நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கின் மூன்றாம் நாள் விசாரணை இன்று!

26

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று(வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்த மனுக்களின் இடைநிலை மனுதாரர்களாக முன்னிலையாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பேராசிரியர் சந்தன ஜயசுமன, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த உள்ளிட்ட இடைமனுதாரர்களால் வழக்கிற்குத் தேவையான மேலதிக சான்றுகள் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், நாளைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு ஏற்ப ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமையினால், உயர்நீதிமன்றத்தினால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வ தன்மையை ஆட்சேபனைக்கு உட்படுத்த எவ்வித சட்டபின்புலமும் இல்லை என்பதனால் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE