கஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம் ஐ. நாஅவசியமில்லை: சவுதி அரேபியா

73

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை எனவும் சவுதியின் திறமையான சட்ட அமைப்புமுறையால் இந்த விசாரணையை கையாள முடியுமெனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்கி கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட அடெல் அல்-ஜுபெய்ர், அந்த படுகொலைக்கு சவுதி அரசுக்கும் தொடர்புள்ளது என்பதை மறுப்பு தெரிவித்தார்.

சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் சவுதி அதிகாரிகள் இப்படுகொலையை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லையென அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தது.

சவுதி இளவரசரே கஷோக்கியின் படுகொலைக்கு உத்தரவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க செனட்டர்களும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தமது இளவரசருக்கும் இக்கொலைக்கும் எவ்விதமான தொடர்புமில்லை எனவும் அதற்கான உத்தரவை அவர் வழங்கவில்லை எனவும் அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரசாங்கத்தின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை மீறி இப்படுகொலையை மேற்கொண்டதாகவும் சவுதி அரசர் இப்படுகொலை மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE