காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவி சிறீலங்காவில் பாதுகாப்பு கோருகின்றார்-மன்னார் எட்னாவின் சோகக்கதை

89

மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு வாய்மொழி மூலம்  நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட நபரொருவரின் மனைவியான ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே, தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு 15ஆம் திகதி மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த சிலர், வீட்டுக்குள் ஆயுதம் புதைக்கப்பட்டுள்ளாக தெரிவித்து அச்சுறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் காரணமாக தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உயிர் ஆபத்து காணப்படுவதாகவும் எனவே தங்களுக்குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தறுமாறு கோரி குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பேசாலை பாடசாலைக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் குறித்த பெண்னின் கணவன் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யார் இந்த எட்னா டயஸ்.இவர் 2014ம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மன்னாரில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தபோது தன் கதையை இவ்வாறு சொன்னார்.

எனது கணவர் அமிர்தராஜா ஆனந்தராஜா(42)மன்னார் பேசாலை வங்காலைப்பகுதியில் கடற்படையினரால் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டார்.

அதாவது 2008.08.17அன்று பிற்பகல் வீட்டுக்கு வந்த கடற்படையினர் கடையில் போய் சாராயம் வாங்கிக்கொண்டு இரவு ஏழு மணிக்கு வரும்படி கூறிச்சென்றனர்.

அதற்கு இணங்க எனது என்னிடமிருந்த ஆயிரம் ரூபாவை வாங்கிக்கொண்டு அவர் மதுபானம் அருந்தாத ஒருவர் என்பதால் தனது நண்பரை அனுப்பி சாராயம் வாங்கிவித்து கடற்படையினர் சொன்னபடி பேசாலை சென் மேரிஸ் பாடசாலைக்கு அருகில் சென்றார்.

அப்போது வானத்தில் வந்த கடற்படையினர் சாராயப்போத்தலை வாங்கிக்கொண்டு எனது கணவரையும் அந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.இதை அம்மாவும் அயலில் உள்ளவர்கள் கண்டுள்ளனர்.

கணவர் திரும்பி வராததால் நான் அந்த பாடசாலையடிக்குச் சென்று வாகனம் வந்து போன அடையாளங்களை கண்டதுடன் அவ்விடத்தில் உள்ளவர்களை கேட்டபோது கடற்படையினரின் வாகனம் வங்காலைப்பாடு கடற்படை முகாமுக்குள் சென்றதாக தெரிவித்தனர்.

உடனடியாக பேசாலை பங்குத்தந்தை அகஸ்ரின் அடிகளாரை அழைத்துக்கொண்டு அந்த கடற்படை முகாமுக்கு சென்றோம்.எனது கணவரை பற்றி கேட்டபோது தமக்கு தெரியாது எனக்கூறினர்.

நேவி பிரியந்தான் எனது கணவரை சாராயம் வாங்கிவரச்சொல்லி ஏற்றிச்சென்றார் என தெரிவித்தோம்.
கடற்படையினர் மறுத்துவிட்டனர்.

இதுவிடயமாக நான் பல இடங்களிலும் முறைப்பாடு செய்துள்ளேன் எந்தவித முடிவும் இல்லை என இந்த எட்னா டயஸ் தெரிவித்தார்.அவரை இன்றும் தொடர்கின்றது துன்பமும் அச்சுறுத்தலும் தொடர்கின்றது சிறீலங்காவில்.

SHARE