பெப்ரவரி 25ல் திரளவுள்ள துயரக்குரல்கள்

255

சிறீலங்காவில் யுத்தம் முடிந்து அதாவது தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஏகாதிபத்திய சக்திகளினால் ஒடுக்கப்பட்டு பத்துவருடங்கள் நிறைவடைகின்றது.குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களும் ஓய்ந்தபோதும் ஒரு இனத்தின் துயரக்குரல் இன்னும் ஓயவில்லை.ஈழத்தமிழர்களின் நீதிக்கான தேடலும் விடுதலைக்கான அவாவும் இன்னும் ஓயவில்லை. கேப்பாப்பிலவை விடும்படி தொடர்போராட்டம் செய்துவரும்அந்த நிலங்களுக்கு உரித்தான மக்கள் கடந்த 25;ம் திகதி இராணுவமும் புலனாய்வு துறையும் சூழ்ந்திருக்க எழுப்பிய குரலும் கேள்விகளும் வலுவானவை.அதற்கு பிறகு சிறீலங்காவின் சுதந்திரநாளில் கறுப்புக்கொடிகளை ஏந்தி அந்த மக்களின் வெளிப்பாடும் அர்த்தபூர்வமானவை.அந்த மக்கள் இராணுவத்தை பார்த்து கேட்கும் கேட்ட கேள்வி என்ன நீங்கள் உங்கள் ஊரில் காலியில் அல்லது கண்டியில் சிங்கள மக்களின் காணிகளை இப்படி அடாத்து பண்ணுவீர்களா எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்கிறார்கள்.மேலும் அந்த மக்கள் ஆக்ரோசத்துடன் சொன்னது நாங்கள் நாடு கேட்கவில்லை எங்கள் சொந்த காணிகளை கேட்கின்றோம் எமது நாட்டை பிரித்து எடுப்பவன் எங்கோ இருப்பான் அவன் எங்கள் நாட்டை உங்களிடமிருந்து பெறுவதை பார்த்துக்கொள்வான் என்பதுதான்.நிலத்துக்காக முள்ளிவாய்க்காலின் பின்பும் நிராயுதபாணிகளாக ஆயுதம் தரித்த படைகளின் முன் தம்மை வழி நடத்திய தலைமையையும் நினைவுபடுத்தி போராடும் எமது மக்களின் தாகம் மெய்சிலிர்க்கவைப்பது.இத்தகைய வேட்கை கொண்ட மக்கள் கூட்டத்தை வைத்து பெரும் வெகுஜன போராட்டங்களை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இடைவிடாமல் சர்வதேசத்தின் கண்களில்படும்படி செய்யமுடியாத பலவீனமான அரசியல் தலைமைகளே ஈழநிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றனர்.

கேப்பாபிலவு மக்கள் மேலும் சொல்லும் விடயங்கள் இங்கு முக்கியமானது. யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் மீள்குடியேற்றத்துக்காக வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியைவிட பாதுகாப்பு செலவுக்கே அதிமான தொகை ஒதுக்கப்படுகின்றது.இத்தகைய தமிழர் விரோதப்போக்குக்கொண்ட படையினரை வலுப்படுத்தி ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் வரவுசெலவு திட்டங்களுக்கு எந்தவித கேள்விகளும் வியாக்கியானங்களும் இன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் வாக்களித்துள்ளனர் என்பது இங்கு கவலையுடன் குறிப்பிடத்தக்கது.இந்தப்பத்து வருடத்தில் தமிழர்களுக்கான நீதியை வழங்குவதில் சிறீலங்கா அரசாங்கம் மிகவும் தந்திரமாக தமிழர் பிரதிநிதிகளை வைத்தே தாமத்தையும் இழுத்தடிப்பையும் செய்யும் அதே வேளை சர்வதேசத்தை ஏமாற்றி தமக்கான நற்பெயரை சம்பாதித்து வருகின்றது.


செம்மலையின் நீராவியடி ஏற்றத்தில் பகிரங்கமாக தமிழர்களின் பூர்வீக நிலத்தில் பௌத்த விகாரை புத்தர் சிலை ஒரு புத்தபிக்குவின் அடாவடித்தனத்தால் நிறுவப்பட்டுள்ளது.மிக அமைதியாக தமிழர் நிலம் பௌத்த மயமாக்கப்படுகின்றது.ஆனால் உலகத்துக்கு சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு தாம் எதையோ கொடுக்கப்போவதாக பாசாங்க செய்துவருகின்றது.தமிழர்களால் சர்வதேசத்திடம் கோரப்படும் இனப்படுகொலைக்கான விசாரணை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தாமதிக்கப்பட்டு மறுக்கப்படும் நீதி என்ற நிலையை நோக்கி செல்கின்றது.இலட்சக்கணக்கில் உயிர்கொடுத்து தமிழ்மக்களின் பெரும்தியாகத்தால் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட மனித உரிமை மீறல் போர்க்குற்றம் இனப்படுகொலை விவகாரம் தமிழர் பிரதிநிதிகளை வைத்தே மழுங்கடித்து தமிழர்களை இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மீள முடியாத அடிமைகளாக படுகுழியுள் தள்ள சிங்கள ராஜதந்திரம் மிகவும் கனகச்சிதமாக செயற்பட்டுவருகின்றது.கடந்த பத்தாண்டுகளில் சிங்கள அரசாங்கம் போரை வழிநடத்தி மனித பேரலவத்துக்கும் பாலியம் வன்கொடுமை உயிரோடு பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்தல் காணாமல் ஆக்கச்செய்தல் போன்ற பாரிய மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு பொறுப்பான தளபதிகளை காப்பாற்றவே முனைந்திருக்கின்றது.காப்பாற்றியும் வருகின்றது.

