடுகள் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்படவேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படின் ஏற்படும் வீதிவிபத்துக்களை குறைக்கமுடியும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபத்துக்கள் அனைத்தும் பிரதானவீதிக்கும், பிரதானவீதிகளை இணைக்கும் இணைப்புவீதிகளிற்கும் அண்மையிலேயே இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாண நகரின் ஸ்ரான்லி வீதி மற்றும் மின்சார நிலைய வீதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் முகமாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸார் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE