சமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்

184

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் அறிக்கை மற்றும் கால அவகாசம் தற்போதைய வடக்கு தமிழர்களின் ஆபத்பாந்தவராக அவதாரம் செய்கின்ற சுரேன் ராகவன் தீவிரமடையும் பாதிக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் என பத்திரிகை இணையச்செய்திகள் பரபரப்பாய் இருக்கின்றன.குறிப்பாக இலங்கையின் வரலாற்றை 1948க்கு பின் எடுத்து அதை தெளிந்த பாத்திரத்தில் விட்டு அரைத்து கசக்கி பிளிந்து எடுத்தால் ஒரு விடயம் மட்டுமே எஞ்சும் அதாகப்பட்டது.அதாவது சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் ஒருபோதும் தமிழர்களுக்கு சுயமாக சுதந்திரத்தையோ உரிமைகளையோ தராது என்பதுதான்அது. அதனால்தான் கடந்த காலங்களில் தமிழர்கள் சாமபேததான தண்டம் வரை சென்று வந்துள்ளனர் என்பது அனைவரும் அனுபவித்த ஒன்று. இதற்குப்பிறகும் இது அண்ணன் தம்பி பிரச்சனை தாய் பிள்ளையுறவு என்ற பசப்புக்களுக்கு யாரும் மயங்கி கிறங்கினால் அவர்களை போல அகில உலக முட்டாள்கள் இருக்கமுடியாது.இப்பொழுது அதுதான் நடக்கின்றது வடக்குக்கு அரசின் முகவராக அதாவது போர்க்குற்றம் விசாரணை என்ற கதை எடுத்தாலே பன்றியை கண்ட ஏதோ போல மூஞ்சியை நீட்டுகின்ற ஜனாதிபதி மைத்திரியால் இன்னும் சொல்லப்போனால் மகிந்தவின் அப்பத்தால் நியமிக்கப்பட்ட ஆளுனர் சுரேன்ராகவன் எடுத்துள்ள அவதாரத்தை நாம் என்னென்று சொல்ல.

பௌத்த தர்மத்தை பற்றி ஆராய்ந்து மெய்சிலிர்த்துப்போன சுரேன்ராகவனுக்கு முள்ளிவாய்க்காலின் கொத்துக்குண்டுகளைப்பற்றியோ பல்லாயிரம் எறிகணைகளை பற்றியோ அல்லது சாவின் நேரடி வலியை பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தமிழர்களின் ஆயுதப்போராட்டம் அது அடைந்திருந்த கட்டுமாணங்கள் உணர்வுகளுடன் கட்டமைக்கப்பட்ட ஈழவிடுதலைப்பிரமாண்டம் பற்றி நாம் சுரேன் ராகவனுக்கு வகுப்பெடுக்க முடியாது.சுரேன்ராகவன் ராகவன் மிதக்கும் கனவில் தமிழர்கள் மிதக்கவில்லை.இன்றைய கால அத்தியாயத்தில் சிறீலங்கா அரசால் தமிழர்களை கையாளவும் சர்வதேசத்தை ஏமாற்றவும் கொண்டுவரப்பட்டுள்ள சுரேன்ராகவனால் தமிழர்களின் ஈழவிடுதலை அவாவில் உள்ள ஒரு சிறு மண் பருக்கையை கூட மாற்றமுடியாது.சுரேன்ராகவனைப்போல பல சிறீலங்கா அரசு பயன்படுத்திய ராகவன்களை தமிழினம் கண்டு கடந்து நிற்கின்றது.இலங்கையின் விவகாரங்களை ஐக்கிய நாடுகள் சபையில் கையாண்ட மகிந்த சமரசிங்க சொன்னதுபோல ஐக்கிய நாடுகள் சபை என்பது தபால் பெட்டி அல்ல எல்லோரும் போய் கடிதம்போட்டுவிட்டுவர என்பதாக சுரேன்ராகவன் எனும் தபால்காரர் தமிழர்களிடம் மகஜர்கள் கேட்ட நிலை இருக்கின்றது.முப்படையுடன் ஒரு பெரிய ஆயுத விடுதலைப்போராட்டத்தை நடத்திய ஒரு பெரிய விடுதலைப்பயணத்துக்கு சொந்தமான ஒரு பெரிய இரத்த உயிர் அர்ப்பணிப்புக்கு சொந்தமான ஒரு இனத்தின் முகவரியை யாரோ ஒரு ராகவன் என்பவரை வைத்து இப்பொழுது சிங்களபேரினவாதம் கையாள நினைப்பது மிகவும் நகைச்சுவை ஆனது.

ஈழத்தமிழர்களின் பேராட்டமும் அதனோடு ஒட்டியதாக சிறீலங்கா அரசாங்கத்தால் நிகழ்ந்துள்ள இன அழிப்பு மனித உரிமை மீறல்கள் என்பன சர்வதேச அரங்கிற்கு கொண்டுவரபட்டாயிற்று.இத்தகையதொரு சர்வதேச நிலைமைக்காக தமிழினம் பல தசாப்தங்களாக காத்திருந்திருக்கிறது.அத்தகைய காத்திருப்பாக தமிழினம் முள்ளிவாய்க்கால் எனும் ஒரு மரணபலிபீடத்தை சந்திந்தது.ஆகவே உலகின் பொதுச்சபையான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முக்கிய அங்கமான மனித உரிமைப்பேரவைக்கு ஈழத்தமிழர்களின் விடயம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் அதை எந்த வகையிலும் உள்நாட்டில் முடக்க விடுதலையை விரும்பும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் விரும்பமாட்டான்.மனித உரிமைப்பேரவைக்கு சென்றுள்ள ஈழத்தமிழர் விடயத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கும் அதன் ஊடாக ஒரு முழுமையான சர்வதேச பொறிமுறையையும் ஏற்படுத்தவே உண்மையான அர்ப்பணிப்புள்ள விடுதலையை விரும்புகின்ற ஈழத்தமிழர்களும் விரும்புவார்கள்.அதற்காகவே தாயத்திலும் புலம்பெயர் தமிழர் தேசத்திலும் சர்வதேச விசாரணை என்ற ஒரு குரல் எழுப்பபடுகின்றது.இத்தகைய குரல்களை நசுக்கி ஈழத்தமிழர் பிரச்சனையை உள்நாட்டுப்பிரச்சனை அது இரண்டு சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனை மறப்போம் மன்னிப்போம் கால அவகாசத்தை பெற்று உள்நாட்டிலேயே மீண்டுள்ள ஜனநாயகத்தின் கீழ் தீர்ப்போம் போன்ற மாயைகளுக்குள் புதைத்து தமிழர்களை மீளமுடியாத அடிமைகளாக மாற்ற சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக தனது ராஜதந்திரத்தின் மூலம் உழைக்கின்றது.


இந்த ராஜதந்திரத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் வைத்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வீழ்த்தப்பட்டார்கள்.அதன் மூலம் இரண்டு வருட கால அவகாசத்தை பெற்றுக்கொண்டது அரசாங்கம்.இந்தச்சதியில் அதுவரை சர்வதேச விசாரணை என நின்ற சில புலம்பெயர் அமைப்புக்களும் வீழ்ந்தன.அதன் பிறகு ஒருவகையான அரசின் முகவர்களாக மாற்றப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சொல்வதை தமிழ் மக்கள் ஆமோதிப்பார்கள் நம்புவார்கள் என சிறீலங்கா அரசாங்கம் நம்பியது.அது முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபாய சொன்னது போல தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது அவர்களுக்கான பிரச்சனை அபிவிருத்தி தொடர்பானது.தமிழ் மக்களுக்கான சகலவிதமான அபிவிருத்திகளையும் செய்து விட்டால் அவர்களின் பிரச்சனை முற்றுப்பெற்றுவிடும் என்ற அடிப்படையில் அபிவிருத்தி சார் அரசியலுக்குள் மிக இலகுவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வீழ்த்தியது.2015க்கு முன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாயகம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ள அபிவிருத்தி அரசியலும் அரசுடனான இணக்க அரசியலும் துரோக ஒட்டுக்குழு அரசியல் என வரைவிலக்கணம் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாம் கிண்டிய குழிக்குள் தாமே புதைந்தனர்.இதன் மூலம் தாம் நினைத்ததை சாதிக்க முடியுமென சிறீலங்கா அரசாங்கம் நினைக்க நிலைமை வேறுமாதிரி உடைப்பெடுத்தது.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் தமக்கு எந்தவிதமான அடிப்படை பிரச்சனைகளுக்கான விமோசனமும் கிடைக்காது என நம்பிய முள்ளிவாய்க்கால் வரையான போரில் நேரடி அர்ப்பணிப்பையும் பாதிப்பையும் சந்தித்த மக்கள் சர்வதேசத்தையும் மனித உரிமை அமைப்புகளையும் ஈர்க்கக்கூடிய தன்னெழுச்சிப்போராட்டங்களில் இறங்கினர்.அது வடக்கு கிழக்கு தழுவிய அடிப்படையில் தொடர்போராட்டங்களாக விரிந்தது.அவர்களது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப்பேரவைவரை கொண்டு செல்லப்பட்டது.அதை தாங்களே கொண்டு சென்று ஐநாவின் சபையில் பேசும் அளவில் தங்கள் உரிமைக்குரலை தமது முழுமையான குரலாக மாற்றிக்கொண்டனர்.நேரடியாக போரில் உயிர்கொடுத்தவர்களின் குடும்பங்களும் ரத்தம் சிந்தியவர்களின் குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் மண்ணிலேயே இருக்க அவர்களுக்காக பேசுவதாக கூறிக்கொண்டு ஜெனிவா சுற்றுலா சென்றுவந்து அரசுக்கு சார்பாக மாறிய தமிழ் முகவர்களை புறந்தள்ளி பாதிக்கப்பட்டவர்களே ஜெனிவா சென்று தங்கள் கண்ணீரை ஏக்கத்தை சாட்சியத்தை வாக்குமூலத்தை பதிவாக்கும் நிலைமை மாற்றமடைந்தது.இத்தகையதொரு வீரியமான தன்னெழுச்சி போராட்ட முனைப்பு ஒரு புறத்தில் சிறீலங்கா அரசுக்கும் இன்னொரு புறத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து வாக்கு தேர்தல் அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் சங்கடமாக மாறியது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பாதிக்கபட்ட மக்களுக்கு எதிராகவே புலம்ப ஆரம்பித்தார்கள்.அதாவது கால அவகாசம் என்பதற்கு கண்காணிப்பு என பெயர்வைத்தார்கள்.அதை பாதிக்கபட்ட மக்கள் எதிர்த்தார்கள்.ஓஎம்பி தேவை என சொன்னார்கள்.பாதிக்கப்பட்ட மக்களோ ஓஎம்பி தேவை இல்லை என்றார்கள்.இறுதியாக சர்வதேச விசாரணை கொண்டுவரமுடியுமா சீனா விடுமா ரஸ்யாவிடுமா என்றார்கள் ஆனால் பாதிக்கபட்ட மக்களோ சர்வதேச விசாரணையே முடிவாக தேவை என்றார்கள்.இப்பொழுது ஓஎம்பி தேவை இல்லை சர்வதேச விசாரணை வேண்டும் சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என மக்களின் தன்னெழுச்சி குரலாக ஓங்கி கடந்த 25ம் நாள் கிளிநொச்சியில் ஒலித்தது அடுத்து வரும் 16ம் நாள் யாழ்ப்பாணத்திலும் வரும் 19ம் நாள் மட்டக்களப்பிலும் மக்களின் பெருங்குரல்கள் ஒலிக்கும் நிலை வந்திற்று.அது பாதிக்கபட்ட ஈழத்தமிழர்களின் பெருங்குரல்கள்.இந்த நிலையில்தான் சிறீலங்கா அரசாங்கத்தால் சூரியனை மறைக்க ஒரு அற்ப பதராக வேடிக்கைக்குரிய மனிதராக வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் களமிறக்கப்பட்டார்.அவரை தமிழர் என்பதால் அவரிடம் மகஜர் கொடுத்தோம் என்கிறார்கள் சிலர்.தமிழர் என்பது தமிழ் பேசுவதாலும் தமிழ் தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்துவிடுவதால் மட்டும் வந்துவிடாது தமிழர் என்பது தமிழர் வரலாற்று வேரடியில் இருந்து அதன் வரலாற்று கொடிப்படர்வை அர்ப்பணிப்பை உணர்வதன் வெளிப்பாடு.ஆகவே சுரேன்ராகவனின் கதையை இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.
இப்பொழுது இன்னொரு முக்கிய விடயத்திற்கு வருவோம்.பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைப்பாட்டை மிகத்தெளிவாக சொல்லியுள்ளார்கள்.பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக தாயகத்தில் இருந்து ஜெனிவாவில் முகாமிட்டுள்ளார்கள்.பாதிக்கபட்டு மக்களின் குரலை பிரதிபலிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஜெனிவாவில் நிற்கின்றார்கள்.இந்த நிலையில் தாயகத்தில் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் எதைப்பேசுவதற்கு ஜெனிவா செல்கின்றார்கள்.கடந்த 2015ம் ஆண்டு பாதிக்கபட்ட மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு வந்து அரசாங்கத்தோடு சேர்ந்துகொண்டு கம்பரெலிய பெயர்பலகையிலும் முகத்தைக்காட்டிக்கொண்டும் அரசாங்கத்தோடு சேர்ந்து கல்வெட்டுக்களில் பெயர்பொறித்து திரைச்சீலை இழுத்துக்கொண்டும் அடிக்கல் நாட்டிக்கொண்டும் இருந்த அரசியல்வாதிகள் ஜெனிவாவில் யார் சார்பாக பேசப்போகின்றார்கள்.அவர்ளிடம் பேச என்ன இருக்கின்றது.போரின் நேரடிப்பாதிப்பு அனுபவமற்ற இவர்கள் அங்கு என்ன பேசமுடியும்.

இதில் இன்னொரு வேடிக்கை வினோதமுண்டு கடந்த 2015ம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கொடுக்க ஓத்துழைத்து மகிழ்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த புளொட் ரெலா என்பன கால அவகாசம் வழங்கவேண்டாம் என்று ஆனந்த சங்கரி விக்னேஸ்வரன் பிரேமசந்திரன் ஆகியோரோடு சேர்ந்து தமிழரசு கட்சியின் நிலைப்பாடான கண்காணிப்பு என்பது பிழை என்று சொல்லவருகின்றன.இப்பொழுது இந்த கட்டுரை ஆசிரியருக்கு தலை சுற்றுகின்றது.கொஞ்சம் குளிர்ந்த நீர் குடித்துக்கொள்கின்றேன்.இப்பொழுது கால அவகாசம் வேண்டாம் என சொல்லி தமிழரசு கட்சியை துடக்குப்போல தள்ளிவைத்துள்ள புளொட் ரெலோ என்பனவற்றுக்கு தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் நிரந்தர கொள்கையுண்டா என்பது முதலாவது கேள்வி.இரண்டாவது தற்பொழுது தமிழரசு கட்சியின் நிலைப்பாடு பிழை என்பதுபோல் தள்ளி இருந்துவிட்டு தமது தேர்தலுக்கான இருப்பை தக்கவைத்துக்கொண்டு பிறகு தேர்தல் வரும்போது மக்களின் பிரதான நோயான மறதியில் இருக்கும்போது தமிழரசு கட்சியோடு ஒட்டிக்கொண்டு தேர்தல் மேடையில் ஒன்றாக அமர்கின்ற சந்தர்ப்பவாத கூட்டா இது.ஆனந்த சங்கரியை என்ன சொல்ல கடந்த ஒக்ரோபர் மாதம் திடீரென்று மகிந்த பிரதமராக கண்ணை மூடிக்கொண்டு ஓடிப்போய் இனப்படுகொலை குற்றவாளியான மகிந்தவுக்கு கைகுலுக்கி வந்தார். இப்பொழுது கால அவகாசம் வேண்டாம் என்கிறார்.சரி ஜெனிவாவில் பேசுப்போவதாக புறப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிகள் ஜெனிவாவுக்கு எப்பொழுது வரவேண்டும்.ஜெனிவாவில் சிறீலங்கா தொடர்பில் அறிக்கை தயாரிக்கும் முன் அதன் பூர்வாங்க வேலைகள் நடைபெறுகின்ற முதல் வாரத்தில் வரவேண்டும்.ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எப்பொழுது வந்துள்ளார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள் ஐநாவின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவடையப்போகின்ற கடைசிவாரத்தில் முடிவாக மனித உரிமை ஆணையாளரால் அறிக்கை வெளியிடப்பட இருக்கின்ற இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஜெனிவாவுக்கு கோடை கால விடுமுறைக்கு வந்திருப்பது போல எந்தவித பதட்;டமும் இன்றி வற்துள்ளார்கள்.ஆகவே நிலத்தில் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கும் ஒரு உத்தியாகவும் தாமும் ஜெனிவா சென்றோம் என்ற ஒரு மாயையை நிலத்தில் இருக்கின்ற அப்பாவி மக்களுக்கு தோற்றுவிக்கவுமே தவிர ஐநா அறிக்கையில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த அல்ல நிகழ்த்தவும் முடியாது.யாரோ ஒரு சித்தர் சொன்னது போல எல்லாம் முடிந்த காரியம்.அதாவது 2015ல் சிறீலங்கா அரசாங்கத்தோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு கால அவகாசம் வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு இழைத்த இனத்துரோகத்தின் விளைவை தமிழர்கள் தொடர் கால அவகாசமாக தமிழர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.அதாவது தமிழர்களின் தாமதிக்கப்படுகின்றது.தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமன்.அதற்கு அத்திபாரமிட்டவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் சில புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும்.

ஒரு விடயத்தை முடிவாக சொல்லலாம்.சிறீலங்காவில் ஆளாளுக்கு ஜெனிவாவை அரசியல்வாதிகள் கையிலெடுத்துள்ளார்கள்.மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் எதிராக ரணில். ரணிலுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைக்கும் எதிராக மைத்திரி மகிந்த சுரேன்ராகவன். ரணில் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு. மைத்திரி சார்பாக சுரேன்ராகவன் சம்மந்தருக்கு எதிராக ஆனந்த சங்கரி ஜெனிவாவை கையிலெடுத்துள்ளார்கள்.நிச்சயம் தலைசுற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெனிவாவை கைலெடுத்திருப்பவர்கள் சில அரசியல்வாதிகள் பாதிக்கபட்ட மக்கள் எந்தவித அரசியல் எதிர்பார்ப்பும் அற்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுதலையை மட்டும் விரும்பும் தமிழ் சமுகம்.

SHARE