கடந்த பத்தாண்டுகளில் போரை வழிநடத்திய சரத்பொன்சேகாவுக்கு பீல்மார்சல் பதவி உயர்வை வழங்கியது.தற்பொழுது இறுதிப்போரோடு தொடர்புடைய கடற்படைத்தளபதி வசந்தகரன்ன கொட வான்படைத்தளபதி ரொசான்குணதிலக ஆகியோருக்கு பீல்மார்சல் பதவி வழங்க முனைகின்றது.இதில் வசந்தகரன்ன கொட கொழும்பில் 11இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கச்செய்யப்பட்ட குற்றத்தில் தொடர்புபட்டவர்.இதைவிட மிக முக்கிய போர்க்குற்றவாளியான தளபதி சவேந்திரசில்வாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி பதவி கொடுத்தது மட்டுமல்லாமல் இராணுத்தின் பிரதானி பதவியையும் சிங்கள அரசாங்கம் பரிந்தளிக்கின்றது.அது மட்டுமன்றி இலண்டனில் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டாவோவுக்கு இலண்டன் நீதி மன்றம் விடுத்த பிடியாணையை இல்லாதொழிக்க சிங்கள அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கையில் மிகத்தீவிரமாக ஈடுபடுபட்டது.இவையெல்லாம் தமிழர்களுக்கு சிங்கள அரசாங்கம் உரிமைகளை தரும் என்பதை காட்டுகின்றதா.தமிழர்கள் மீது முள்ளிவாய்க்காலில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட மோசமான படையினரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் என்பதை காட்டுகின்றதா.பதில் இல்லவே இல்லை என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூடவுள்ள நிலையில் மீண்டும் வடக்கு கிழக்கில் தன்னெழுச்சிப்போராட்டங்கள் குரல்கள் வலுப்பெறுகின்றன.

 

 

2011ம் ஆண்டு சிறீலங்காவில் ஆணைக்குழு ஒன்றின்முன் தோன்றிய மன்னாரின் முன்னாள்ஆயர் மதிப்புமிகு ராயப்பு யோசேப்பு அவர்கள் கூறிய வாக்குமூலம் என்னவெனில் இறுதிப்போரில் சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து அறுநூற்று நாற்பத்தொன்பது பேர் கொல்லப்பட்டும் காணாமல் செய்யப்பட்டும் உள்ளார்கள் என்பதுதான்.2014ம் ஆண்டு சிறீலங்காவுக்கு எதிராக மனித உரிமைப்பேரவையில் மனித உரிமை மீறல் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்றுவரை அது தொடர்பில் தேடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சிறீலங்காவில் 1980ம் ஆண்டு தொடக்கம் இறுதிப்போர்வரை சுமார் அறுபதாயிரம் தொடக்கம் எண்பதாயிரம் வரையான தமிழர்கள் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டுள்ளார்கள் என கணிக்கப்படுகின்றது.உலகிலேயே மிகமோசமான காணாமல் ஆக்கச்செய்யப்படுதல் தொடர்பிலான நாடுகளின் சிறீலங்காவுக்கு இரண்டாவது இடம்.இத்தகைய மோசமான பின்னணியை கொண்ட சிறீலங்கா அரசாங்கம் நீதி தராது சர்வதேசத்தையும் ஏமாற்றுவதில் உலகிலேயே முதலாவது நாடென்றே காலம் கணிக்கின்றது.

தன் கணவர் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு பதில் இல்லாமலே இளம்பெண்கள் பலர் குங்குமத்தை அணிந்தபடி காத்திருக்கின்றார்கள்.இருபது வயதில் தனது கணவரை தேடத்தொடங்கியவளுக்கு இன்று முப்பது வயது.முப்பத்தைந்து வயதில் தேடத்தொடங்கியவளுக்கு வயது நாற்பத்தைந்து தலை நரை தழுவுகின்றது.அவளது மன உணர்ச்சிகள் கனவுகளை நீதி தரவேண்டிய அரசாங்கம் சர்தேச சமுகம் குழிதோண்டிப்புதைத்திருக்கின்றது.அவள் உணர்;ச்சிகளின் சாம்பல் மேட்டில் குந்தியிருக்கின்றாள்.தன் தந்தை காணாமல் ஆக்கச்செய்யப்படும்போது இருந்த மூன்று மாதக்குழந்தைக்கு இன்று வயது பத்து.அந்த பத்துவயது பிள்ளைக்கு அப்பா என்பது ஒரு கனவாக இருக்கின்றது.அப்பாவின் ஸ்பரிசம் இல்லாத குழந்தையை நீதி தராத இந்த உலகம் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.இவ்வாறே காணாமல் ஆக்கச்செய்யட்ட குடும்பங்களின் பின்னால் வாய்விட்டு சொல்லி அழுமுடியாதபடி பெருந்துயர் சூழ்ந்துகிடக்கின்றது.பத்தாண்டு வலிகளுடன் திரண்டு ஒலிக்கும் குரல்களினால் பிராந்திய சர்வதேச சுயநலன்களை மறந்து மானுட நீதிக்காக உலகின் கதவுகள் திறக்குமா என்பது வடக்கு கிழக்கில் கடந்த பத்தாண்டாக ஓயாது ஒலிக்கும் துயரக்குரல்களின் கேள்வி.மீண்டும் பெப்ரவரி25ல் ஐநா நோக்கி திரளவுள்ளன துயரக்குரல்கள் நீதி கோரி!

ஈழம் சேபி

SHARE