உலகக் கிண்ணத்தைத் தவறவிடுகிறார் ஸ்மித்?

205

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித், இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்குபற்றாமிலிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆஷஸ் தொடரை மனதிற்கொண்டே, இம்முடிவு எடுக்கப்படலாமெனக் கருதப்படுகிறது.

தென்னாபிரிக்காவில் கடந்தாண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில், பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக, அப்போதைய தலைவர் ஸ்மித்துக்கும் உப தலைவர் டேவிட் வோணருக்கும், ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது. அத்தடைகள், அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன.

அவுஸ்திரேலிய அணியின் அண்மைக்காலப் பின்னடைவுகளைத் தொடர்ந்து, ஸ்மித்தும் வோணரும், அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ண அணியில் முக்கியமான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்

ஆனால், ஸ்மித்துக்கு மேற்கொள்ளப்பட்ட முழங்கைச் சத்திரசிகிச்சை காரணமாக, உலகக் கிண்ணத்துக்குச் சற்று முன்னதாகவே, அவர் குணமடைவாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குள் அவரை உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற வைக்காமல், உலகக் கிண்ணத்துக்குச் சமாந்தரமாக இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய “ஏ” அணியின் முதற்தரப் போட்டிகளில் அவர் பங்குபற்றவுள்ளார். அதன் பின்னர், ஆஷஸ் தொடருக்கான அணியில் அவர் இடம்பெறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலியா, தமது முக்கிய வீரர்களில் ஒருவரை, உலகக் கிண்ணத்தில் பங்குபற்றாமல் ஆஷஸில் பங்குபற்ற அனுமதிக்குமாக இருந்தால், மிக முக்கியமான பேசுபொருளாக அது அமையுமென எதிர்பார்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்மித்தைப் போன்று, வோணருக்கும் முழங்கைச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரது சத்திரசிகிச்சை சிறியது எனவும், அவர் குணமடைந்து விட்டாரெனவும் அறிவிக்கப்படுகிறது.

SHARE