சபரிமலையில் 18 படிகளில் ஏறி 46 வயதான இலங்கைப் பெண் இரவில் ஐயப்ப தரிசனம்

85

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிந்து, கனகதுர்கா ஆகிய இரு 40 வயதான பெண்கள் சாமி தரிசனம் செய்ததால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 46 வயதான இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் 18 படிகளில் ஏறி சாமி தரிசனம் செய்தார்.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்

சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, வரும் 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது.

இந்நிலையில், 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த இரு நாட்களுக்கு முன் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் நேற்று பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் ஹர்தால் நடத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன, ஏராளமான அரசுப் பேருந்துகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும் கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய சம்பவங்களும் நடந்தன. இந்தப் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சூழலில் நேற்று இரவு 9.30 மணி அளவில் சபரிமலைக்கு இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் 18 படிகள் வழியாக ஏறி ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பியுள்ளார். அவருக்கு போலீஸார் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் சசிகலா என்பதும், அவரின் தந்தை பெயர் அசோக் குமரன் என்றும் போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணிடம் இலங்கை பாஸ்போர்ட் இருந்தது என்றும், அந்த பாஸ்போர்ட்டில் அந்தப் பெண்ணின் பிறந்த தேதி 1972, டிசம்பர் 3-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “ இலங்கையைச் சேர்ந்த சசிகலா என்ற 46 வயது பெண், சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தார். தான் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்றும் அதற்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து அவருடன் போலீஸார் உடன் சென்றனர். ஐயப்பன் கோயிலில் விஐபி செல்லும் பாதை வழியாகச் செல்லாமல் 18 படிகள் மீது ஏறிச்சென்று இரவு 9.30 மணிஅளவில் சசிகலா ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் தரிசனத்தை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு பம்பைக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார். ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டதால், அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்தோம் “ எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சசிகலாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்த போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸார் சாதாரண உடையில் சென்றனர். 18 படிகள் வழியாக செல்லும் பக்தர்கள், ஒரு மண்டலம் விரதம் இருந்து மாலை அணிந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்று கூறப்படும் நிலையில், தற்போது ஒரு பெண் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சபரிமலை கர்மா சமிதி அமைப்பைச் சேர்ந்தவர்கள், மரக்கூட்டம் அருகே நேற்று இரவு போராட்டம் நடத்தினார்கள். 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்று போராட்டம் நடத்தி, தீபா என்ற பெண்ணை வரவிடாமல் தடுத்தனர்.

SHARE