புதிய அரசியலமைப்பு: நிபுணர் குழு அறிக்கையில் இருப்பது என்ன?

103

பிரிக்கமுடியாத ஒன்றுபட்ட இலங்கையை ஏக்கிய ராஜ்ய அல்லது ஒருமித்த நாடு என்றழைக்கலாம் என நிபுணர் குழு அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது சபை உருவாக்கப்படும் என்றும் இரண்டாவது சபையில் ஒவ்வொரு மாகாணத்திலும் தலா 5 என்ற அடிப்படையில் 45 பிரதிநிதிகளும், நாடாளுமன்றம் சார்பில் 10 பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாடாளுமன்றினாலும், இரண்டாவது சபையினாலும் தெரிவுசெய்யப்படுவார் என்றும் நாடாளுமன்றத்திற்கு 233 உறுப்பினர்கள் கலப்பு முறையில் தெரிவுசெய்யப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த மதத்தை பாதுகாக்கும் அதேவேளை பிற மதங்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் போற்றப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படின் அது நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடனும், இரண்டாவது சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதியை நீக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர், சபாநாயர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவினால் ஜனாதிபதி அப்பதவிக்கு தகுதியற்றவர் என தீர்மானிக்கப்படின் ஜனாதிபதி, பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE