குமாரபுரம் படுகொலை – 23 வருடங்கள் நிறைவு தின நினைவேந்தல் நிகழ்வு

108

குமாரபுரம் படுகொலையின் 23 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அதனை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களால் குமாரபுரம் நினைவேந்தல் தூபியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களுக்காக விளக்கேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டதுடன் உருவப் படத்திற்கு மலர் மாலையும் அணிவித்தும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குமாரபுரம் கிராமத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி இலங்கை ராணுவம் மற்றும் துணைப்படைகள் மேற்கொண்ட படுகொலை சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 36 பேர்வரை படுகாயமடைந்தனர்.

 

இப்படுகொலைகள் தொடர்பாக ராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவ வீரர்கள் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்ட நிலையில், ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டதுடன் ஒருவர் இறந்துவிட்டார்.

தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவித்து கடந்த 2016 ஆம் ஆண்டு அவர்களும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE