புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் – அநுர

99

மைத்திரிபால சிரிசேன – மஹிந்த ராஜபக்ஷ ஆகியாரினால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் அழுத்தங்களையும் விமர்னங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அநுரகுமார திஸநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் சதி திட்டங்கள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் வகையில் நாட்டின் நான்கு முக்கிய இடங்களில் நாளை விழிப்புணர்வு நிகழ்வுகள் மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பில் எதிர்வரும் 12ஆம் திகதி இதுபோன்றதொரு தெளிவூட்டல் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகள்  என பலரும் பங்கேற்கவுள்ளதாகவும் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE