வெளிநாட்டிலிருந்து வந்து படிக்கும் தலை சிறந்த மாணவர்கள் அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பணிபுரிய வேண்டும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தல்

53

அமெரிக்காவில் உள்ள முன்னணி பல்கலைக் கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் திறமை மிக்கவர்கள் அமெரிக்காவில் தங்கி இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது: திறமை மிக்கவர்களை இழப்பது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பாகும். அதற்கேற்ப நாட்டின் குடியேற்ற விதிகள் உள்ளன.

சட்டரீதியான குடியேற்ற விதிகளில் உள்ள சில ஓட்டைகளை அடைப்பதன் மூலம் திறமை மிக்க வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் தங்க வைக்க முடியும். இங்கு அனைத்து துறை நிறுவனங்களும் உள்ளன. அதில் பணியாற்ற திறமை மிக்கவர்கள் அவசியம் என்று குறிப்பிட்டார். கல்வித் தகுதியில் சிறந்து விளங்கியவர்கள் அவசியம் என்றார்.

இங்குள்ள முன்னணி நிறுவனங்கள் சிலவற்றிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன. அதாவது திறமை மிக்கவர்களுக்கு அமெரிக்காவில் இடம் கிடையாது. அவர்களை நாம் அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தன. இதனால் அவை சீனா மற்றும் ஜப்பானுக்கு சென்று அங்கு ஆலை அமைக்கின்றன. அங்குள்ள ஆலைகளுக்கு அமெரிக்காவில் உள்ள முன்னணி பல்கலைக் கழகங்களில் முதன்மையான திறன்மிகு மாணவர்கள் கிடைக்கின்றனர். இதனால் நாம் திறமையானவர் களை இழக்கிறோம். இதே நிலையை இனியும் அனுமதிக்க முடியாது என்றார். இந்த பிரச்சினை குறித்து ஜனநாயக கட்சியினருடன் விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் சம்மதிப்பார்கள் என்று தான் கருதுவதாகக் கூறினார். இங்கிருக்கும் முன்னணி நிறுவனங்கள் திறமையானவர்கள் கிடைக்காமல் வேறு நாடுகளுக்கு செல்வதை ஏற்க முடியாது என்றார்.

SHARE