சபரிமலை விவகாரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வீடுகளில் நள்ளிரவில் வெடிகுண்டு வீச்சு

61

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 3 பெண்கள் சென்று தரிசனம் செய்ததையொட்டி நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களில், தலச்சேரி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வீடுகளில் நேற்று நள்ளிரவில் வெடிகுண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டம், தலச்சேரி அருகே மடபீடிகயில் பகுதியில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏல சம்ஷீர் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினார்கள்.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர்கள், பி.சசி, விசார் ஆகியோரின் வீடுகளிலும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

சபரிமலையில் அனைத்து வயதுப்பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற இளம் பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச்சென்றனர்.

இந்தச் சூழலில் கடந்த இரு நாட்களுக்கு முன் இரு பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர், நேற்று இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் அனைவருமே 50வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சபரிமலைக் கோயிலுக்கு நுழைந்து சாமி தரினம் செய்ததைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் கடந்த இரு நாட்களாகப் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவில் நேற்றுமுன்தினம் பாஜக நடத்திய ஹர்தால் போராட்டத்தில் வன்முறை வெடித்து, 80-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சூழலில், தலச்சேரியில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, பிரமுகர்கள் வீடுகளில் மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினனர்.

தலச்சேரி எம்எல்ஏ ஷம்சீர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து ஷம்சீர் கூறுகையில், “ என்னுடைய வீட்டில் பைக்கில் வந்த சிலர் வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர். இது ஆர்எஸ்எஸ் சதி என்று நினைக்கிறேன். மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் வன்முறையைத் தூண்டிவிட்டு, அமைதியைக் குலைக்கிறது.

கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பி.சசி வீட்டிலும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. கண்ணூர் மாவட்டம், இரிட்டி கம்யூனிஸ்ட் பிரகமுர் விசாக்கை சிலர் தாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் கடந்த இரு நாட்களில் நடந்து வரும் வன்முறையையொட்டி, பந்தளம், அடூர், குடும்மோன், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடூர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் கடையில் வெடிகுண்டு வீசப்பட்டதையடுத்து, அதில் 7 பேர் காயமடைந்தனர்.

கேரளாவில் கடந்த இரு நாட்களில் நடந்து வரும் வன்முறை தொடர்பாக சபரிமலை கர்மா சமிதி(எஸ்கேஎஸ்), இந்து ஐக்கிய வேதி(எஏடி), பாஜக ஆகியோர் ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஹர்தாலுக்கு பின் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 1, 369 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் பதற்றமாக இருப்பதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE