ஜெனிவா நிலமும் நாம் விதைத்த முருகதாசனும் செந்தில்குமரனும்

172

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பது நம்பிக்கை வாசகம்.ஈழத்தமிழின விடுதலைக்காக நிலத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் உன்னதங்களை விதைத்துவிட்டு காத்திருக்கின்றோம்.விடுதலை உழவில் நாம் விதைத்தவைகள் பூக்கின்றனவா காய்க்கின்றனவா அதை பட்சிகள் வந்து எச்சில் படுத்துகின்றனவா என்பதை பார்ப்பதும் காப்பதும் ஈழத்தமிழர் முன்னுள்ள ஒரு பெரும் கடமை.அந்த கடமை அடிப்படையில் ஒன்றென சிந்திப்பதும் திரள்வதும் விடுதலையை விரைவுபடுத்த விரும்பும் ஒவ்வொரு இனப்பற்றாளனின் எண்ணமாக இருக்கும்.முத்துக்குமார்கள் முருகதாசன் செந்தில்குமரன் ஊடாக ஈழத்தமிழின ஆன்மா சர்வதேசத்துக்கு சொல்ல விரும்பிய செய்தியை இந்த ஈகங்கள் நடந்து ஒரு தசாப்தம் ஆகின்ற நிலையில் சர்வதேச மனித உரிமைகள் முழுமையாக விளங்கிக்கொண்டுள்ளனவா.ஈழத்தில் நிகழ்ந்துவிட்ட தியாகங்களை எந்த அடிப்படையில் இன்னமும் சர்வதேசம் விளங்கிங்கொள்கின்றது என்பதை நாம் அறிவுபூர்வமாக ஆராய்ந்து அதற்கான செயல்களில் நிலமும் புலமும் பயணம் செய்கின்றதா என்பதெல்லாம் இந்த நினைவுகள் எமக்கு உணர்த்தக்கூடிய செய்திகள்.

ஈகைப்பேராளி முருகதாசன் செந்தில்குமரனின் ஈகங்கள் சர்வதேச வெளியில் ஈழத்தமிழினத்தை விளங்கிக்கொள்ளும் ஒரு முன்வாசலை திறக்க முனைந்தன.அதுவரை புலம்பெயர் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான வகிபாகத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை தந்தவர்கள் இந்த இருவரும்.புலம்பெயர் விடுதலைப்பணியில் உச்சபட்சமானதும் சர்வதேசத்தின் மனசாட்சிகளை உறுத்தக்கூடியதுமான ஒரு அடையாளத்தை முருகதாசனும் செந்தில்குமரனும் உருவாக்கினார்கள்.அவர்கள் களமாடிய ஜெனிவா நிலத்தின் மனச்சாட்சியை உலுப்புவதற்கான போராட்டம் மகத்தானது.நிலத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பேரியக்கமாக புலிகள் படையியல் அடிப்படையில் படைத்த வெற்றிகள் ஊடாகவும் அவர்களோடு போரிட்ட ஆக்கிரமிப்பு சிறீலங்கா படைக்கு ஈடான படையியல் சமநிலை ஊடாகவும் இன்னும் ஒருபடி மேல் சொன்னால் சர்வதேச படைத்துறை புலனாய்வு இயங்குநிலை ஆச்சரியப்படும்படியான புலிகளின் வழிமுறைகள் ஊடாகவும் ஈழத்தமிழர்களை சர்வதேசம் புரிந்துகொண்ட பாங்கில் இருந்த கறுத்தப்பக்கங்களை ஈகைப்பேரொளி முருதாசன் செந்தில்குமரன் ஆகியோரின் தீக்குளிப்பு போராட்டம் கோடிட்டு காட்டமுனைந்தன.அதை சர்வதேசமும் விளங்கிக்கொள்ள முனைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

2009 தை மாதத்துக்கு பிறகு ஈழத்தின் வன்னிநிலம் தொட்டு தென் தமிழீழம் வரையான நிலத்தில் ஆக்கிரமிப்பு சிறீலங்காப்படையின் இன அழிப்பு வகையிலான தாக்குதலை சர்வதேசம் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ளாமல் மௌனியாக இருந்ததன் ஏமாற்றம் முள்ளிவாய்க்கால்வரையில் சிறீலங்காப்படையால் கொன்றொழிக்கப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பிணங்களின் முகங்களில் படிந்திருந்தது.மனிதாபிமானத்திற்கான யுத்தம் என்ற மனித நாகரிகமற்ற வாசகத்தின் கீழ் ஈழநிலத்தில் யுத்த சூனிய வலயத்துக்குள்ளும் குழந்தைகளை கற்பிணிகளை கொன்றுகுவித்துக்கொண்டிருந்த சிறீலங்கா படைகளோடு கூட்டுச்சேர்;ந்திருந்த பிராந்திய சர்வதேச வல்லாண்மைகள் உருவாக்கியவர்களே முருகதாசனும் செந்தில்குமரனும்.எமக்கு சர்வதேசமே ஒரு வலிமையான ஆயுதத்தை ஒப்படைத்திருக்கின்றது.அது முருகதாசனின் செந்தில்குமரனின் இறுதிக்குரல்கள்.

கடந்த எழுபது ஆண்டுகளாக சிங்கள இனவாத மேலாண்மையால் அடக்கப்பட்டு ஈழம் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கல்வி பொருளாதார மொழி அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டு இன அழிப்புக்கு உள்ளாக்கபட்ட நிலையில் அகிம்சையாகவும் ஆயுத வழியிலும் ஆக்கிரமிப்பாளரை எதிர்கொண்ட ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கான குரல்கள் உரிமைக்கான வேண்டுகை சர்வதேசத்தின் மையத்தின் பேசப்படாதா என்ற ஏக்கம் பல தசாப்தங்களாக தொடர்ந்து வந்தது.ஈழத்தமிழினத்தின் நியாயப்பாடுகளை சிங்கள இனவாத வல்லாதிக்கம் சர்வதேசத்தில் பயங்கரவாத முலாம் பூசி மறைத்தே வந்தது.2009 மே மாதம் 18ம் நாள் வரையான அரைநூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் சிறீலங்கா சிங்கள இனவாத மேலாதிக்கத்தின் ஈழத்தமிழினம் மீதான அடக்குமுறையை ஐக்கிய நாடுகள் சபையோ சர்வதேச மனித உரிமை அமைப்புக்களோ சீர்தூக்கி பார்க்காத ஒரு பெரும் துரதிஸ்டம் நடந்தேறிவிட்டது.ஆயினும் அந்த நிலையை தகர்த்தன முள்ளிவாய்க்கால்வரை பிணங்களாய் வீழ்ந்த தமிழினத்தின் உயிர்கள்.அந்த உயிர்களின் வலிகளை நெஞ்சில் சுமந்து உலக மனித உரிமைக்குரல்களின் மையமான ஜெனிவாவில் தங்களை தீயில் கருக்கி உலகை பார்க்க வைத்த எழுபது ஆண்டுக்கான ஏக்கத்தை தீர்க்க முற்பட்ட பெரும் இனக்கடமையாளர்கள் ஈகையர்கள் முருகதாசனும் செந்தில் குமரனும்.
இப்பொழுது ஈழத்தமிழினத்தை பற்றி பேசக்கூடிய சர்வதேசத்தின் மனித உரிமைக்குரல்கள் உருவாகியுள்ளன.தமிழினத்தை கடந்து மேற்குலக தமிழக ஆசிய ஆபிரிக்க தளத்தில் இருந்து எமக்கான குரல்களை நிலத்திலும் புலத்திலும் தமிழினம் விதைத்த உன்னத விதைகள் அறுவடை செய்திருக்கின்றன.தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் எனினும் என்றோ ஒரு நாள் தருமம் வெல்லும் என்ற வாசகத்தில் அந்த என்றோ ஒரு நாள் ஈழத்தமிழினத்திற்கு அருகில் நெருங்கிவந்துள்ளது.அதை தமிழினம் உணர்ந்த நிலையிலான தோற்றம் நிலத்திலும் புலத்திலும் இருக்கிறதா. ஒரு புறத்தில் தமது பனிப்போர் பிராந்திய சர்வதேச நலனுடன் சேர்த்து சர்வதேசம் ஏந்தியுள்ள ஈழத்தமிழினம் பற்றிய கருத்தியலை கைவிட்டுவிடாமல் கவனிக்கவேண்டியதான முக்கிய ராஜதந்திரத்தை ‘அந்த என்றோ ஒரு நாள்’ ஈழத்தமிழர்களிடம் எதிர்பார்க்கின்றது.கடந்த எழுபது ஆண்டு கால இன ஒடுக்குமுறைக்குள்ளான வரலாற்றுடனும் அர்ப்பணிக்கப்பட்டவைகளை சிந்தாமல் சிதறாமல் எடுத்துக்கொண்டும் ஒன்று திரண்ட ஈழத்தமிழினமாக வரும்படி அந்த என்றோ ஈழத்தமிழர்களிடம் கேட்கின்றது.அந்த என்றோ ஒரு நாள் சாதாரணமானது அல்ல ஈகைப்பேராளி முத்துக்குமார்கள் முருகதாசன் செந்தில்குமரன் செங்கொடி வரையில் பல இலட்சம் ஈழத்தமிழின விடுதலைக்கான இலட்சியத்துடன் விதைக்கபட்ட ஆன்மாக்களாலும் இரத்தத்தாலும் உருவாக்கப்பட்டது என்பதை தமிழர்கள் தங்கள் மேலான சிந்தனையில் கொள்ளவேண்டியதே அந்த என்றோ ஒரு நாளை தவறவிடாது இருப்பதற்கான ராஜதந்திரம்.

 

SHARE