ஸ்மித் நீக்கப்படுவாரா?- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பதில் சிக்கல்

79

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்படமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். இதனால், அந்நாட்டு வாரியம் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், 2 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பு வகிக்கத் தடையும் விதித்தது. இந்தத் தடையும் அடுத்த 2 மாதங்களில் முடியப்போகிறது. அதன்பின் அணியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நீடித்த ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டவுடன், ஐபிஎல் போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால், கடந்த ஆண்டு விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஸ்மித்துக்கு வழங்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுப்படியே ஸ்மித்துக்கு ஐபிஎல் போட்டியிலும் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டு வாரியம் உத்தரவுப்படி 2020-ம் ஆண்டுக்குப்பின்புதான் ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்க முடியும்.

ஆதலால், ஆஸ்திரேலிய வாரியம் பின்பற்றும் விதிகளையே பிசிசிஐயும் பின்பற்ற முடிவு செய்திருப்பதால், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு ஸ்மித்துக்கு வழங்கப்படாது எனத் தெரிகிறது.

2-வதாக, உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்துக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பங்கேற்று விளையாடினாலும், ஸ்மித்தால் தொடர் முழுவதும் விளையாட முடியாத சூழலில்தான் நிலவுகிறது.

ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஆஸ்திரேலிய வாரியம் தங்களின் வீரர்களை உலகக்கோப்பைக்கான பயிற்சிக்கு தயார் செய்ய அழைத்துவிடும் என்பதால், அனைவரும் அங்குச் சென்றுவிடுவார்கள். அப்போது ஸ்மித்தும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்போது மீண்டும் புதிதாக ஒரு கேப்டனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தேர்வு செய்து விளையாடச் செய்வது வீரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தும். ஆதலால் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய ரஹானே இந்த ஆண்டும் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் ரஹானே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நாக்அவுட் சுற்றுவரை முன்னேறி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சன்ரைசர்ஸ் அணியிலும் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்படமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE