14 ஆம் திகதி ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் இடம்பெற்றால் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் – ஜே.வி.பி.

46

எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் இடம்பெற்றால் நாடாளுமன்றத்திற்கு வெளியில் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தங்களுக்கு பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது என்று கூறுபவர்களே நாடாளுமன்றத்தில் வந்து நிரூபிப்பதற்கு அஞ்சுகின்றனர்.

மஹிந்த தரப்பினரால் ஒரு போதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை வெளிப்படுத்த முடியாது.

19 நாட்களாக நாடாளுமன்றத்தினை ஒத்திவைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சம்பவங்கள் கடந்த நாட்களில் பகிரங்கமாக இடம்பெற்றது. இந்த காலத்தில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பு போதாமையின் காரணமாகவே மேலும் காலதாமதத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது என்று அரசாங்க தரப்பினர் அறியா விடினும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாடாளுமன்றத்தினை கூட்டி அரசியலமைப்பினை செயற்படுத்துங்கள் என்றே அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

ஒருவேளை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் இடம் பெற்று நியாயம் நிலைநாட்டப்படவில்லை எனின் நாடாளுமன்றத்திற்கு வெளியில் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்” என கூறினார்.

SHARE