மக்கள் விரோத ஆட்சிக்கு மீண்டும் இடமளிக்க முடியாது – சுமந்திரன்

85

நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மாற்றம் இப்பொழுது முற்றாக தலைகீழாக திரும்பவும் மாறியிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுநாள் நிகழ்வு நேற்று(வியாழக்கிழமை) கொழும்பு புதிய நகரமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான இயக்கம், அதன் மூலமாகத்தான் இந்த நாட்டிலே ஜனவரி 8ஆம் திகதி 2015ஆம் ஆண்டு ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த மாற்றம் இப்பொழுது முற்றாக தலைகீழாக திரும்பவும் மாறியிருக்கின்றது. எந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று நாங்கள் முயன்றோமோ? அந்த அரசாங்கத்தை மீளவும் கொண்டுவருகின்ற குறிப்பாக பின்கதவால் கொண்டு வருகின்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஆகவே அதை தடுப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மாத்திரமே காணப்படுகின்றது. ஆகையினால்தான் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி புதிதாக நியமிக்கப்பட்டிருகின்றதாக சொல்லப்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றதா இல்லையா என்பதை சோதித்து பார்க்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கியதும் இன்னொருவரை நியமித்ததும் அரசியலமைப்பு சட்டத்திலே அவருக்கு அதிகாரம் கிடையாது. 19வது திருத்தத்திலே அது குறிப்பாக விசேஷமாக முன்னர் இருந்த அதிகாரம் நீக்கப்பட்டிருக்கின்றது.

ஆகையினாலே சட்டவிரோதமாக செய்யப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் வாக்களிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.

SHARE