சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரத்தில் வினய்குமார் அறிக்கை மீது நடவடிக்கை: கர்நாடக உள்துறை அமைச்சர் தகவல்

92

சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பாக வினய்குமார் குழு அளித்த அறிக்கையின் மீது விசாரணை நடத்தி விரை வில் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச் சர் எம்.பி. பாட்டீல் தெரிவித் துள்ளார்.

சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு வில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சிறைத் துறை டிஐஜி.யாக இருந்த ரூபா, அதிகாரிகளுக்கு சசிகலா கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதாக தெரிவித்தார். இதை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரித்து கடந்த ஆண்டு அறிக்கை அளித்தது.

அந்த அறிக்கையில், ‘சிறையில் சசிகலா சிறப்பு சலுகை அனுபவித்தது உண்மை தான். டிஐஜி ரூபாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நேரில் விசாரித்து உறுதிப் படுத்தினோம். சசிகலா சிறை அதிகாரிகளுக்கு தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் வெளியில் இருந்து கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தை கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு க‌ர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, இரட்டை இலை சின்ன வழக்கில் டிடிவி தினகரனுடன் கைதான மல்லிகார்ஜூனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மீண்டும் புகழேந்தியை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக உள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ‘‘நான் உள்துறை அமைச்சராக, பொறுப்பேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பான‌ வினய்குமார் குழு அறிக்கையை இன்னும் வாசிக்கவில்லை. அதனை விரைவில் பரிசீலித்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

SHARE